Friday, June 23, 2023

வாக்குறுதிகளில் கவனம் தேவை

வாக்குறுதிகளில் கவனம் தேவை

DINAMANI 

முன்னோர் அடிக்கடி பயன்படுத்திய ஒரு சொலவடை"அரைக்காசு உத்தியோகமானாலும் அரண்மனை உத்தியோகம்' என்பதாகும்.
இதற்கு முக்கியமான காரணம், அரசு ஊழியர் ஒருவரின் மாத ஊதியம் மாதத்தின் முதல் நாளிலேயே வழங்கப்பட்டுவிடுவதுதான். தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் அந்தந்த மாதத்தின் இறுதி வேலைநாளிலேயே அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அவருடைய ஊதியம் வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அந்த ஊழியர்களை நம்பியிருக்கும் குடும்பங்களுக்கான வரவு செலவுகளை திட்டமிடுவதிலும் அத்திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்துள்ளது. அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியமும் இவ்வாறே சரியான நேரத்தில் வழங்கப்பட்டதன் மூலம் அம்மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.

தற்பொழுது இந்த நிலைமை மாறிக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. வட இந்தியாவில் உள்ள ஹிமாசல பிரதேசத்தின் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த பதினையாயிரம் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடந்த மாத (மே) ஊதியம் இம்மாதம் பதினான்காம் தேதி வரை வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. கரோனா தீநுண்மிப் பரவல் சமயத்தில் அம்மாநில ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் இன்றுவரை சரிசெய்யப்படவில்லை என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். விரைவில் அனைவருக்கும் மே மாத ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாநில அரசின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனால், அரசு ஊழியர்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாகுறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் மாநில அரசிடம் இல்லை என்பதே உண்மை.

ஏற்கெனவே எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கும் அம்மாநிலம் தற்பொழுது ஆயிரம் கோடி ரூபாயை ஓவர் டிராஃப்ட் ஆகப் பெற்றுள்ளது எனவும், மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் கிடைத்தால்தான் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மே மாத ஊதியத்தை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர அம்மாநில அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், பொதுப்பணித் துறை பணிகளுக்கான செலவினங்கள் என்று மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அம்மாநில ஆளும் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டு ஒன்றுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கிடையில், நமது மத்திய - மாநில அரசுகளின் கடன் வாங்கும் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் ஐந்து சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இக்காரணத்தால் ஹிமாசல பிரதேச அரசினால் போதிய கடனைத் திரட்ட முடியாத நிலைமை உள்ளது. ஹிமாசல பிரதேசம் காட்டிய வழியில் பயணிக்க மேலும் சில மாநிலங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் முந்நூறு யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள பஞ்சாப் மாநில அரசுக்கு அவற்றை நிறைவேற்ற சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. நமது அண்டை மாநிலமான கர்நாடகம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், குடும்பம் ஒன்றுக்கு இருநூறு யூனிட் இலவச மின்சாரம், வீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலையைக் குறைத்தல் போன்ற பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

அவற்றை நிறைவேற்றத் தேவைப்படும் தொகை அறுபதாயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது. தமிழகத்திலும் காலங்காலமாக பல்வேறு இலவச வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அவற்றை நிறைவேற்ற கோடிக்கணக்கில் பணம் செலவிடப் பட்டும் வருகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி போன்றவற்றை ஈடுகட்டுவதற்கான மானியத்தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இருந்தாலும், புலிவாலைப் பிடித்த கதையாக இச்சலுகைகள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. ஹிமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கான ஊதியம் தாமதப்படுவது என்பது எல்லை மீறிய வாக்குறுதி அரசியலால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றே. இத்தகைய போக்கு நீண்ட கால நோக்கில் நமது மாநில நிர்வாகங்களை மீளாக்கடனில் மூழ்கடித்துவிடும். இந்நிலையில், எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், அந்நிதி ஆதார எல்லைக்குள் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்துத் தேர்தலை எதிர்கொள்ளவும் நமது அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டுப் பிறகு திணறுவதைக் காட்டிலும், தகுதியுள்ள ஏழைகள், நடுத்தர நிலையிலுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் உரிய சலுகைகளை வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களின் பொருளாதார சுயசார்புக்கு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Dailyhunt

 

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...