தமிழகத்தில் ஒரே நாளில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்! வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
By Vigneshkumar Published: Friday, October 4, 2024, 0:37 [IST]
சென்னை: தமிழ்நாட்டில் பல மருத்துவக் கல்லூரிகளில் டீன்கள் பதவி காலியாக இருப்பதாகவும் இதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கல்வியாளர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு இப்போது அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் அதிகபட்ச அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.இது தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடியும்.
கல்லூரி டீன்கள்: இருப்பினும், கடந்த சில காலமாகவே இதில் 14 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் இல்லாமல் இருந்தன. சென்னை, செங்கல்பட்டு, மதுரை எனப் பல மருத்துவக் கல்லூரிகள் டீன்கள் இல்லாமலேயே செயல்பட்டு வந்தன. இதைக் கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி விரைந்து டீன்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாகச் சமீபத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்ட போதும் மிக விரைவில் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார். இதற்கிடையே இப்போது 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு: அதன்படி
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வராக லியோ டேவிட்,
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராக சிவசங்கர்,
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ்குமார்,
திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவி,
குமரி மருத்துவக்கல்லூரி முதல்வராக ராம லட்சுமி,
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பவானி,
ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி முதல்வராக அமுதா ராணி,
கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி,
விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங்,
சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிரப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி,
தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா நியமனம் செய்யப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-govt-has-appointed-deans-for-14-medical-colleges-643639.html
No comments:
Post a Comment