Saturday, December 17, 2016


தரமற்ற உணவகங்கள்

By எஸ். ரவீந்திரன் | Published on : 17th December 2016 01:23 AM | அ+அ அ- |

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு நல்ல உணவகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதில் கமகமக்கும் வாசனை, மூக்கைத் துளைக்க வைக்கும் அசைவ உணவகத்தைத் தேடி செல்பவர்கள் பலர். செல்லிடப்பேசி அல்லது குறுஞ்செய்தியை அனுப்பினால் போதும். அடுத்த நிமிடம் உங்கள் வீட்டுக்கே வந்து சுவையான உணவை தர உணவகங்கள் தயார்.
இவர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழல்வதை காசாக்கிப் பார்க்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அங்கு சென்று விதவிதமாக ருசித்துப் பார்த்து கேட்ட தொகையையும் கொடுத்துவிட்டு வருபவர்களுக்கு அண்மையில் இடிபோல வந்திறங்கியிருக்கிறது ஒரு செய்தி. அது, தரமான அசைவ உணவகங்களில் இறைச்சிகளில் கலப்படம் என்பதுதான்.
மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கை தேவை. ஆனால் நம்பிக்கை மோசடி செய்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியில் கலப்படம் செய்து இப்படி ஒரு பிழைப்பை நடத்துபவர்களை என்ன செய்வது?
பொதுவாக அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் உணவகங்களுக்குச் செல்வதை முடிந்தவரையில் தவிர்க்கலாம். ஒரு சில நல்ல உணவகங்கள் இத்தகு இழிசெயலில் இறங்குவதில்லை.
நம்மில் பலருக்கும் விசித்திர குணம் ஒன்று உண்டு. மலிவு என்று கேள்விப்பட்டால் போதும். எப்பேர்ப்பட்ட வேலையையும் விட்டுவிட்டு அங்கு சென்றுவிடுவார்கள்.
மலிவு என்றாலே அது போலி அல்லது திருட்டுத்தனம் செய்வதாகத்தான் அர்த்தம். தரமான பொருள்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக மலிவானவற்றை வாங்குவதால் ஆரோக்கியம், செலவு என அனைத்திலுமே கேடுதான் விளையும்.
அதேபோல அசைவ உணவகங்களில் குறைந்த விலையில் உணவை தரும்போது இந்த விலைக்கு இறைச்சி வாங்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். நாய்க்கறி, பூனைக்கறி போன்றவற்றை மனது வந்து எப்படி கலக்கிறார்களோ தெரியவில்லை.
இன்றைய நிலையில் கலப்படமற்ற இறைச்சி என்றால் கோழியைக் கூறலாம். அதுவும் உயிரோடு வாங்கும் வரைதான். இன்னும் ஒரு பொருளில் கலப்படம் செய்ய முடியாது. அது மீன் வகை எனலாம். இந்த காலத்தில் அதிலும் பழைய மீன்களை கலந்து விடுகின்றனர்.
இது தவிர பறவையினங்களில் கலப்படம், மாடு,ஆடு இறைச்சிகளில் நோய் தாக்கிய கால்நடைகள், இறக்கும் தருவாயில் உள்ளவை, இளங்கன்றுகள் என பலதரப்பட்ட இறைச்சிகளைக் கலக்கின்றனர்.
பெரும்பாலான உணவகங்களில் முந்தைய நாளில் மிஞ்சியிருக்கும் இறைச்சிகளை வினிகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து மறுநாளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது.
சுவையூட்டிகளில் சுகாதாரத்துறையினரால் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. உதாரணமாக வெள்ளி நிறத்தில் கேக், பிஸ்கெட் போன்றவற்றில் கலக்கப்படுபவை மாட்டு கொழுப்பால் தயாரிக்கப்படுபவையாகும்.
இதேபோல அடர்த்தியான குழம்பு வகைகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அது பார்த்தாலே ருசியைத் தூண்டும். இவ்விதமாக பல பொருள்கள் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுகாதாரத்துறையினர் பயனுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தபட்ட உணவகங்களுக்கு வழங்கியிருந்தாலும் அவை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கின்றன.
இது போன்ற புகார்களுக்காகவே மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி குறைந்தது ரூபாய் ஒரு லட்சமும் அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் அதை அலட்சியப்படுத்துவதுதான் நடந்து வருகிறது.
இதைத் தடுக்க உணவகங்களுக்கு வாங்கப்படும் இறைச்சிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்து தர வேண்டும். இது நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பாதுகாப்பு, சுகாதாரமான இறைச்சிகளை வழங்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாதவரை கலப்படத்தை ஒழிக்க முடியாது.
மேலும் மசாலா, சுவையூட்டிகள் கலப்பதால் அது எந்த இறைச்சி என கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். எனவே முடிந்தவரை அசைவ உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
சரி அசைவத்துக்கு மட்டும்தான் இந்த கலப்படம் என்றால் இல்லை. ஏனெனில் சைவத்திலும் கைவரிசை காட்டுவோர் உள்ளனர். தரமில்லா மசாலா பொருள்கள். அசுத்தமான குடிநீர், இலைகளுக்குப் பதில் சுற்றுப்புறக்கேடு தரும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்புகளில் கலப்படம் செய்து சமைக்கப்படும் கூட்டு, சாம்பார்,குழம்பு வகைகள் என சொல்லி மாளாது.
குறிப்பாக மசாலாப் பொருள்களில்தான் அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வோருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் விரைவிலேயே வெளியில் வந்து மீண்டும் தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர்.
பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டுள்ள சைவ, அசைவ மசாலாக்களை பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ச்சியாக இப்பொருள்கள் உடலில் சேர்வதால் புற்றுநோய், தோல்நோய், அஜீரணக்கோளாறு, வயிறு உபாதைகள் என ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகின்றன.
எனவே கூடிய வரையில் வீடுகளில் கையினால் தயாரிக்கப்படும் மசாலா வகைகளை பயன்படுத்துவதே சிறந்தது. பழங்காலத்தில் தயாரித்த உணவுப் பக்குவத்தை இப்போது யாருமே பின்பற்றுவதில்லை. அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு எந்தவித நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் தவிர மற்ற சமயங்களில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே கலப்படம் செய்து உணவகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி அத் தொழிலை அவர்கள் மீண்டும் நடத்த முடியாதவாறு செய்ய வேண்டும். அதுவரை கலப்படத்தைத் தவிர்க்கவே முடியாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024