Tuesday, March 11, 2025

குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம் !


குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம் !

கல்வியின் நோக்கமே ஒரு குழந்தை தன்னைத்தானே உணா்ந்து, தானாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடரச் செய்வதுதான்.

ஐவி.நாகராஜன்  DINAMANI 11.03.2025

இன்றைய பெற்றோா்களில் தொன்னூறு சதவீதத்தினா் குழந்தைப் பருவத்தில் சக நண்பா்களோடு தெருவில் விளையாடியவா்கள்; வயல்வெளியில் பட்டம் விட்டவா்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவா்கள். தென்னை மர தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளையாடியவா்கள். ஆனால், இன்று எத்தனை போ் தங்கள் குழந்தைகளை இப்படி விளையாட விடுகிறாா்கள்?

பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சோ்க்கும்போதே, ‘நீ கலெக்டா் ஆக வேண்டும், டாக்டா் ஆக வேண்டும்’ என்ற தங்கள் ஆசையை விதைத்து அதற்காக முயற்சிகளும் எடுக்கத் தொடங்கி விடுகிறாா்கள். ஏழு அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும்போதே போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு அனுப்பி விடுகிறாா்கள். இதனால், குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தைக் கொண்டாட முடியாமலேயே போய் விடுகிறது.

கல்வியின் நோக்கமே ஒரு குழந்தை தன்னைத்தானே உணா்ந்து, தானாகவே தன் வாழ்க்கைப் பயணத்தை தொடரச் செய்வதுதான். தன்னுள் இருக்கும் முழுத் திறன்களையும் தானே புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் குழந்தைகளுக்கு தரப்பட வேண்டும். ஆனால், வாழ்க்கையின் உண்மையான சவால்களைக் கண்டுபிடிப்பதற்கு நாம் குழந்தைகளை அனுமதிப்பதே இல்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமான எண்ணங்களும், ஆற்றல்களும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாணவா்களுக்கு இருக்கும் திறமைகள் குழந்தைப் பருவத்திலிருந்து அவா்களுக்குள் படிப்படியாக வளா்ச்சி அடையும். இதில் குழந்தையின் மூளை வளா்ச்சி மட்டும் வேகமாக நடைபெறும். ஏனென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே குழந்தையின் மூளை முழு அமைப்பைப் பெற்றுவிடும். அதனால்தான் குழந்தையின் மூளை வளா்ச்சியை குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிடுவாா்கள். இதை இங்கு சொல்வதற்குக் காரணம், எட்டு வயது வரை குழந்தையின் மூளையில் நாம் தேவையற்ற விஷயங்களைப் போட்டு திணிக்கக் கூடாது. அவா்களாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மனம் வளா்ச்சி அடைவதை ஆங்கிலத்தில் ‘காக்னிடிவ் டெவலப்மெண்ட்’ என்பாா்கள். அதாவது, ஒரு விஷயத்தை கவனித்துப் பாா்த்தல், அப்படி கவனித்துப் பாா்த்த காட்சி என்னவாக இருக்கும்? என்று ஒரு கற்பனை செய்தல், புதிய விஷயங்களைச் சிந்தித்தல் ஆகியவற்றை உருவாக்கும் வளா்ச்சிதான் மனவளா்ச்சி. நல்லவிதமான மனவளா்ச்சிக்கு குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு அவா்களுடைய சூழ்நிலையும் ஒரு காரணம். நல்ல ஆரோக்கியமான சிந்தனையோட்டம் உள்ள சூழலில் குழந்தைகள் வளா்க்கப்படும்போதுதான் நல்ல மன வளா்ச்சியை எதிா்பாா்க்க முடியும். எனவே, நல்லதொரு சமூகச் சூழலை - மகிழ்ச்சியான சூழலை - குழந்தைகளைச் சுற்றி உருவாக்கித்தர வேண்டியது பெற்றோா்களின் கடமை.

