'நீட்' கலந்தாய்வு தாமதத்துக்கு கண்டனம் டாக்டர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Added : நவ 26, 2021 22:17
புதுடில்லி:முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான வரு வாய் உச்ச வரம்பு, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'எந்த அடிப்படையில் இந்த உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், விக்ரம் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:வருவாய் உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
இது டாக்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகளை விரைவாக நடத்தி முடிக்கும்படி மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திடம், இந்திய டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து இந்திய டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா தொற்று பரவல் துவங்கியதில் இருந்து டாக்டர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளனர். இது அவர்களை உடல் மற்றும் மன அளவில் ஏற்கனவே சோர்வுஅடைய செய்து உள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள், உயர் படிப்பில் சேர காத்திருக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.இதற்கு தீர்வு கிடைக்கும் வரை நாடு முழுதும் உள்ள புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment