Saturday, December 17, 2016

மார்கழி என்றதுமே நினைவில் வரும் எட்டு காட்சிகள்



மாதங்களில் அவள் மார்கழி' கண்ணதாசனால் புகழப்பட்ட மாதம் மார்கழி. விவசாய நாடான இந்தியாவில் அறுவடையைத் தொடங்கி வைக்கும் மாதம் மார்கழி. மித வெப்ப நாடான இந்தியாவில் குளிரால் போர்த்திய நாட்களை நமக்குத் தரும் மாதம் மார்கழி.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறதுதான் என்றாலும் மார்கழி என்றவுடன் நம் மனதிற்குள் சில அடையாளங்கள் சட்டென்று வந்து செல்வதே மார்கழிக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அப்படி, மார்கழியின் அடையாளங்களாய் எதெல்லாம் நம் கண்முன் வந்து செல்லும் என மனதை கிராமத்திற்குள் ஒரு ரவுண்ட் செல்ல ரெடியா?



குளிர் தரும் பனி
மார்கழியின் முதல் அடையாளம் பனி. மாலை தொடங்கியதுமே மெல்ல ஆரம்பித்து, முன்னிரவில் ஆடை மேல் இன்னோர் ஆடை அணிய வைக்கச் செய்யும். பின் கம்பளிக்குள் ஒளியச் செய்து, ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் பனி. அதிகாலையில் புகைப் போல படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கி விடும்.

புனல் செட் பாடல்கள்
'தாயே கருமாரி..." கோவிலில் புனல் ஸ்பீக்கரில், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கனவின் எந்த அடுக்கில் இருந்தாலும் உலுக்கி எழுப்பி விடும். எல்.ஆர்.ஈஸ்வரியைத் தொடர்ந்து, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உள்ளிட்டோர் தொண்டையைச் சரிசெய்தப்படி நமக்காக காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன், மார்கழி மாதத்தில் ரெக்கார்டு போடுவதற்கு என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் டேப் ரெக்கார்ட்டரில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்து எல்லோரையும் எழுப்புவார். பென் ட்ரைவைச் செருவி விட்டால் நாள் கணக்கில் பாடல்கள் இசைப்பது போல அப்போது கிடையாது. ஆறு பாடல்கள் முடிந்ததும் கேசட்டைத் திருப்பி போட வேண்டும் என்பதால் அவரும் தூங்க முடியாது. அதேபோல மாலை நேரத்தில் பாடல்களைப் போடுவார். அப்போது சினிமா பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் இடம்பிடிக்கும்.



சிக்கு கோலமா... பூ கோலமா...
எல்.ஆர். ஈஸ்வரி 4 மணிக்கே எழுப்பி விடுவது, தெருவை அடைத்து கோலம் போடுவதற்குதான். 48 புள்ளிகள், 64 புள்ளிகள் என முதல்நாளே இரவில் திண்ணையில் சாக்பீஸில் ஒத்திகைப் பார்த்தாலும் தெருவில் புள்ளி வைத்ததும், தர்மத்தின் தலைவன் ரஜினி வீடு மாறி செல்வதைப் போல, எல்லாம் சரி எங்கு தப்பு வந்தது எனத் தெரியாமல் அரைமணி குழம்பி, பின் அதையே வேறு கோலமாக மாற்றிப் போடுவது ஒரு திறமை. அதை பக்கத்து வீட்டுக் காரப் பெண்களால் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் அதுவே கலையாகி விடும். கோலம் போடுவதற்கு தம்பிகள், அக்கா இன்னைக்கு சிக்கு கோலமா... பூ கோலமா... என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தம்பிகளில் கெஞ்சல் ஓர் அழகு என்றால், சொல்றேன்... சொல்றேன் என அக்காக்கள் செய்யும் சஸ்பென்ஸ் இன்னும் பேரழகு. மார்கழியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு கோலங்களில் வித்தியாசம் காட்டி அசத்துவதும் நடக்கும்.

சாணிப் பிள்ளையார் :-
என்ன கோலம் என தம்பிகளை இழுத்தடித்தற்கு பழிவாங்கலாய், பிள்ளையார் செய்ய சாணி எடுத்து வர தம்பிகள் பிகு காட்டுவார்கள். நாளைக்கு உனக்கு பிடித்த கோலம் போடுகிறேன் எனச் சமாதானம் செய்த ஐந்து நிமிடங்களில் சாணி வந்துவிடும். கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையார் வைப்பது வழக்கம் நிறைவேறும்.

கூடுதல் அழகுக்கு பரங்கிப்பூ
கோலம் ரெடி.. நடுவில் பிள்ளையாரும் ஜம்மென்று வீற்றிருக்க... இரண்டையும் அலங்கரிக்க பரங்கிப்பூ அல்லது பூசணி பூ தேவை. மீண்டும் தம்பிகள் தயவு வேண்டும். அல்லது அந்த நேரத்தில் தம்பிகளாக மாறிவிடும் அப்பாவின் உதவியோடு பரங்கி பூ வந்து சேரும். பரங்கி பூ வை வைத்து நிமிர்ந்தால் சூரியன் சோம்பல் முறித்து பகலைத் திறப்பார்.



சுவையான பொங்கல்
கோலம் போட்டு முடிக்கும் நேரத்தில் சரியாக கோவில் மணியோசை கேட்கும், ஓடிச் சென்றால் ஊரில் சிறுவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே வெட, வெட என நிற்பார்கள். அர்ச்சகர் பொங்கல் வாளியின் மூடியைத் திறந்து, ஒரு கைப்பிடி பொங்கலை மட்டும் இலையில் வைத்திருப்பார். ஆனால் அதன் நறுமணம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். பூஜை எப்போது முடியுமென காத்திருந்து சுடச் சுட பொங்கலை கையில் வாங்கியதும் சூடு தாங்காமல் இந்தக் கையில் கொஞ்ச நேரம் அந்தக் கையில் கொஞ்ச நேரம் என மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே வீடு வருவதற்குள் பொங்கலின் சூட்டுக்கு கைப் பழகியிருக்கும்.

பஜனைப் பாடல்கள்
முதல்நாள் இரவே பாடல் புத்தகங்களைப் படித்து பஜனைப் பாடல்களை மனப்பாடம் செய்து, அதிகாலையிலேயே எழுந்து தூங்குமூஞ்சி நண்பன் வீட்டுக்குச் சென்று அவனை எழுப்பி கோவிலுக்குச் செல்வதற்குள் தனக்கு தருவதாக சொல்லியிருந்த ஜிங்க் சாக் கருவி வேறொருவனின் கையில் இருக்கும். அவன் நமக்கு முன்பே வந்து அதைக் கைப்பற்ற்றியிருப்பான். நாளை இன்னும் சீக்கிரமே எழுந்திருக்கனும் எனும் மார்கழி பாடத்தைக் கற்று, குருநாதரின் பாடலுக்கு பின் பாடத் தயாராவோம்.



போகி
பொங்கல் பண்டிகைன்னா... அது தை மாசம் இல்லையான்னு சொல்றீங்களா.. மார்கழியின் கடைசி நாள்தான் போகி. மார்கழியின் குளிருக்கு ஏற்ற பண்டிகைதான் இது. வீட்டில் பயன்படாத பொருட்களை தீ வளர்த்து அதில் போட்டு, சுற்றி உட்கார்ந்து குளிர்காய்வது சுகமான அனுபவம்.


மார்கழியைப் போற்றுவோம்! மார்கழியைக் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024