தந்தை பிரிந்து சென்றுவிட்டதால் தாய் பெயரை முதல் எழுத்தாக பயன்படுத்த மகளுக்கு அனுமதி: 30 நாளில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை 27.10.2021
தந்தை பிரிந்த நிலையில் தாயாரின் பெயரை மகளுக்கு முதல் எழுத்தாகப் பயன்படுத்த அனுமதி கோரிய மனு மீது 30 நாளில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த போதும்பொண்ணு உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மகள் காவ்யா, கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கிறார். கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். நானும், மகளும் எனது தந்தையின் பராமரிப்பில் இருக்கிறோம். மகளை பள்ளியில் சேர்த்தபோது எனதுபெயரின் முதல் எழுத்தை (இன்ஷியலாக) அவளது பெயருக்கு முன்னால் பதிவு செய்தேன். ஆதார் அட்டையிலும் எனது பெயரின் முதல் எழுத்தையே மகளின் பெயருக்கு முன் குறிப்பிட்டுள்ளேன்.
இருப்பினும் எனது பெயரின் முதல் எழுத்தை ஏற்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வின்போது பிரச்சினை வரும் என்றும், அதனால் தந்தை பெயரின் முதல் எழுத்தைக் குறிப்பிடுமாறு பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது. எனவே, எனது பெயரின் முதல் எழுத்தையை மகளின் பெயருக்கு முன் பயன்படுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரரின் மனுவை 30 நாளில் பரிசீலித்து பள்ளிக்கல்வி இயக்குநர், கரூர் மாவட்ட ஆட்சியர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment