வெல்வதற்காகத் தான் போராட்டங்கள்; போராடினேன்... வென்றேன்: டாக்டர் ராஜலட்சுமி!
By ரவிவர்மா | Published on : 01st December 2016 11:35 AM | அ+அ அ- |
லட்சுமி சுந்தரம்' என்ற பெயரில் எழுத்தாளராக விளங்கும் டாக்டர் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் சிவாஜி கணேசனின் குடும்ப மருத்துவர். இவரின் கணவர் கே.எம். ராதாகிருஷ்ணனும் பிரபல மருத்துவர். சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாள், சிவாஜி, ராம்குமார், பிரபு, அவர்களின் வாரிசுகள் என நாற்பது ஆண்டுகளாக, நான்கு தலைமுறைகளாக பணிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவர். கடந்த 2012இல், வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஏறத்தாழ நான்கு ஆண்டுகாலம் புற்றுநோயுடன் போராடியிருக்கிறார். பழுதான தாடை எலும்புகள், மேலண்ணம், பற்கள் எல்லாவற்றையும் இழந்ததில் அழகிய முகத்தோற்றம் மாறியது; குரலும் மாறியது. ஆனாலும், தளராத தன் மன உறுதியாலும், மன எழுச்சியாலும், நோயை வென்று மீண்டு வந்து, தன் மருத்துவப் பணியையும், எழுத்துப்பணியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 75வயது நிரம்பிய அவரை சென்னை, தியாகராயநகரில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்தபோது, பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்:
"என் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம். தந்தை சுந்தரம் கால்நடை மருத்துவராக இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு அப்பா ஆந்திராவில் பணியாற்றி வந்ததால் நான் ஆரம்பக்கல்வியை அங்கே பயின்றேன். சுதந்திரத்திற்குப் பிறகு, என் தந்தை, தன் குழந்தைகளுக்கு நுண்கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு விருப்ப மாற்றம் பெற்றார். என் தாயார் பாக்யலட்சுமி ஆங்கில வழி கல்வி கற்றவர். அவர், புகழ்பெற்ற ஆங்கில நாவல்களை எனக்கு அறிமுகம் செய்தார். நான்கு பெண் குழந்தைகளில் நான்தான் மூத்தவள். நாலும் பெண்மக்களாகப் போய்விட்டதே என்று யாராவது அப்பாவிடம் வருத்தமாகப் பேசினால், அப்பா அதை மறுப்பார். "பெண் என்றால் பொன்' என்று மகிழ்ச்சியோடு கூறுவார். யாரிடமும் எங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். எங்கள் இளம் வயதிலேயே "கண்ணன்' என்கிற குழந்தைகள் பத்திரிகையை வாங்கிவருவார். சிறுவயதில் ஒரு காகிதத்தில் "சின்ட்ரெல்லா' கதையை நாடகமாக எழுதிக்கொண்டிருந்தேன். என் எழுத்தார்வத்தைக் கண்ட என் தந்தை ஓடிச்சென்று ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கிவந்து கொடுத்து, "இந்தா... இதில் எழுது..!' என்று ஊக்குவித்தார்.
என் பதிமூன்றாம் வயதில் என் தந்தை இறந்தபோது, குடும்பத்தின் மூத்தபெண் சம்பாத்தியம் விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றது மத்திய தர குடும்பத்தின் வாய்ப்பாடு. ஆசிரியை அல்லது மருத்துவர் இரண்டில் ஒரு முடிவை எடுக்கவேண்டும். இறைவனின் ஆசீர்வாதத்தால் இரண்டுமே நிறைவேறியது. மருத்துவத்துறையில் எம்.டி பட்டம் பெற்று மருத்துவராகி, பின்பு மருத்துவத் துறையிலேயே பேராசிரியராகவும் பணியாற்றினேன்.
அம்மாவுக்கு ஆறு மொழிகள் பேச, எழுத, படிக்கத் தெரியும். அவர், இசை, நாட்டியம் அனைத்தையும் கற்றுத்தந்தார். அம்மாவின் உதவியால் ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.
மருத்துவ நிபுணர் கே.எம்.ராதாகிருஷ்ணனை மணந்தேன். நானும் அவரும் சிவாஜியின் குடும்ப மருத்துவராக இருந்ததால், நாங்கள் இருவரும் இணைந்தே சிவாஜி குடும்பத்தினருக்கு சிகிச்சையளித்து வந்தோம். ஒரு கட்டத்தில் என் கணவரைவிட நானே அதிகம் பணிசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் அம்மா ராஜாமணி அம்மாவில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் குடும்பத்துடன் எங்கள் பணி தொடர்கிறது.
