Wednesday, December 3, 2014

வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மானியம் ரத்து: ஜன., மாதம் தமிழகத்தில் அமலாக வாய்ப்பு?

சென்னை: காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' அட்டையை உடனடியாக பதிவு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஜன., மாதத்தில் ரத்து செய்யப்படும் என, தெரிகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, மானியத்துடன் கூடிய, வீட்டு சிலிண்டர், 404.50 ரூபாய்; மானியம் அல்லாதது, 749.50 ரூபாய்; வர்த்தக பயன்பாடு, 1,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், 'வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள், 'ஆதார்' அட்டை எண்; வங்கி கணக்கு எண்களை, தங்கள் காஸ் ஏஜன்சியிடம் பதிவு செய்ய வேண்டும். 'ஆதார்' அட்டை இல்லாதவர், வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். 'ஆதார்' இல்லாமல், வங்கி கணக்கு எண் தருபவர்கள், மூன்று மாதங்களில், 'ஆதார்' அட்டை பெற்று, அந்த எண்ணை, காஸ் ஏஜன்சிகளுக்கு தர வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் காஸ் ஏஜன்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் பதிவுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏஜன்சியிடம் வழங்க வேண்டும்.பின், ஏஜன்சி வழங்கும் விண்ணப்பத்தை, வங்கியில், கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, பதிவு செய்யப்பட்ட பின், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கிறது.பின், வாடிக்கையாளர்கள், சிலிண்டருக்கான முழு பணத்தை கொடுத்து, ஏஜன்சிகளிடம், சிலிண்டர் பெற வேண்டும். காஸ் ஏஜன்சிகள், வாடிக்கையாளரின், 'ஆதார்' அல்லது வங்கி கணக்கு எண் பதிவை, உடனடியாக துவக்கி, இம்மாதத்திற்குள் முடிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து, 'ஆதார்' எண் பதிவு செய்யும் பணியை, காஸ் ஏஜன்சிகள், நேற்று, முதல் துவக்கின. இதனால், வரும் ஜன., முதல், வீட்டு சிலிண்டருக்கான மானியத்தை, அரசு, ரத்து செய்து, வாடிக்கையாளர் வங்கி கணக்கில், வரவு வைக்க வாய்ப்புள்ளதாக, காஸ் ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024