பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அடுத்த அறையில் ‘சயனைடு’ மல்லிகா!
பெங்களூரு சிறையில் சசிகலா பக்கத்து அறையில் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கைதி உள்ளார். ஆறு பெண்களை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.. நீதிபதி அஷ்வத் நாராயணா முன்பு ஆஜர் படுத்தப்பட்ட சசிகலாவிடம் நீதிபதி சில விஷயங்களைக் கேட்டார். ‘அபராதத் தொகை கட்டுகிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பினார்.' சொத்துக்கள் வழக்கில் இருப்பதால் இப்போது கட்டவில்லை' என அவரது வழக்கறிஞர்கள் பதில் அளித்தனர். சில ஆவணங்களில் கையொப்பமிட்ட பின்னர் சசிகலா பத்துக்கு பன்னிரெண்டு அளவுள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.
விமானத்தில் செல்லாமல் காரிலேயே பெங்களூரு வரை பயணித்ததால் சோர்வாக இருந்த சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. சோகமாகவும் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு சிறையில் சசிகலா உணவுக்குப் பின், கொஞ்சம் பழங்களையும் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மாத்திரைகள் மற்றும் சில ஆயுர்வேத மருந்துகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்.
சசிகலா இருக்கும் அறைக்கு அடுத்த அறையில்தான் 'சயனைடு' மல்லிகா என்ற பயங்கரமான பெண் கைதி உள்ளார். இவரது இயற்பெயர் கெம்பம்மா. கொலை செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டு காலமாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சயனைடு கலந்து பெண்களை கொலை செய்திருக்கிறார். அதனால்தான் பெயருடன் அடைமொழியாக சயனைடு சேர்ந்துள்ளது. கர்நாடகாவில் இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன.
கெம்பம்மா தொடக்கத்தில் சிட்பண்ட் பிசினசில் ஈடுபட்டார். அதில் நஷ்டம் ஏற்பட்டுவிட, அவரது கணவர் கெம்பம்மாவை விட்டு விட்டு ஓடி விட்டார். பணம் போட்டவர்களுக்கு கெம்பம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து 1999-ம் ஆண்டு முதல், குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார்.
ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடத்தில் பேசுவார். நம்பும் அப்பாவி பெண்களிடம் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்குத் தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார். ஆறு பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் ‘சயனைடு மல்லிகா’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த முறை சசிகலா, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போதும் மல்லிகா சிறையில்தான் இருந்தார். அப்போது ஜெயலலிதாவைச் சந்திக்க சயனைடு மல்லிகா ஆசைப்பட்டார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். தற்போது சசிகலா அறைக்கு அருகே உள்ள அறையில் சயனைடு மல்லிகா இருக்கிறார்.
அதே வேளையில், சசிகலாவுக்கு அறை மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன. சசிகலா வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்படலாம். முதல் வகுப்பு அறையில் ஒரு மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி இருக்கும். தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரந்தோறும் இரு முறை அசைவ உணவு வழங்கப்படும். காலை உணவாக சப்பாத்திக்கு அரை லிட்டர் சாம்பார், கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி , ராகி இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.
No comments:
Post a Comment