'தேவை 7 எம்.எல்.ஏக்கள்தான்!' -பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் பா.ஜ.க வியூகம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி. ' சட்டசபைக் குழுத் தலைவராக எடப்பாடியைத் தேர்வு செய்தார் சசிகலா. பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது. இதே அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வும் செல்லாது' என ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார் மைத்ரேயன்.
தமிழக அரசியல் களத்தில் ஒன்பது நாட்களாக நீடித்து வந்த குழப்பத்துக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ' 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள்' என உத்தரவிட்டிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ' இதனால் குதிரைப் பேரம் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம்' எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' சபையில் பலத்தை நிரூபிக்க நமக்குத்தான் முதல் வாய்ப்பு கிடைக்கும். இதையே காரணமாக வைத்து, அனைத்து எம்.எல்.ஏக்களையும் நம் பக்கம் திசை திருப்புவோம்' என எதிர்பார்த்துக் காத்திருந்தார் பன்னீர்செல்வம். அவருடைய நம்பிக்கை ஈடேறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கத் தடை விதித்து, முன்னாள் அமைச்சர் செம்மலை தொடர இருந்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது. 'இப்படியொரு சூழல் உருவாகும்' என ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் உள்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. " சட்டசபையில் எடப்பாடியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் 50 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சசிகலாவுடன் மோதல் போக்கு தொடங்கிய நாட்களில் இருந்தே தனக்கான அணியை வலுவாக்கிக் கொண்டார் பன்னீர்செல்வம். இதை அறிந்துதான் கூவத்தூர் விடுதியில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுத்தார் சசிகலா. அவர்கள் தரப்பில் கொடுத்த வாக்குறுதிகளையும் தாண்டி, எடப்பாடிக்கு எதிராகவே அவர்கள் வாக்களிப்பார்கள்" என விவரித்த ஓ.பி.எஸ் அணியின் நிர்வாகி ஒருவர்,
" தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் மைத்ரேயன் கொடுத்த புகார் மிக முக்கியமானது. கட்சி சட்டவிதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. இதையொட்டி ஆணையத்தில் சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில், சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அளிக்கப்பட்ட புகாரில், ' அ.தி.மு.கவின் சட்ட விதிகளில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே கிடையாது. அந்த வகையில், அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவியும் செல்லாது. கூவத்தூர் சொகுசு விடுதியில், சசிகலா கூட்டிய கூட்டங்களும் செல்லாது. அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமனமே செல்லாது. அப்படிப் பார்த்தால், சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய முடியாது' எனத் தெரிவித்திருக்கிறார். தற்போதும் அவைத் தலைவர் என்ற முறையில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதியை மதுசூதனன் அறிவிப்பதற்கு உரிமை உள்ளது. தேர்தல் வந்தால் அ.தி.மு.க தொண்டர்கள் எங்களைத்தான் தேர்வு செய்வார்கள். சபையிலும் எடப்பாடியால் பலத்தை நிரூபிக்க முடியாது. கட்சி அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் முழுதாகக் கைப்பற்றுவோம். அடுத்து வரக் கூடிய நாட்களில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை சசிகலா தரப்பினர் எதிர்கொள்ள இருக்கின்றனர்" என்றார் விரிவாக.
" பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்க அழைத்தார் ஆளுநர். எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானவர்கள் பன்னீர்செல்வம் பக்கம் வரவில்லை. இதனால் பா.ஜ.க மேலிடம் அதிருப்தியில் உள்ளது. அவர்கள் கண்முன் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஓ.பி.எஸ்ஸை பலப்படுத்தும் வேலைகளைத் துரிதப்படுத்துவது; அது சாத்தியப்படாவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவது. இதையொட்டி, சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத அளவுக்கு எடப்பாடிக்கு சிக்கலை உருவாக்கும் வேலைகள் வேகமெடுத்துள்ளன.
எடப்பாடி தரப்பில் இருந்து ஏழு எம்.எல்.ஏக்களைக் கொண்டு வந்துவிட்டாலே அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. ' எங்கு பெரும்பான்மை உள்ளதோ, அந்தப் பக்கம் எங்கள் ஆதரவு இருக்கும். எம்.எல்.ஏ பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தில் உள்ளனர். வரக் கூடிய நாட்களில் எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதே பழனிச்சாமிக்கு பெரும்பாடாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆட்சி கலைவதையே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தேர்தல் வந்தாலும், அ.தி.மு.க சிதறிக் கிடப்பதால் பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியமைக்க முடியும் என தி.மு.க தரப்பில் நம்புகின்றனர். சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நாளுக்காக காத்திருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.