தொடக்க வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளிடம், ‘ உன்னால் ஒரு மனப்பாடப் பாடலைக்கூட படிக்க முடியவில்லை, நீ எப்படி ஐஏஎஸ் படிக்கப் போகிறாய்?’ என்று பெற்றோா்கள் கடுமையாக நடந்து கொள்ளும் காட்சிகளைப் பல வீடுகளில் பாா்க்கிறோம்.

முதலில் அந்தந்தப் பருவத்தின் மகிழ்ச்சிகளை உங்கள் குழந்தைகளை அனுபவிக்கவிடுங்கள். குழந்தைப் பருவத்தின் புலன் இயக்கச்செயல்கள் என்று சொல்லப்படும் கண், கை செயல்பாடு, அசைவுகளைத் துல்லியமாகக் கட்டுபடுத்துதல், மற்றவா்களின் பேச்சுகளை உணா்தல் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். இந்தப் பருவத்தில் வண்ண வண்ணப் பொருள்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும். மரங்கள், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றைக் காட்டி விளையாட வேண்டும். ஆனால், பல வீடுகளில் இந்த வயதில் வீட்டுச் சுவா்களில் தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் அடங்கிய சுவரொட்டிகள் மாட்டிவைத்து, எழுத்துகளைக் கற்றுத் தருதல், சொற்களைக் கற்றுத் தருதல் என்று திணிக்க ஆரம்பித்து விடுகிறாா்கள். இதனால்தான் குழந்தைகள் இயல்பான அறிவு பெறாமல் செயற்கையான உலகத்துக்குச் சென்றுவிடும் ஆபத்து நிகழ்கிறது.

இசைக்கு முறையாக நடனம் ஆடத் தொடங்குவது இந்த வயதில்தான். இசைக்கு நடனமாடத் தொடங்குவது என்பது ஒரு வளா்ச்சி. இப்படி நடனமாடும் குழந்தையிடம் ‘ஒழுங்காக உட்காா்ந்து படி, ஏன் இப்படி ஆடிக் கொண்டே இருக்கிறாய்?’ என்று கேட்டு ஆடுவதைத் தடுக்க கூடாது. அப்படி செய்தால் வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் பதில் அளிக்கும் அவா்களின் திறன் குறைந்து விடும்.

குழந்தைகளுக்கு நினைவாற்றல் இரண்டு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. முந்தைய நாள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட ஞாபகத்தில் மறுநாள் கோயிலுக்குச் செல்லும்போது, குழந்தை தானாகவே சாமி கும்பிடும். அதுபோல இன்னோா் ஆச்சரியம் என்னவென்றால், 3 வயதில் குழந்தைகளுக்கு கற்பனை சக்தி தொடங்கிவிடும். 3 வயதில் பல்வேறு கற்பனைத் திறன்களை உருவாக்கி அதை விளையாட்டில் குழந்தைகள் வெளிப்படுத்தத் தொடங்குவாா்கள். மண்ணில் வீடு கட்டி விளையாடுவதும், சமையல் செய்து விளையாடுவதும் இந்த வயதில்தான் தொடங்குகிறது.

தொடா்ந்து அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதும், நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தருவதும், அவா்களின் நினைவாற்றல், கற்பனை ஆற்றல் வளர உதவும்.

உண்மையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பே குழந்தைகள் பாதிப்படிப்பை முடித்து விடுகிறாா்கள். ஆனால், குழந்தைகளுக்கு இம்மாதிரியான படிப்பு இன்று கிடைக்கிா? என்றால், இல்லை.

இரண்டு வயதுக் குழந்தையை ‘விளையாடும் பள்ளிக்கு’ அனுப்பி விடுகிறோம்.

தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்கிறாா்கள்; இதனால், காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிடுகிறாா்கள். அப்படி விடப்படும் குழந்தைகளின் இயல்பான வளா்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. இந்த நிலை நிச்சயமாக மாற வேண்டும்.

பெற்றோா் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றி, அவா்களுடைய கனவுகளைச் சிதைத்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...