Thursday, December 4, 2014

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்தவர்கள் மீது மார்ச் 31–ந் தேதிக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியர்களின் கருப்பு பணம்

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அவர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மூத்த வக்கீலான ராம்ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்திருந்தது.

தப்பிக்க வாய்ப்புள்ளது

அதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோகியா உள்பட 627 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரரான ராம்ஜெத்மலானி வருகிற மார்ச் மாதத்திற்குள் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்காவிட்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

மார்ச்சுக்குள் நடவடிக்கை

இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோகத்கி, அரசாங்கத்திடம் இந்த விஷயம் குறித்து அனைத்து தகவல்களும் இருக்கிறது என்றும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,

இதற்கு நீதிபதிகள் உரிய காலத்துக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து முடிக்கவில்லை என்றால் அரசாங்கம் இதுகுறித்து சட்டரீதியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் அல்லது அந்த நடவடிக்கையை எடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

துயரமான அம்சம்

ராம்ஜெத்மலானி, சிறப்பு புலனாய்வுக்குழுவில் பங்கேற்கும் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் இந்த விசாரணையில் ஆஜரானது விசாரணை நடைமுறைக்கு எதிரானது என தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சிறப்பு புலனாய்வுக்குழு தான் விசாரணையில் ஆஜராவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் ஆஜராகி உள்ளதாகவும் கூறினார்.

விசாரணையின் இறுதியில் வக்கீல் ராம்ஜெத்மலானி, தான் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு உதவி செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிரான அணியில் இப்போது உட்கார்ந்திருப்பதாகவும் அதுதான் இந்த அரசாங்கத்தின் துயரமான அம்சம் என்றும் கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜனவரி 20–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024