இதேபோல பல சம்பவங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொரு சம்பவத்திலும் ஏற்பட்ட தவறை உணர்ந்து, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அண்மையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காரணமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சரே வக்காலத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல்வேறு புள்ளி விவரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தப் புள்ளி விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எத்தனைக் குழந்தைகளின் உயிர் மோசமான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அமைச்சரோ, துறைச் செயலரோ அல்லது மருத்துவர்களோ சொல்லவில்லையே.
அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பத்திரிகைச் செய்தி வெளியிட்ட மருத்துவர் சங்கத்தினர் கூட எத்தனை குழந்தைகள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்லவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்குச் சிறு வயதில் திருமணம் என்பதும் பெண் குழந்தைகளென்று தெரிந்தால் கர்ப்பத்திலேயே கொல்லப்படுவதும் மிகவும் சாதாரணமாக நடந்த, நடந்து கொண்டிருந்த சம்பவங்கள்தான். இப்போதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கிராமங்கள் அதிகம் உள்ளன. படிப்பறிவு குறைந்த மக்கள் அதிகம்.
தமிழக அரசு இந்த மக்களுக்கும் சேர்த்துத்தான் கிராம சுகாதார செவிலியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது.
கர்ப்பம் தரித்த நாள் முதல் அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவரிடம் செல்ல வேண்டிய நாள் ஆகியவற்றை கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும்.
கர்ப்பம் தரித்திருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ உடல் நிலை மோசமாக இருந்திருந்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கோ அழைத்துச் சென்றிருக்கலாம்.
ஆனால், அவ்வாறெல்லாம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. மேலும், தேவைப்பட்டால் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அப் பெண்களுக்கும் உதவியிருக்க முடியும்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தனி வார்டு உள்ளது. இதில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்தான் உயிரிழந்துள்ளன.
தருமபுரியை விட முன்னேறிய சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
பொதுவாக எந்த அரசு மருத்துவமனையென்றாலும் ஏழை, எளிய மக்கள்தான் சிச்சைக்காக வருகின்றனர்.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அதற்கெனத் தனியாக செவிலியர்களுக்குக் கப்பம் கட்டினால் மட்டுமே பெற்றவர்களுக்குத் தகவல் கிடைக்கும்.
அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்துகொண்டே தனியார் மருத்துவமனைகளில் ஆலோசகர்களாகப் பணிபுரியும் மருத்துவர்கள் ஏராளமானவர்கள்.
தனியார் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
தருமபுரி அரசு மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தையின் சிறுகுடலில் இருந்த ஓட்டைகளை அடைத்து அந்த உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
திறமை மிகுந்த மருத்துவர்களின் உதவியோடு குழந்தைகள் காப்பாற்றப்படுவதை மறுப்பதற்கில்லை. பின் எப்படி நிகழ்ந்தது இந்த குழந்தைகளின் மரணம்?
மருத்துவர்களையும் செவிலியர்களையும் காப்பாற்றுவதற்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதற்கும் வேண்டுமானால் வெற்றுப் புள்ளி விவரங்கள் பயன்படலாம்.
ஆனால், எதிர்காலத்தைக் கண்களில் சுமந்தபடி தாய்மைப் பேறடையும் பெண்களுக்கும் தங்களுக்கு வாரிசு கிடைக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் கணவனுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அது எவ்வளவு பெரிய பேரிழப்பு?
அரசு இந்த விஷயத்தில் யார் மீது தவறு எனக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாவதைத் தவிர்க்க இயலாது!
Source: Dinamani 4.12.2014
No comments:
Post a Comment