டிசம்பர் -1 உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஒருமுறை சிவாஜியிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நீங்கள் நடிக்கவேண்டும் என்று கூறினேன். அவர் சம்மதித்து "கான்செப்ட்' என்ன என்று கேட்டார். கூறினேன், உடனே அவர் நானே இக்குறும்படத்தை தயாரிக்கிறேன் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேபோன்று அவரே தயாரிப்பு செலவை ஏற்று நடித்தும் கொடுத்தார். அநேகமாக சிவாஜி நடித்த ஒரே குறும்படம் இதுவாகத்தான் இருக்கும்.
என்னுடைய எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் அமரர் சாண்டில்யன். அவர் ஆசிரியராக இருந்த சுதேசமித்திரன் இதழில் பன்னாரி மாரியம்மன் குறித்த என் முதல் சிறுகதை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சுதேசமித்திரன் ஆசிரியரான மா.ராசமாணிக்கனாரின் புதல்வர் மா.ரா.இளங்கோவன் என் எழுத்துக்களைச் செப்பனிட்டார். 1977 இல் அமுதசுரபி மாத இதழின் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகளை அமுதசுரபியில் எழுதுமாறு ஆசிரியர் விக்கிரமன் பணித்தார். இதனால், பல மருத்துவ மேதைகளைப் பேட்டி கண்டேன். இந்த அனுபவங்கள், "என் மருத்துவமும் எழுத்தார்வமும் இயைந்து வெற்றி கண்ட அற்புதக் களம்' ஆகும்.
கவிஞர் சுப்பு ஆறுமுகத்துடன் இணைந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரங்களை பல ஊர்களில் நடத்தினோம். கவியரங்குகளில் கவிதை பாடவும், பட்டிமன்றங்களில் உரையாற்றவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. மத்திய அரசின் சார்பில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த பயிற்சிக்காக ஆறுமாதம் லண்டனில் இருந்தபோது சந்தித்த அனுபவங்களை வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கதைகளை எழுதினேன். நான் மார்ச்சுவரியில் பணியாற்றிய அனுபவங்களை வைத்து பெரிய நூலே எழுதலாம்.
அமரர் ஏ.நடராஜன் சென்னை வானொலியின் இயக்குநராக இருந்தபோது, "மானுடம் வென்றது', "முத்து முத்து மழைத்துளி' உள்ளிட்ட அறிவியல் தொடர்களை எழுத வாய்ப்பளித்தார்.
தொழுநோயாளிகளின் பிரச்னைகளைப் பேசும், "நெஞ்சகத்தின் அன்பலைகள்' என்ற நாவலை எழுதினேன். இது, மருத்துவர்களாலும், வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அமரர் விக்கிரமன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றிய பெருமையும் எனக்குக் கிடைத்தது.
என் ஒரே மகள் பவானியும், மருமகன் பாலகுமாரும் பல் மருத்துவ பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பேரன் சாயி பிரகலாத். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூன்று சகோதரிகளும், 80-வயதிலும் ஓய்வெடுக்காமல் காமாட்சி மருத்துவமனையில் பணியாற்றிவரும் என் அன்பான கணவரும் நான் சாய்ந்துகொள்ள தூணாய் நிற்பவர்கள். புற்றுநோய் குறித்த ஆய்வுகளில் கையெழுத்திட்டு வந்த எனக்கு நான்காண்டுகளுக்கு முன்பு... வாய்ப்புற்று நோய் வந்தபோது.... அதிர்ச்சிதான்... சமாளித்தேன். தேறினேன்.
இனி என் செவிகளும் கைகளும்தான் நன்கு இயங்கும்... பேசுவது சற்று சிரமம்தான். எனவே, இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை.
ஆனால், என் உயிர் மூச்சாக விளங்கும் இலக்கிய உலகத்தில் எழுத்துக்கள் மூலம் நான் இயங்கிக்கொண்டிருப்பேன்! தற்போது, சிறுகதைகளையும், ஆய்வுக்கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அனைத்து முயற்சிகளும் என் அன்னைக்கே காணிக்கை. வரவிருக்கும் நூலின் முகப்பிற்காக நான் எழுதிய ஒரு கவிதை:
பத்துத் திங்கள் எனைச் சுமந்து
பனி நீர் கொடியால் உறவு பிணைத்து
சத்தும் நீரும் நாபிக் காலவாய்
வழியே தந்து ஊணுயிர் வளர்த்து
முத்துப் பெட்டக கருவறை திறந்து
முழங்காலருகே வீழ்ந்த போது
முத்தமிழ் பாலைச் சேர்த்து ஊட்டிய
அன்னையே உனக்கென் முதல் வணக்கம்!''