Saturday, December 17, 2016

மக்கள் நலன் இல்லை

By என். முருகன்  |   Published on : 17th December 2016 01:24 AM  |   அ+அ அ-   |  
murugan


இன்றைய தலையாய பிரச்னையாக நம் நாட்டில் விவாதிக்கப்படுவதும், சராசரி குடிமகனை பாதிப்பதுமான பிரச்னையாக பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நள்ளிரவில், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளில் இந்த இரண்டு வகையானவையும் சேர்ந்து 86 சதவீதம் உள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சாமாக பிரதமர் கூறியது கவனிக்கத்தக்கது.
அரசின் இந்த அதிரடி முடிவிற்கு இரண்டு காரணங்களை கூறினார் பிரதமர். ஒன்று, நாட்டின் எல்லைக்கு வெளியே கள்ள நோட்டுகளை தயாரித்து பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி இந்த கள்ள நோட்டுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உபயோகிப்பது. இரண்டாவது, கருப்புப் பணத்தையும், ஊழலையும் இந்த இரண்டு வகை ரூபாய் நோட்டுகள் நிலைப்படுத்துவது.
இந்த இரண்டு காரணங்களும் சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துப்படி, "எல்லா கருப்புப் பணமும் ரொக்கப் பணமாக உள்ளது என்பதும் எல்லா ரொக்கப் பணமும் கருப்புப் பணம் என்பதும் தவறான அனுமானங்கள்.'
இது எப்படி என ஆராய்ந்தால், நம் நாட்டின் 90 சதவீத ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை ரொக்கமாகவே பெறுகிறார்கள். இவர்களில் பல கோடி பேர் விவசாயத் தொழிலாளிகள், கட்டட வேலை செய்பவர்கள், பல வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் தினக்கூலி பெறுபவர்கள். நம் நாட்டில் வங்கிகள் பல கிராமங்களுக்குப் பரவிவிட்டபோதிலும், இன்னமும் சுமார் 60 கோடி இந்தியர்கள் வசிக்கும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வங்கிக் கிளைகளே கிடையாது.
அப்படியே வங்கிக் கிளைகள் உள்ள பல இடங்களில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு வங்கியை உபயோகித்து பணத்தை சேமிக்கவும், அன்றாட தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் கிடையாது.
தங்கள் தின வாழ்க்கைக்கு ரொக்கப் பணத்தை செலவிடுவதும், தங்கள் சேமிப்பை அதிக மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்ளும் பழக்கமும் பெருவாரியான நமது மக்களுக்கு உண்டு. இந்த பழக்க வழக்கங்களை மறந்துவிட்டு இவர்களது வாழ்க்கையை துயரத்திற்கு தூக்கியடிக்கும் தரமற்ற செயல்தான் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சமூகவியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சஞ்சய் ரெட்டி என்பவரின் கருத்தும் இதுதான்.
அவர் கூறுகிறார்: "இந்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டுக்கான திடீர் அறிவிப்பு தவறான ஒன்று. அதன் பின்னணியில் எந்தவிதமான பொருளாதாரக் கோட்பாடும் கிடையாது. ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை சரியான நடவடிக்கைகளை எடுத்து ஒழிக்க முடியாத ஒரு அரசின் அவசரத்தனத்தை இந்த செல்லாத நோட்டுகளுக்கான அறிவிப்பு பறைசாற்றுகிறது.'
பொதுமக்களில் நிறைய பேர் மிகுந்த நல்லெண்ணத்துடன் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக சேர்த்து வைக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினரும், சாதாரண தொழிலாளர்களும் அடக்கம். அவர்களது பணம் செல்லாக் காசாகிவிட்ட காரணத்தால் அவர்களது நடவடிக்கைகள் பல ஸ்தம்பித்துப்போய், பின் இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து விடும் எனக் கூறிகிறார் சஞ்சய் ரெட்டி.
புதுதில்லியின் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை ஆணையத்தின் பேராசிரியர் கோவிந்த ராவ் ஒரு முதிர்ந்த பொருளாதார நிபுணர். அவரது கருத்துப்படி, நம் நாட்டின் மொத்த ரொக்கப் பணத்தில் 86 சதவீதம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே. இவற்றை செல்லாது என்று அறிவித்தபின் நமது பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து போனது.
நாட்டின் 96 சதவீத செலவினங்கள் ரொக்கப் பணத்தில்தான் நடைபெறுகின்றன என்பதால் இந்த "செல்லா நோட்டு அறிவிப்பு' எப்படிப்பட்ட சமூக குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது என்பது புரிந்திருக்கும். இது தெரியாதவர்கள்தான் நம்மை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்கு பணம் வருவதை தடுப்பது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது ஆகியவை உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இவற்றை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள் என்பதும், நம் நாட்டின் வங்கிகள் இவற்றை உடனடியாக சரி செய்யும் திறமை கொண்டவையாக உள்ளனவா என்பதும் சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா எனக் கேட்கிறார் கோவிந்த ராவ்.
