ஆகவே, ஓர் அறிவு உயிர்களான மரம் செடி கொடிகளோடு உரையாட வேண்டுமெனில் அவற்றைத் தொட்டுத்தான் பேச வேண்டும். மரங்களைத் தொட்டுத் தழுவி நோய் நீக்குவதை ஒரு சிகிச்சை முறையாகவே சித்த மருத்துவம் கூறுகிறது.
மேலை நாடுகளில் தொடு சிகிச்சை (ற்ர்ன்ஸ்ரீட் ற்ட்ங்ழ்ஹல்ஹ்) உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கான மருத்துவ முறையாக வளர்ந்துள்ளது. மியாமி பல்கலைக்கழகத்தில் தொடுகை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
கேட்கும் திறனும் கண் பார்வையும் பிறவியிலேயே இல்லாத ஹெலன் கெல்லர் தொட்டுத் தொட்டுத்தான் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தொட்டால் மலரும் பூக்களாக சொற்கள் இருந்திருக்கின்றன.
சின்னஞ்சிறு இலைகளை விரித்தபடி நிற்கும் செடி ஒன்று - நம் விரல்கள் தொட்டமாத்திரத்தில் அதன் இலைகள் மடங்கி மூடிக் கொள்கின்றன. இந்தச் செடிக்கு "தொட்டாற்சிணுங்கி' என்று பெயர் வைத்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.
தூரத்தில் தரையைத் தொடுவதுபோல் தோற்றம் தரும் தொடவே முடியாத வானத்தின் பெயர் "தொடுவானம்'! இதுவும் அழகான சொல்லாட்சிதானே?
நமது இரண்டு கன்னங்களையும் தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கும் அம்மாவின் தொடுகைக்கு இணையான ஆசீர்வாதத்தை எந்த மகானால் தந்துவிட முடியும்?
மகாபாரதத்தில் திருதிராட்டிரன் மனைவி காந்தாரி துரியோதனின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவினால் அவனை யாராலும் கொல்ல முடியாது. கண்ணிரண்டையும் கறுப்புத் துணியால் கட்டியிருக்கும் காந்தாரிக்கு மகன் இடுப்பின் கீழ் அணிந்திருந்த ஆடை தெரியவில்லை. அவளால் தொடமுடியாத அந்த தொடைப் பகுதியை கிருஷ்ணன் சைகை காட்ட பீமன் அடித்து வீழ்த்தியதாக கதை உண்டு. அன்னையின் தொடுகை எத்துணை ஆற்றல் மிக்கது என்பதை இது உணர்த்துகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைப்பதில் உதவிய அணிலின் கதை நாம் அறிந்ததுதான். இராமபிரான் அணிலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததுதான் அதன் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்று சொல்வது உண்டு.
அநுமன் கடலைத் தாண்டி இருக்கலாம். ஆனால் அன்பு தலைமுறைகளைத் தாண்டக் கூடியது என்பதே இக்கதையின் செய்தி.
கணவன் மீது கோபம் கொண்டபோது, "என்னைத் தொடக்கூடாது' என்று கட்டளையிட்டாள் திருநீலகண்டரின் மனைவி என்பது ஒரு கதை.
ஏழைத் தாய் குழந்தைக்குச் சோறூட்டுகிறாள். தொட்டுக் கொள்ள காக்கையும் குருவியும்! இதில் உள்ள கவித்துவச் சிந்தனை ஒருபுறமிருக்க சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள துணைக் கறியாக உள்ள பதார்த்தங்களை "தொட்டுக்கை' என்று குறிப்பிடும் சொல் மரபு உண்டு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பரும் சேர்ந்தே அலுவலகம் செல்வோம். தினமும் புறப்படும்போது உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் தோளைத் தொட்டு "போயிட்டு வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு வருவார். எவ்வளவு அவசரமானாலும் அப்பாவைத் தொடாமல் வரமாட்டார்.
அப்போது அந்த முதியவர் முகத்தில் பரவும் திருப்தியையும் ஆனந்தத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஒரு தொடுகைக்காக முதியவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோமா?
உடம்பெல்லாம் புண்ணும் சீழுமாய், சாலையோரம் விடப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்கள் உடம்பைத் துடைத்து பணிவிடை செய்து பாதுகாத்ததால் அன்னை தெரசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தி வணங்க வைத்தது வாட்டிகன்!
குழந்தைகள் நம்மைத் தொடும்போது ஏற்படும் பரவச உணர்வை "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் மெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் இல்லோர்க்கு பயக்குறைவில்லை தாம் வாழும் நாளே...' என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்கிறார் திருவள்ளுவர்.
குழந்தைகளை தாய்மார்கள் அடிக்கடி தொடுவதால் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் கூடுதலாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நோயாளிகளைத் தொட்டு உரையாடும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிதும் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
பாரதி கடவுளை கண்களால் காண மட்டும் விரும்பவில்லை. விரலால் தீண்டவும் விரும்பினான். அதனால்தான் "தீக்குள் விரலை வைத்தால், உனைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடினான்.
சிறுவயதில் வீடுகளில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் சுடருக்குள் விரல் நீட்டும் விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? அந்தச் சுடருக்குள் நுழையும் விரலை தீ செல்லமாகச் சுடும். அதுதான் கடவுள் என்று குதூகலித்து கைகொட்டிச் சிரிக்கிறான் பாரதி குழந்தை போலே!
அண்மையில் ஒரு பிரம்மாண்ட அணுவெடிப்புச் சோதனை முடிவில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டதாக (எர்க்ள் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்) விஞ்ஞானிகள் அறிவித்தபோது கடவுளை ஏறத்தாழ தொட்டுவிட்டதாகவே அறிவுலகம் பெருமைப்பட்டுக் கொண்டது.
வானத்தில் கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் விண்கல விரல்களால் பிரபஞ்சம் எங்கும் கடவுளைத் தேடித் துழாவ ஆரம்பித்து விட்டான் மனிதன். பாவம் அவன் படுத்திருப்பது கடவுளின் மடி என்று அறிந்தானில்லை.
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று ஆசைப்பட மைதாஸின் கதையை மறக்க முடியுமா? உண்ணும் உணவும் ஆசை மகளும் கூட தான் தொட்டதனால் பொன்னாகிப் போனதும்தான் அவனுக்குப் புத்தி வந்தது!
பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்திய ஆன்மிக குரு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகையில் தங்கத்தாலோ பிற உலோகங்களாலோ ஆன நாணயங்களையோ ஆபரணங்களையோ தொட்டாலே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அந்த ஆன்மிக குருதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!
விரல் என்பது மனதின் பெளதிக வடிவம். மனத்தின் நீட்சி. விரல் தொடும் முன்னதாகவே மனம் தொட்டு விடுகிறது. "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்கிறான் கம்பனின் ராமன்.
ஏதோ காரணத்தால் உறவினர் ஒருவருடன் பல வருடங்கள் பேசாமலே இருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஒருவித பகைமை உணர்வாகவே அது வளர்ந்துவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார்.
பிறகு ஏதோ சந்தர்ப்பத்தில் அந்த நண்பரின் கையைப் பிடித்து எப்படி இருக்கீங்க என்று நண்பர் கேட்ட மாத்திரத்தில் அவர் நெகிழ்ந்து விட்டாராம். கை தொட்ட ஒரு நொடியில் பகைமைச் சுவர் சுக்குநூறாகி இதயங்களை இணைத்துவிட்டது.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தமது அன்புக்குரியவர் தன்னைத் தொட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
தொடுங்கள். தழுவிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு உடலளவில் நெருங்கி இருங்கள். அங்கே புரிதல் இயல்பாகி விடும். வார்த்தைகளே தேவை இல்லாத வாத்சல்யம் உறவுகளுக்கு உயிர் தருகிறது.
பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் எதிர்பாலினத்தவர் ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாகத் தொடவே அஞ்சும் நிலைதான் உள்ளது.
அந்தக் காலத்து திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். காதலன் காதலியைத் தொடுவது அபூர்வமாகவே இருக்கும். அப்படித் தொட்டாலும் அதில் விரசம் இருக்காது.
"அப்பா என்னை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்' என்று என் மனைவி பரிதாபமாகச் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சமூக உணர்வுகளிலும் வேரோடி இருந்தது. அந்தக் காலத்தில் பொது இடங்களில் ஆண்கள் - கணவனாகவே இருந்தாலும் - தங்களைத் தொட்டுப் பேசுவதை பெண்கள் அனுமதிப்பது கிடையாது. அது ஒருவித பண்பாட்டுச் சீர்மை. படித்தவர்களைவிட பாமரர்களே இதனைத் தீவிரமாகப் பின்பற்றினர்.
ஆனால், இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கேரளாவிலும், தமிழக ஐ.ஐ.டி. வளாகத்திலும் "இளமைத் திருவிழா' என்ற பெயரில் அரங்கேற்றிய வக்கிரக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது அது விரசத்தின் உச்சமாக இருந்தது.
தொடுதலும், தழுவுதலும், முத்தமிடுதலும் பொது இடத்தில் இளமையின் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களில் ஒரு சாரார் முழக்கமிடுகின்றனர்.
தொடுதலின் வண்ணங்கள் திசைமாறுகின்றன.
மண்ணின் மணம் காப்போம்; மானத்தையும்தான்!
கட்டுரையாளர்: எழுத்தாளர். தஞ்சாவூர்க்கவிராயர்