நீதிபதிகள் நியமனம் ராணுவ வியூகமல்ல!
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன முறையானது, "கொலீஜியம்' எனப்படுகிற, நான்கைந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறு குழுவுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாக இருந்துவிடக் கூடாது.
நீதியை நிலைநாட்டுவதற்காகவும், பல சந்தர்ப்பங்களில் மக்களையும் தேசத்தையும் பாதிக்கும் பிரச்னைகள், விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொதுநலன் விவகாரங்களில் பொறுப்புடன் செயல்படுதல் கட்டாயம் என்பதால், நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
வெளிப்படைத்தன்மைதான் பொறுப்புடன் செயல்படுவதற்கான வழி. முடிவுகளை எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால், பொறுப்புடைமை என்பது இல்லாதாகிவிடும்.
நீதிபதிகள் நியமனத்துக்காக "கொலீஜியம்' முறை உருவானபோதும், நீதிபதிகள் நியமனம் தொடர்பான "3-ஆவது வழக்குக்குப்' பிறகு அது விரிவடைந்தபோதும், வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்.வெளிப்படைத்தன்மை என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கப்படும் முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மை மாறுதல் பெறும்.
பிறர் ஒதுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நபர் ஏன் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அல்லது சில தகுதிகள் இருந்தும் ஒரு நபர் நீதிபதிப் பதவிக்கு ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை- ஏன் நிராகரிக்கப்பட்டார் என்ற காரணங்கள் முக்கியமானவை.
உன்னத நிலையில் உள்ள சிறு குழுவில் இடம்பெறும் சில நபர்களின் மனதில் மட்டுமே அந்தக் காரணங்கள் தங்கிவிடக் கூடாது. எதிர்காலத்தில் அந்த விவரங்களை எடுத்துப் பார்க்கும் வண்ணம், கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டும்.நீதிபதி நியமனம் குறித்த அனைத்து விவரங்களையும் காரணங்களையும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்தின் கீழ், நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அல்லது மத்திய அமைச்சரவைதான் ஆலோசனை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.எனவே, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் தொடக்கத்திலிருந்து இறுதித் தேர்வு வரை நடக்கும் அனைத்து விஷயங்களையும் அதற்கான காரணங்களையும் இந்திய அரசு அறிந்திருக்க வேண்டும்.பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் உண்மையான அதிகாரம் பெற்றிருப்பதால், அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தபோது, நாட்டு மக்களும், அரசும் இந்த விவகாரத்தில் எந்தப் பங்களிப்பையும் தர இயலாத நிலைக்குப் புறந்தள்ளப்பட்டனர்.
எதிர்காலத்தில் அரசு, நீதித்துறை அல்லது அரசியல் சாசன அமைப்பு என எந்த அமைப்புமே அறிந்து கொள்ள முடியாதபடி, நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளைப் பரம ரகசியமாக வைத்திருக்க முடியாது. நாளை ஒரு தேவை ஏற்படும்போது, அந்தப் பதிவுகள் இல்லையென்றால், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமை என்பதும் இல்லாமல் போய்விடும்.
ரகசியத் தன்மை ராணுவ வியூகங்களிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் தேவைதான். ஆனால் நீதிபதிகள் நியமனத்தில் தேவை இல்லை. இதன் பொருள் நியமனம் குறித்த காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதல்ல பொருள். வெளிப்படைத்தன்மையற்று இருப்பது, ஜனநாயகத்துக்கும் சட்ட மாட்சிமைக்கும் விரோதமானது.
"கொலீஜியம்' முறையை எப்படி வலுப்படுத்த முடியும் என்பது குறித்து அரசும் உச்சநீதிமன்றமும் கலந்தாலோசிக்க வேண்டிய நேரம் இது. உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு என்பது, நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் இடையிலிருந்து மட்டும் தேர்ந்தெடுக்கும் முறையாகத் தற்போது உள்ளது.தகுதி அடிப்படை இல்லாமல், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட இயலும் நிலை உள்ளது. அந்த உயர்நீதிமன்றத்துக்கு முதல் முதலில் எப்போது நியமிக்கப்பட்டார் என்பதுதான், ஒருவர் மிக மூத்த நீதிபதியாவதற்கும் தலைமை நீதிபதியாவதற்கும் அடிப்படையாக உள்ளது.
உயர்நீதிமன்றத்துக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நபர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது மட்டுமே அவர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதியாகிவிட முடியாது. இந்தக் காரணத்தாலேயே, தகுதி வாய்ந்த மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விடுகிறது.
எனவே, சிறந்த நீதிபதிகள் என்று கருதப்படும் ஐந்து மூத்த நீதிபதிகளிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்து "கொலீஜியம்' ஆலோசிக்கலாம். பணி மூப்பு அடிப்படையில் அல்லாமல், ஐந்து பேரிலிருந்து சிறந்த நபரைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான வழியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த முறையிலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான "கொலீஜியம்' குழுவில் இடம்பெற்றவன் என்ற முறையிலும், நாட்டு நலன், நீதி பரிபாலனம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நீதிபதிகளுக்கு உள்ள முக்கியத்துவத்தை நான் அறிவேன்.
எனவேதான், எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு, சிறப்பான தகுதிகள் உள்ளவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை மட்டும் கருத்தில் கொண்டால் போதாது.
மற்றொரு விஷயம்: நீதித் துறையின் நடவடிக்கைகள் மூலமாகப் பிறந்ததுதான் "கொலீஜியம்' முறை. அரசியல் சாசனம் இயற்றுவதற்கான விவாதங்களின்போது "கொலீஜியம்' என்ற வார்த்தையைக்கூட யாரும் குறிப்பிடவில்லை. அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட பிறகு, வெகு காலம் கழித்து, நமக்குக் கிடைத்த பெரும் அனுபவங்களின் அடிப்படையில்தான் "கொலீஜியம்' என்ற சொல் உருவானது.
நீதிபதி நியமனம் குறித்த "2-ஆவது நீதிபதிகள் வழக்கு'க்குப் பிறகு "கொலீஜியம்' முறை உருவாக்கப்பட்டது. "மூன்றாவது வழக்குக்கு' பிறகு, 1998-இல் சில விதிமுறைகளுடன் "கொலீஜியம்' முறை விரிவடைந்தது. அதன் பிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது. "கொலீஜியம்' முறையின் சாதக - பாதகங்களைப் பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம்.
உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேட்ட விளக்கத்தின் அடிப்படையில் "மூன்றாவது நீதிபதிகள் வழக்கு' உருவானது. முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் நடைபெற்று வந்த நீதிபதிகள் நியமனத்தில் ஏதேனும் குறைகள் உள்ளனவா, அவற்றை எந்த வகையில் களையலாம் அல்லது சரி செய்யலாம் என்று அறிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உருவாக்கினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகளுடன் பெரிய அமர்வை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கடைசியாக விசாரித்த அமர்வில் ஒன்பது நீதிபதிகள் இருந்தனர். புதிய விசாரணையை 11 அல்லது 13 நீதிபதிகள் கொண்ட அமர்வுவிசாரிக்கலாம்.
"அரசியல் சாசனப் பிரிவை ரத்து செய்ய வேண்டுமானால், அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு பற்றி விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு போதாது' என்று கேசவானந்த பாரதி வழக்கின் மீதான தீர்ப்பு கூறுகிறது.
இப்போது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கூறு என்ற முறையில், அரசியல் சாசனத்தையே பரிசீலிக்கும் நிலை தோன்றியுள்ளது. எனவே, அரசியல் சாசனப் பிரிவைக் கேள்விக்கு உள்ளாக்கும் வழக்கை விசாரிக்க, குறைந்தபட்சம் கேசவானந்த பாரதி வழக்கை எத்தனை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோ, அதே எண்ணிக்கையைக் கொண்ட அமர்வு தேவை.
நீதிபதிகள் எண்ணிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீர்மானிக்கலாம். இது தொடர்பாக, உச்சநீதிமன்ற விதிமுறையில் திருத்தம் கொண்டு வரலாம்.
தேசிய நீதிபதிகள் நியமனக் குழுச் சட்டம் தொடர்பான தீர்ப்பு தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள் பலரும், முன்னாள் நீதிபதிகள் பலரும் கருதுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
நாட்டு நலன் கருதி, அரசியல் சாசனத்தின் செயல்பாடு கருதி, அந்தத் தீர்ப்பு தொடர்பாக மறுபரிசீலனை தேவையா, உயர் நிலையில் நீதிபதிகளை நியமிக்கப் புதிய நியமன முறை தேவையா என்பதெல்லாம் குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசிக்க மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.