Saturday, February 6, 2021

69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்

69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்


தமிழக அரசு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவிகள் சஞ்சனா, அகிலா அன்னபூர்ணி இவர்களுடன் சென்னையைச் சேர்ந்த காயத்ரி உள்ளிட்டோர் சார்பில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அறிவிக்க வேண்டும், ஏனெனில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இட ஒதுக்கீடு 50% மேலாக இருக்கக்கூடாது.

ஆனால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது, இதனால் தகுதியுள்ள பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த இட ஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கோடு இணைத்து அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க வேண்டும்”. எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூசன் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்ததோடு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், “சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது, சாதிவாரி கணக்கீட்டின் அடிப்படையில் தான் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மேலும் தமிழகத்தின் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய இட ஒதுக்கீட்டுக்கு அது கிடையாது. எனவே மராட்டிய இடஒதுக்கீட்டுக்கும் , தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

அதனால் மராட்டிய இட ஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்கக்கூடாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”. என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024