கருப்புப் பணம் உருவாக அடிப்படைக் காரணங்கள் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள், நிலம் மற்றும் கட்டுமான வணிகங்கள், வரி ஏய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் லஞ்ச நடவடிக்கைகளே.
இதனால் உருவாகும் கருப்புப் பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுவதில்லை. வெளிநாடுகளில் தேக்கி வைப்பதும், நிலங்களாகவும் பல கட்டடங்களாகவும், தங்க - வைர நகைகளாகவும் அவை பதுக்கி வைக்கப்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகள். ஆக, கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிப்பது சரியல்ல என்கிறார் ராவ்.
இதுபோன்ற கருத்துகளை பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறும் வேளையில், இவற்றிற்கெல்லாம் மேலாக இந்த நடவடிக்கை கருப்புப் பண வளர்ச்சியை நம் நாட்டில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறுகிறார் மெய்த்ரீஷ் ஃகாதக் எனும் லண்டன் நகரத்து பொருளாதார பேராசிரியர். அவர் இந்திய பொருளாதாரத்தை கூர்ந்து கவனிப்பவர்.
நம் நாட்டின் கருப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதமே ரொக்கப் பணமாக உள்ளது. நமது பிரதமரின் செல்லா நோட்டு அறிவிப்பால் இந்தப் பணம் முழுவதையும் கைப்பறறிய பின்னரும் பெரிய நன்மைகள் விளையாது. காரணம், இனிவரும் காலங்களில் கருப்புப் பணத்தை பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளையும்விட, புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவில் சேமித்து வைக்க முடியும் என்கிறார் ஃகாதக்.
அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாத பல பொருளாதார ஆய்வாளர்கள் அரசின் இந்த நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் பல அரசியல் கட்சிகளும் இதை அரசியல் பிரச்னையாக கையிலெடுத்து வாதம் செய்து வருகின்றன.
எனவேதான், இந்த நடவடிக்கை சரியான ஒன்று என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலைமையில் தேசிய வியாபார குறியீடுகள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டன. தொழிற்சாலைகளின் உற்பத்திகளும் குறைந்து, வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உற்பத்திக்கும் மக்களின் கையில் உள்ள ரொக்கப் பணத்திற்கும் உள்ள விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் நமது சமூகக் கட்டமைப்புதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது பொருளாதாரம் மக்களின் கையிலுள்ள ரொக்கப் பணத்தை உபயோகித்துதான் வளர முடியும். மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்தால், நமது பொருளாதாரம் கீழ்நோக்கி வீழ்ச்சி அடையும். இது தற்போது நிரூபணம் ஆகிவருகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் அதிக முக்கியம் நல்ல நாணயமான பல குடிமக்களின் தரமான வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு நாம் ஒரு திடீர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என பல தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
பழைய 500 ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு,புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்குவோம் என அரசு சொன்னபின்னர், டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி கணக்கீட்டின் படி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட முடிந்த புதிய நோட்டுகள் ரூபாய் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடியே. இது பணப் புழக்கத்தை சரிபாதிக்கு கீழே கொண்டு சென்றதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
ஆக மொத்தத்தில், இந்த நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் செய்திருந்தாலும், அது சரியாக நடந்தேற முடியாத சூழலில் அதை திரும்பப் பெறும் பல மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமான "மக்கள் நலன்' காக்க எந்த நடவடிக்கைக்கும் தயார் என்ற நல்ல பெயர் இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் என நம்மில் பலர் எண்ணுவது சரியே!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...