சமையல் காஸ் நேரடி மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய தெரியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழங்கி வரும் மானிய தொகையை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த 2013ல் துவக்கியது.
காங்., ஆளும் மாநிலங்கள்:
இத்திட்டத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்., ஆளும் மாநிலங்களில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்தியில், புதிதாக அமைந்த பா.ஜ., அரசு, நேரடி மானிய திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த மாதம் 15ம் தேதி, 11 மாநிலங்களில் உள்ள, 54 மாவட்டங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடுத்த மாதம் முதல், நாடு முழுவதும், காஸ் சிலிண்டர் நேரடி மானியம் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள காஸ் ஏஜென்சிகளில், நேரடி மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.
* வாடிக்கையாளர், தங்களின் காஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.
* 'ஆதார்' அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; 'ஆதார்' அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
'ஆதார்' அட்டை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது:
* 'படிவம் - 1', 'படிவம் - 2' என, இரண்டு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
* 'படிவம் - 1'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகலுடன், வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கியில் வழங்க வேண்டும்.
* பின், 'படிவம் -2'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், காஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும்.
* வாடிக்கையாளர் முகவரியில் மாற்றம் இருந்தால், அதற்கான சான்றை அளிக்க வேண்டும்.
'ஆதார்' அட்டை இல்லதாவர்கள் பின்பற்ற வேண்டியவை:
'படிவம் - 3'ஐ, பூர்த்தி செய்து, காஸ் ரசீது நகலுடன், வங்கியில் வழங்க வேண்டும் அல்லது 'படிவம் - 4'ஐ, பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு எண் நகல், காஸ் ரசீது நகல் ஆகியவற்றை, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்க வேண்டும். அவ்வாறு, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், வரும் ஜனவரி முதல், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், காஸ் மானியம் வரவு வைக்கப்படும் என, தெரிகிறது.
763 ரூபாய்:
இதையடுத்து,பொது மக்கள், சந்தை விலையில், அதாவது, இம்மாத விலையான, 763 ரூபாய் கொடுத்து, சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், மானிய தொகை வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், சமை யல் காஸ் சிலிண்டர், நேரடி மானியம் வழங்கும் திட்டத்திற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மொத்த பணத்தையும் கொடுத்து, காஸ் வாங்க முடியாது. வங்கிக்கு சென்று பணம் எடுக்க, பல கட்டுப்பாடுகள் உள்ளதால், தற்போது உள்ளபடியே, குறைந்த விலையில் காஸ் வழங்க வேண்டும்.
மகேஷ்வரி, சேப்பாக்கம்
விண்ணப்பங்கள், ஆங்கிலத்தில் உள்ளதால், படிக்காதவர்களால், அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. நேரடி மானிய திட்டத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இந்த திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.
முனியம்மாள், ஐஸ் அவுஸ்
விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிக விலை கொடுத்து, காஸ் வாங்க முடியாது. நேரடி மானிய திட்டத்தின் மூலம், வங்கியில், எப்போது பணம் போடுவர் என, தெரியாது. இதனால், பழைய முறையே தொடர வேண்டும்.
சாந்தா, திருவல்லிக்கேணி
- நமது நிருபர் -
No comments:
Post a Comment