எவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிசாமி?!' - எம்.எல்.ஏக்களை வதைக்கும் '88' சென்டிமெண்ட்
தமிழக சட்டப் பேரவையில் நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ' அ.தி.மு.கவின் ஒவ்வொரு எம்.எல்.ஏவிடமும் நேற்று இரவு உருக்கமான வேண்டுகோள் வைத்தார் பழனிசாமி. ' பன்னீர்செல்வம் அளவுக்கு அவர் நிதானித்து ஆட்சி நடத்துவாரா?' என்ற கேள்விகளும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழக அரசியல் களத்தில் 11 நாட்களாக நீடித்துவந்த குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று பதவிப்பிரமாணம் முடிந்த கையோடு, பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. " ஒரு வாரமாக கூவத்தூர் ரிசார்ட்டில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு நேற்று கொண்டாட்டமான நாளாக அமைந்துவிட்டது. பெண் எம்.எல்.ஏக்களில் பலர் உற்சாக நடனம் ஆடினர். வழக்கத்தைவிட, இரவு நெடுநேரம் உற்சாகத்தில் மிதந்தனர் எம்.எல்.ஏக்கள். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் தனித்தனியாகச் சென்று சந்தித்தார் பழனிசாமி. அவர்களிடம், ' கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததால், நம்மால் சாதிக்க முடிந்தது. சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் வந்து சேரும்' என உருக்கமான வேண்டுகோள் வைத்தார். ' சபையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?', ' நம்மை சீண்டிப் பார்க்கும் வேலைகள் நடந்தாலும் பொறுமை காக்க வேண்டும்' என ஆலோசனைகளை வழங்கினார். எம்.எல்.ஏக்கள் பலரும், ' நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவுசெய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். பலத்தை நிரூபிக்க முடியாமல் போனால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். இன்னொரு தேர்தல் வருவதற்கு நாங்கள் விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளனர். இதன்பிறகே, சீனியர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தக் கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
" எம்.எல்.ஏக்களில் சிலரை தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் அணியினர் தீவிரமாக வேலைபார்க்கிறார்கள். '15 நாட்கள் வரையில் காத்திருந்தால், நிலைமை கைமீறிப் போய்விடும்' என்பதால்தான், நாளையே பலப்பரீட்சைக்கு இசைவு தெரிவித்தார் எடப்பாடி. வாக்கெடுப்பில் நாளை அவர் வெற்றிபெற்றாலும், எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவரலாம். எம்.எல்.ஏக்களைத் தக்கவைப்பதே அவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்" என விவரித்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " சபையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் பலம் 98 ஆக இருக்கிறது. ஓ.பி.எஸ் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனச் சொல்கின்றனர். மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க இருக்கிறார். தற்போது எடப்பாடி அணியில் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என்கின்றனர். ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் எதிர்த்து வாக்களிக்க இருக்கிறது. எடப்பாடி தோற்றுவிட்டாலும், அடுத்து யாரை அழைப்பது என்பதை ஆளுநர்தான் முடிவுசெய்ய வேண்டும். தற்போதுள்ள சூழலில், எடப்பாடிபழனிசாமி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால், அதற்குப் பிறகு அவர் எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன" என்றவர்,
" பன்னீர்செல்வம் அளவுக்கு போயஸ் கார்டனை அனுசரித்து நடந்துகொண்டவர்கள் மிகவும் குறைவு. அவர்களின் அதிகாரத் தோரணைக்கு முன்னால், 'எடப்பாடி எவ்வளவு நாள் தாங்குவார்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலமைச்சர் பதவியில் அமர்ந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கு என்ன மரியாதை கொடுக்கப்பட்டதோ, அதே நிலைதான் எடப்பாடிக்கும் தொடர வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், பன்னீரைப் போல் எடப்பாடி கடந்து போக மாட்டார். அவருக்குப் பொறுமை என்பது கிடையாது. பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும்போதும், சீனியர் அமைச்சர்கள் அவரை ஒரு பொருட்டாக மதித்தது கிடையாது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.
உடனே எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், ஜல்லிக்கட்டு தொடர்பாகப் பேசினார். இதைக் கண்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள், ' முதல்வர் பேசிவிட்டு அமர்ந்த பிறகு, அமைச்சர் எழுந்து பேசுவது மரபு அல்ல. இதே இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் நீங்கள் பேசியிருப்பீர்களா? முதலமைச்சருக்கு உண்டான மரபைக் காப்பாற்றுங்கள்' எனச் சத்தம் போட்டனர். 'முதலமைச்சர் பதவியை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என்பதற்கு இது ஓர் உதாரணம். சசிகலாவை முதல்வர் பதவியில் அமரவைக்க முடியாத கோபத்தில் அவரது உறவினர்கள் இருக்கிறார்கள். எடப்பாடிக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைப்பதையும் அவர்கள் ரசிக்க மாட்டார்கள். சொந்த சமூகத்தின் அழுத்தத்திற்கும் செவிசாய்க்கவேண்டிய இடத்தில் எடப்பாடி இருக்கிறார். ' பன்னீரைப் போல அவர் பவ்யத்தோடு பதவியில் அமர்ந்திருப்பாரா?' என அ.தி.மு.க நிர்வாகிகளே கேள்வி எழுப்புகின்றனர்" என்றார் விரிவாக.
எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, 88-ம் ஆண்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அப்போது ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானபோதும், அடுத்து வந்த நாட்களில் ஆட்சிக் கலைப்பு அரங்கேறியது. 'அதேபோல் இப்போதும் நடந்துவிடுமா?' என்ற சென்டிமென்ட் அச்சமும் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களை வாட்டிவருகிறது.
No comments:
Post a Comment