அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா?
திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று.
அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களைத் தாண்டி இருவருமே அணுக்க நண்பர்கள். தன்னுடைய தனி வாழ்க்கை தொடர்பான அதிமுக்கிய முடிவான மணியம்மையை மணம் செய்துகொள்ளும் முடிவு குறித்து ராஜாஜியிடம் கலந்து பேசியவர் பெரியார். அப்போது தான் கொடுத்த யோசனை என்ன என்பதைக் கடைசி வரை ராஜாஜி பகிரங்கப்படுத்தவில்லை. அவர்களுக்கு இடையிலான நட்பு அந்த அளவுக்கு நாகரிகம் தோய்ந்தது. கொள்கை எதிரியாக இருந்தபோதும் ராஜாஜி மறைந்தபோது, அவரது இறுதிப் பயணத்தில் வாய்விட்டு அழுதபடியே சென்றார் பெரியார்.
ஆரோக்கிய அரசியல்
திமுக ஆட்சியின்போது இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார் முதல்வர் அண்ணா. அப்போது திமுகவின் பிரதான அரசியல் எதிரி காங்கிரஸ். ஆனாலும், அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மூவருக்கும் தரப்பட்ட மரியாதையும் கெளரவமும் ஆரோக்கிய அரசியலின் அடையாளங்கள். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியவர் காமராஜர்; மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பரின் சிலையைத் திறந்தவர் பக்தவத்சலம்; மாநாட்டின் கலைப் பொருட்காட்சியைத் திறந்தவர் ராஜாஜி.
முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராஜருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது காமராஜருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும், காமராஜரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில், மணமக்கள் அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார். அதனை ஏற்று, காரிலேயே மேடைவரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராஜர்.
அணுக்க நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய எம்ஜிஆரும் கருணாநிதியும்கூட அரசியல் நாகரிகம் பேணுவதில் ஆர்வம் செலுத்தியவர்களே. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தனது மகள் டாக்டர் தமிழிசையின் திருமண விழாவில் பங்கேற்க எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவருக்கும் அழைப்புவிடுத்தார் குமரி அனந்தன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இருவரும் ஒரே மேடையில் நின்று, மணமக்களை வாழ்த்திப் பேசினர். அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகும்கூட கருணாநிதியும் எம்ஜிஆரும் சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்து பேசியதுண்டு. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராஜரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர்.
கருணாநிதியின் கடிதம்
எண்பதுகளின் மத்தியில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் முக்கியமானது. மேடைகளில் அதிமுகவும் திமுகவும் அமிலம் சுரக்கும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், எம்ஜிஆரின் உடல்நிலை பற்றி திமுகவினர் யாரும் மேடைகளில் பேசக் கூடாது என்று கருணாநிதி உத்தரவிட்டிருக்கிறார். எம்ஜிஆர் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது சுற்றுப்பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு வந்தார் கருணாநிதி. அப்போது திமுக சார்பில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வார காலத்துக்கு ரத்துசெய்யப்பட்டன.
மேற்கண்ட நிகழ்வுகளின் பொருள், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் அன்பின் வடிவமாக, ஒரு தாய் மக்களாக, அரசியல் நாகரிகத்தின் நாடு போற்றும் அடையாளங்களாக மட்டுமே இருந்தனர் என்பதல்ல. அரசியல் விமர்சனங்கள் இருக்கவே செய்தன. கண்டனக் கணைகளைப் பரஸ்பரம் பொழிந்துகொள்ளவே செய்தனர். ஆனாலும், அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகளில் பெரிய சிக்கல்களையோ, உரசல்களையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனால், எண்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டு அரசியல் களம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமாக மாறியபோது, மேற்கண்ட அடிப்படைகள் ஆட்டம் காணத் தொடங்கின. அரசியல் எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் தனிப்பட்ட எதிரிகளாக இயங்க ஆரம்பித்தனர். பொதுவான விழாக்களிலோ, தனிப்பட்ட நிகழ்வுகளிலோ கருணாநிதியும் ஜெயலலிதாவும் பரஸ்பரம் பங்கேற்பதோ, சந்தித்துக்கொள்வதோ கிடையாது. பொது நிகழ்ச்சியில் சந்திப்பதுகூட அந்தத் தலைவர்களின் பிரத்யேக விருப்பம், தனி உரிமை என்று தவிர்த்துவிடலாம்.
ஆனால், கட்டாயம் பங்கேற்க வேண்டிய சட்டமன்றத்தில் கூட ஜெயலலிதாவும் கருணாநிதியும் சந்தித்துக்கொள்வதை இருவருமே தவிர்த்துவிட்டார்கள். விதிவிலக்காக, திமுக சார்பில் சுனாமி நிவாரண நிதியைத் தருவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்ததையும் அப்போது கருணாநிதியின் உடல்நலன் குறித்து ஜெயலலிதா விசாரித்ததையும் சொல்லலாம். மற்றபடி, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக, அதிமுக - திமுக தலைவர்கள் மத்தியில் பரஸ்பர உறவு நாகரிகம் பலவீனமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
மாறும் சூழல்
என்றாலும், சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் சிறுசிறு மாற்றங்கள் தென்படுகின்றன. பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை, எதிரிக் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று ஸ்டாலின் சொன்னது ஆகியன வெகுவாக வரவேற்கப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘அவர்மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டதும், அதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரித்ததும் அடுத்தடுத்து நடந்தன. உச்சபட்சமாக, முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை அதிமுக தலைவர்கள் சந்தித்ததும் நலன் விசாரித்து வாழ்த்து சொன்னதும் நடந்தேறியிருக்கின்றன.
ஆக, தமிழகத்தில் மீண்டும் பழைய அரசியல் நாகரிகம் தழைக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், இப்போதுதான் அப்படியொரு நாகரிகம் தொடங்குகிறது என்பது போன்ற பேச்சு உண்மையானதல்ல. இந்தக் கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும் என்பதோடு மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும்!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
No comments:
Post a Comment