எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முடிவு ஏன்? நட்ராஜ் பரபரப்பு பேட்டி
ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களின் விருப்பப்படியே நாளை நடக்கும் வாக்கெடுப்பில் வாக்களிப்பேன் என்று நட்ராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே முதல்வராகத் தொடர முடியும். இந்தச் சூழ்நிலையில், கூவத்தூர் முகாமுக்குச் செல்லாமல் மயிலாப்பூர் தொகுதி அலுவலகத்தில் மக்களின் குறைகளைக் கேட்டறியும் பணியில் ஈடுபட்டார் முன்னாள் டி.ஜி.பி.யும் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ். அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் அணியிலிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா. க.பாண்டியராஜன் சந்தித்துப் பேசினார். அப்போதே அவர் பன்னீர்செல்வம் அணிக்கு வரவுள்ளதாகத் தகவல் பரவியது. இதை பாண்டியராஜனும் சூசகமாக உறுதிப்படுத்தினார்.
முதல்வர் பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நட்ராஜ் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நீங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வருகிறதே?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் முதலில் இருந்தே கட்சி இரண்டாகப் பிளவுப்படக் கூடாது என்று சொல்லி வருகிறேன். அதுவே என்னுடைய விருப்பம். இரண்டு பேரும் இணைய வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மக்கள் தங்களின் உணர்வுகளை என்னிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு மதிப்பளிக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
நீங்கள் நாளை நடக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொள்வீர்களா?
மக்களின் விருப்பம்படியே நான் வாக்களிப்பேன்
மக்கள் என்ன கருத்தை உங்களிடம் தெரிவித்தார்கள்?
பழையபடி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு என்று சொல்லலாமா?
அப்படி நீங்கள்தான் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்சி இரண்டாக உடையக்கூடாது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நட்ராஜ் வாக்களித்தாலும் அல்லது வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்றாலும் அது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான முடிவை ஏற்படுத்த வழிவகுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்காத எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை இழப்பார்கள் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எச்சரித்துள்ளார். இதனால், நட்ராஜ் எம்.எல்.ஏ. எடுக்கும் முடிவுக்குப் பிறகு, அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக சசிகலா அணியினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment