திருப்பதியை அடுத்த ராயலசெருவு என்ற கிராமத்தில் பிறந்தவர் பீம்சிங். சிறு வயதிலேயே அவர் பெற்றோர்கள் சென்னையில் குடியேறினார்கள். சென்னை புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.
படிப்பை முடித்ததும், "ஆந்திரபிரபா" என்ற தெலுங்குப் பத்திரிகையில் சிறிது காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது, சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். "எடிட்டிங்" துறையில் பயிற்சி பெற்றார்.
கிருஷ்ணனின் சகோதரி சோனாபாயை பீம்சிங் மணந்தார். பீம்சிங்கின் தங்கையை கிருஷ்ணனின் தம்பி திருமலை திருமணம் செய்து கொண்டார். பிற்காலத்தில் பஞ்சுவின் மகள் சவுமித்ராவை பீம்சிங்கின் மூத்த மகன் நரேன் மணந்தார்.
அம்மையப்பன்
மு.கருணாநிதி வசனம் எழுதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்-ஜி.சகுந்தலா நடித்த "அம்மையப்பன்"தான் ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படம். 1954-ல் வெளிவந்த இப்படம், வெற்றி பெறவில்லை. இதற்குப்பிறகு, பீம்சிங் டைரக்ட் செய்த படம் "ராஜா ராணி." இதற்கும் கதை-வசனம் எழுதியவர் மு.கருணாநிதி.
சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்தனர். இதில் சிவாஜி நடித்த "சாக்ரடீஸ்", "சேரன் செங்குட்டுவன்" ஆகிய ஓரங்க நாடகங்கள் மிகச்சிறப்பாக அமைந்தபோதிலும், படம் வெற்றிகரமாக ஓடவில்லை. எனவே, பீம்சிங்குக்கு புதிய வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில் பீம்சிங், எம்.எஸ்.விசுவநாதன், கதாசிரியர் சோலைமலை, அப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஜி.என்.வேலுமணி ஆகிய நால்வரும் சேர்ந்து, 1958-ல் புத்தா பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, "பதிபக்தி" என்ற படத்தை தயாரித்தார்கள்.
சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, பீம்சிங்கின் அதிர்ஷ்ட சக்கரம் வேகமாகச் சுழன்றது. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று "ப" வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றன.
இந்திப் படங்கள்
இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் பீம்சிங் டைரக்ட் செய்தார். "களத்தூர் கண்ணம்மா"வை, ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் இந்தியில் எடுத்தனர். பீம்சிங் டைரக்ட் செய்தார். படம் வெற்றி பெற்றது. ஜி.என்.வேலுமணி தமிழில் தயாரித்த "பாகப்பிரிவினை" படத்தின் கதையை வாசுமேனன் வாங்கி, "கான்தான்" என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார்.
தமிழில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் சுனில்தத் நடித்தார். பீம்சிங் டைரக்ஷனில் உருவான இந்தப்படம், "சூப்பர் ஹிட்"டாக அமைந்தது. வட நாட்டில் 60 வாரம் ஓடி வசூலைக்குவித்தது. இந்தப்படத்தின் லாபத்தைக் கொண்டு பிலிம் சென்டர் ஸ்டூடியோவை வாசுமேனன் வாங்கி "வாசு ஸ்டூடியோ" என்ற பெயரில் நடத்தினார். (இதே காலக்கட்டத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த "ராஜ்குமார்" என்ற இந்திப் படம் தோல்வியைத் தழுவியது.)
படிக்காத மேதை, முரடன் முத்து ஆகிய படங்களும், பீம்சிங் டைரக்ஷனில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.
பழநி
பீம்சிங் சிவாஜிகணேசனை வைத்து, சொந்தமாக "பழநி" என்ற படத்தை எடுத்தார். அவருக்கு ராசியான "ப" எழுத்தில் பெயர் வைத்தும் படம் ஓடவில்லை. இதேபோல், "பாதுகாப்பு" என்ற படமும் வெற்றி பெறவில்லை. இத்துடன், "ப" வரிசைப் படங்களின் பவனி முடிவுற்றது.
சில நேரங்களில் சில மனிதர்கள்
பீம்சிங்கின் பிற்காலப் படங்களில் வெற்றிகரமாக ஓடியது "சில நேரங்களில் சில மனிதர்கள்". இது பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவல். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய சிறந்த நடிகைக்கான "ஊர்வசி" விருதை லட்சுமி பெற்றார்.
மாரடைப்பில் மரணம்
1977-ம் ஆண்டுக் கடைசியில் பீம்சிங் உடல் நலம் இல்லாமல் இருந்தார். டிசம்பர் 30-ந்தேதி மைலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 16-1-1978 அன்று பிற்பகல் 2-30 மணி அளவில் பீம்சிங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டைக்கு சென்றிருந்த சிவாஜி கணேசனுக்கு, டைரக்டர் பீம்சிங் மரணச் செய்தி, டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே சிவாஜிகணேசன் சென்னைக்கு விரைந்து வந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
நடிகைகள் பத்மினி, கே.ஆர்.விஜயா, லட்சுமி, சுமித்ரா, மனோரமா, ஜெயபாரதி, எம்.வி.ராஜம்மா, நடிகர்கள் நாகேஷ், சோ, டைரக்டர்கள் மாதவன், பஞ்சு, இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ், பட அதிபர்கள் ஜி.என்.வேலுமணி, பெருமாள், அரங்கண்ணல், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஐ.ஜி. ஆபீசுக்கு பின்புறம் உள்ள மயானத்தில் பீம்சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
குடும்பம்
பீம்சிங்குக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் சோனா பாய். இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள். இப்போது புகழ் பெற்ற எடிட்டராக விளங்கும் லெனின், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், பட அதிபர் பி.இருதயநாத், டெலிவிஷன் தொடர்களின் டைரக்டர் கோபி ஆகியோர் பீம்சிங்கின் மகன்கள்.
பீம்சிங்கின் இரண்டாவது மனைவி நடிகை சுகுமாரி. இவருக்கு ஒரே மகன். இவர் டாக்டர்.
No comments:
Post a Comment