சபாநாயகருடன், பன்னீர்செல்வம் அணியினர் திடீர் சந்திப்பு!
சபாநாயகர் தனபாலை, பன்னீர்செல்வம் அணியினர் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்துவைத்ததோடு, பதினைந்து நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 18-ம் தேதி (நாளை) நடைபெறும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதின் நேற்று அறிவித்தார். முதல்வர் பழனிசாமி, நாளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று திடீரென சந்தித்துப் பேசினர்.
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று எம்.எல்.ஏ.க்கள் மாஃபா பாண்டியன், செம்மலை மற்றும் பொன்னையன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது, அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment