Saturday, February 20, 2021

அலோபதி- - ஆயுஷ் இணைப்பா?

அலோபதி- - ஆயுஷ் இணைப்பா?

Added : பிப் 19, 2021 23:08

சென்னை:அலோபதி -- ஆயுஷ் மருத்துவ முறைகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, டாக்டர்கள், மனு அளிக்கும் போராட்டத்தை துவக்கிஉள்ளனர்.

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறைகள் மற்றும் அலோபதி மருத்துவம் ஆகியவற்றை ஒன்றாக இணைப்பது மற்றும் ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு, நாடு முழுதும், அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த அறிவிப்பை, ரத்து செய்ய வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களில் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இம்மாதம், 1ம் தேதி முதல், 14 வரை, தமிழகத்தில் எட்டு இடங்கள் உட்பட, நாடு முழுதும், 50 இடங்களில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் கூறியதாவது:பல கட்ட போராட்டங்கள் நடந்தும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

அடுத்தகட்டமாக, கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு பெருந்திரள் மனு அனுப்பும் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, சங்க கிளை டாக்டர்களிடம் மனுக்களை பெற்று, பிரதமருக்கு அனுப்பப்படுகிறது. அடுத்தகட்டமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024