Thursday, December 4, 2014

விலகாத அழிவின் நிழல்



டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.

*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.

*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார். அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.

*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.

*இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.

*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.

*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். கடந்த செப்.29 அன்று இறந்தார்.

*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024