Monday, December 19, 2016

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டு மாற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் பெங்களூருவில் கைது: சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

இரா. வினோத்

சட்ட விரோதமாக‌ செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை பெங்களூருவில் கைது செய்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக‌ விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த வருமான வரித்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக க‌ர்நாடகாவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஏழை எளிய மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில், வருமான வரித்துறை பண முதலைகளிடம் இருந்து கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களிடம் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கறுப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக‌ மாற்றிக் கொடுத்ததில் அரசு அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள், இடைத் தரகர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாகவே பெங்களூருவில் கடந்த வாரம் வங்கி அதிகாரிகள் 5 பேர், இடைத் தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் சட்ட விரோதமாக ரூ. 6 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சட்ட விரோதமாக பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த பெங்களூரு ரிசர்வ் வங்கி கிளையின் மூத்த சிறப்பு உதவியாளர் சதானந்த நாயக்கா மற்றும் சிறப்பு உதவியாளர் கவின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ. 1.99 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றிக்கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து சட்ட விரோத செயல்பாடு, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 2 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. கைதாகியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவரும் நேற்று பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கைதான ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024