மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
Added : அக் 27, 2021 00:23
சென்னை:மருத்துவர்களுக்கு எதிரான புகார்களை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிவை அறிவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சில நாட்களில் இறந்தார். அவரது உடல் நிலை குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் சரியான பதில் அனுப்புவதை, சிகிச்சை அளித்த டாக்டர் பாசுமணி உறுதி செய்யவில்லை என்பதால், மருத்துவ பதிவேட்டில் இருந்து, அவரது பெயரை ஆறு மாதங்களுக்கு நீக்கி மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பாசுமணி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ கண்காணிப்பாளர் அளித்த தகவலை மனுதாரருக்கு வழங்கவில்லை. சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய, மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கண்காணிப்பாளர் அளித்த பதில் மனுதாரருக்கு தெரியாது; இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் அளித்த தண்டனை நியாயமற்றது; அது, ரத்து செய்யப்படுகிறது.
மருத்துவர்களுக்கு எதிரான புகார்களை திறமையாக கையாள, சில வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், மருத்துவ போர்டுக்கு எதிராக தேவையற்ற குற்றச் சாட்டுக்கள் தவிர்க்கப்படும்.மருத்துவர்களுக்கு எதிரான புகார் வந்தால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கம் பெற்ற பின் அதை பரிசீலித்து, நிபுணர்கள் குழு விசாரணை நடத்த வேண்டும்.
குழுவில் மூன்று உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். குழு வின் விசாரணைக்கு பின் விரிவான அறிக்கையை, மாநில மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும். அறிக்கையில் முடிவை தெரிவிக்க வேண்டும்.தவறு செய்ததாக முடிவுக்கு வந்தால், தண்டனை பற்றி முடிவெடுத்து, அதுகுறித்து தவறு செய்த மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அவரிடம் குறிப்புகள் பெற்று தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால், ஒட்டு மொத்தமாக ஆறு மாதங்களுக்குள் அதை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment