தாம்பரம்: நகராட்சிகளிலேயே முதல் முறையாக, தாம்பரத்தில், பூமிக்கு அடியில் புதைக்கப்படும் முன்மாதிரி குப்பை தொட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. பகுதிவாசிகள் மத்தியில், இந்த திட்டம் வரவேற்பு பெற்றுள்ளதால், அதிக தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், குப்பை பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வந்தாலும், பகுதிவாசிகளின் ஒத்துழைப்பு இன்றி தோல்வியில் முடிகிறது.சோதனை முயற்சி
ஒவ்வொரு உள்ளாட்சி பகுதியிலும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை, தரம்வாரியாக பிரித்துக் கொடுப்பதில் பகுதிவாசிகளின் அலட்சியம்; திறந்தவெளியில் தொட்டி இருந்தும், கண்ட இடங்களில் துாக்கி வீசுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்கும் நோக்கில், வெளிநாடுகளில் உள்ளதை போன்று, பூமிக்கு அடியில் புதைக்கப்படும் நவீன குப்பை தொட்டிகளை, தமிழகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சோதனை முயற்சியாக, முதல் முறையாக, தாம்பரம் நகராட்சியில், ஐந்து இடங்களில் பூமிக்கடியில் புதைக்கும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.
தாம்பரம் தெருக்களில், வைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத, வீட்டு மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு வைக்கப்பட்டு உள்ள தொட்டிகள்.
கூடுதல் இடங்களில்...
வாரத்தில் இரண்டு நாட்கள், ஊழியர்கள் வந்து, தொட்டியில் உள்ள குப்பையை தனித்தனியாக சேகரித்து, கிடங்கிற்கு எடுத்து செல்வர். சோதனை முயற்சியான இந்த திட்டத்திற்கு, பகுதிவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும், குப்பையை தரம் பிரித்து, அந்த தொட்டிகளில் போடுவது, அத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதை காட்டுகிறது. இதனால், கூடுதல் இடங்களில், தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் கரிகாலன் கூறியதாவது:
4 மாதங்களாக...
தமிழகத்தில் எந்த திட்டமாக இருந்தாலும், சோதனை முயற்சியாக தாம்பரத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், இந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதலாக 550 இடங்களில், இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 157 இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தொட்டியின் பயன்பாடு என்ன?
ந்த தொட்டிகள் மக்கும், மக்காத, வீட்டு உபயோக மருத்துவக் கழிவுகள் என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொட்டியும், ஐந்து அடி உயரமும், ஒன்றரை டன் கொள்ளளவும் கொண்டவை.இரண்டு அடி பூமிக்கு அடியிலும், மூன்று அடி வெளியில் இருக்குமாறும் புதைக்கப்பட்டிருக்கும். குப்பையை கொண்டு வருவோர் ஒவ்வொரு தொட்டியிலும், அதற்கேற்ற குப்பையை போட்டு விட்டு செல்லலாம். குப்பை தொட்டியை பகுதிவாசிகள் திறந்து கொட்டலாம். ஆனால், குப்பை போட்டு முடித்தவுடன், தானாகவே மூடிக்கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனால், சாலைகளில் குப்பை தேங்காது. துர்நாற்றம் வீசுவதற்கு வாய்ப்பில்லை. நாய், பன்றி கிளற முடியாது.
ஜெர்மனியில் இருந்து இறக்குமதி
நவீன குப்பை கலன் திட்டம், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுளில்தான் பரவலாக உள்ளது. அந்த நாடுகளில், குப்பை சேகரிக்கும் இத்திட்டம், சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு, தமிழக நகராட்சிகளில் முதல் முறையாக, சோதனை முறையில், தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக, ஜெர்மனியில் இருந்து நவீன குப்பை தொட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. மூன்று வகையாக குப்பையை பிரிக்கும் (ஒரு செட்) தொட்டிகளின் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய்.