Saturday, December 17, 2016

எய்ம்ஸ்: ஆதார் எண் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு பதிவு கட்டணம் கிடையாது

By புதுதில்லி  |   Published on : 17th December 2016 07:34 AM  | 
"தில்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர், ஆதார் எண் தெரிவித்தால் அவர்களின் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக எய்மஸ் மருத்துவமனையின் கணினிமயமாக்கல் பிரிவு தலைவரும், மருத்துவருமான தீபக் அகர்வால் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரிடம், தற்போது பதிவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள எண்கள் ஒதுக்கப்படும் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அதேவேளையில், நோயாளியின் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைத்தால், இந்த தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
எனவே, ஆதார் எண்ணை தெரிவிக்கும் நோயாளிகளுக்கு, பதிவுக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்தவுள்ளோம்.  அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறையை, அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிக்கையை வெளியிடும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் தீபக் அகர்வால்.
ப்ரீ பெய்டு அட்டைகள்
 மின்னணு பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதை கருத்தில் கொண்டு, எய்ம்ஸில் ப்ரீ-பெய்டு அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தீபக் அகர்வால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அந்த அட்டையில் பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் சிகிச்சை பெறலாம். சிகிச்சை நிறைவுற்ற பின், அட்டையில் பணம் மிச்சமிருந்தால் அது நோயாளியிடம் திரும்ப வழங்கப்படும்.இதேபோல, எய்ம்ஸில் பணம் செலுத்துமிடங்களில் 100 ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ கல்விக் கட்டணங்களை, மாணவர்கள் இணையவழியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக எய்ம்ஸ் தலைமை கண்காணிப்பாளர் டி.கே.சர்மா தலைமையில் உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார் தீபக் அகர்வால்.  

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024