புயல் கற்றுத் தந்த பாடம்
கடந்த வார வார்தா புயல் நம்மை கிட்டத்தட்ட அபாயத்தின் உச்சிக்கு அழைத்து சென்றுவிட்டது. இதுபோன்ற ஒரு புயல் காற்றை சென்னை சந்திக்கவில்லை என்று சொல்கின்றனர். புயல் ஓய்ந்த பின்னரே எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதை பார்க்கமுடிந்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் மிகப் பெரிய அளவுக்கு சேதமடைந்தன. வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு 6,500 கோடி ரூபாய் இருக்கும் என அசோசேம் மதிப்பிட்டுள்ளது. இது ஒரு தனி நிகழ்வு அல்ல. இந்தியா முழுவதும் வருடந்தோறும் புயலால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு நேரிடுகிறது என்பதே உண்மை.
பொதுவாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தனிநபர்களின் பொருட்கள், வாகனங்கள், வீடு ஆகியவைதான் மிகப்பெரிய அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றிக்கு காப்பீடு எடுத்திருந்தால் இழப்பை ஈடுகட்டிருக்காலமே என்று நமக்கு தோன்றும். சிலர் காப்பீடு எடுத்திருப்பார்கள் ஆனால் இழப்பீடு கோரும் பொழுது இவை உங்கள் பாலிசியின் கீழ் வரவில்லை என இழப்பீடு மறுக்கப்படும். ஆகவே காப்பீடு எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. கார் மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
வாகன காப்பீடு
பொதுவாக இருவகையான வாகன காப்பீடுகள் உள்ளன. ஒன்று தானாக பாதிப்பு ஏற்படுவதற்கான காப்பீடு.மற்றொன்று மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு. புயல் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டின் கீழ் வரும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தில் நிறைய கார்கள் பாதிப்புக்கு உள்ளாயின. காப்பீடு செய்து வைத்திருந்தவர்கள் பாதிப் படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கோரினர். ஆனால் பலருக்கு இழப்பீடு விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் தொடர்ந்து இருந்ததால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவு என்று மறுத்தனர். தொடர்ச்சியான அழிவு வாகன காப்பீட்டின் கீழ் வருவதில்லை என்று ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தை சார்ந்த சஞ்சய் தத்தா கூறுகிறார்.
புயல் போன்ற இயற்கை பேரிடர் களுக்கு அப்படி இல்லை. மரத்தின் கீழ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு சூறாவளி காற்றினால் மரம் சாய்ந்து வாகனத்திற்கு இழப்பீடு ஏற்படுமாயின் அது வாகன காப்பீட்டின் கீழ் வரும் என்கிறார் எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு பிரிவின் தலைவர் பங்கஜ் வர்மா.
காரில் உள்ள மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ சிஸ்டம்ஸ், பார்க்கிங் கேமரா ஆகியவை சாதரணமான வாகன காப்பீட்டில் வராது. காரில் ரப்பர், பிளாஸ்டிக், நைலான் பகுதிகள், டயர், டியூப், பேட்டரி ஆகியவற்றில் 50 சதவீதம் தேய்மானமாக கருதப்படும். கண்ணாடி பாகங்களுக்கு 30 சதவீதம் தேய்மானமாக கருதப்படும்.
நீங்கள் எடுக்கும் பாலிசியோடு கூடு தலாக பிரீமியம் தொகை செலுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க் கலாம். இன்ஜினுக்கென்று உங்கள் பாலிசி தொகையோடு சேர்த்து பிரீமியம் செலுத்த முடியும். விலையுயர்ந்த பொருட்களுக்கும் கூடுதல் பிரீமியம் செலுத்த முடியும்.
வீடுகளுக்கான காப்பீடு
கடந்த வாரம் ஏற்பட்ட புயலால் கட்டிடங்கள் மட்டுமல்ல கட்டிடத்தின் உள்ளே இருந்த ஏசி, கதவுகள், கண்ணாடி கதவுகள், பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற சேதங்களை தவிர்க்க வீடுகளுக்கு காப்பீடு எடுப்பதும் அவசியமாகிறது.
வீடுகளுக்கான காப்பீட்டில் தீயால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு மற்றும் பூகம்பம், தீ, வெள்ளம், புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்களுக்கான விரிவான காப்பீடு என இருவகைகள் உள்ளன. தீயினால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டில் தொடர்ச்சியான இழப்புகள் இதன் கீழ் வராது. ஆனால் நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் தீயினால் ஏற்படும் இழப்புக்கான காப்பீட்டில் மின்சார ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது.
அதேபோல் வீடு முழுவதும் சேதமடைந்தலோ அல்லது ஒரு பகுதி இடிந்து விழுந்தாலோ அதற்காக தனி காப்பீடு வசதி இருக்கிறது. சில தேய்மானங்களை தவிர மீதமுள்ள இழப்பீடு தொகையை வழங்குகின்றன. எலெட்க்ரிக்கல் அல்லது மெக்கானிக்கலாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கென்றும் தனியான காப்பீடு இருக்கிறது.
இப்படி வாகன காப்பீடு மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது நாம் எதற்காக காப்பீடு எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். காப்பீடு எடுத்துவிட்டோம் இனி கவலையில்லை என்று நினைக்காதீர்கள். நம் பாலிசியில் என்னவெல்லாம் வருகிறது என்பதை பாருங்கள். நம் தேவை இதுதானா என்பதை புரிந்து கொண்டு காப்பீடுகளை எடுத்துவிட்டால் எவ்வளவு பெரிய இழப்பையும் தவிர்க்கலாம்.
தொடர்புக்கு: rajalakshmi.nirmal@thehindu.co.in
No comments:
Post a Comment