Thursday, February 16, 2017

தமிழகத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... மிரட்டும் செக்‌ஷன் 356

vikatan.com

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம்


தமிழகத்தில் 12 நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் மறைந்து ஓரளவு தெளிவான சூழல் தென்படத்துவங்கியிருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரிய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், பிரிவு 356ன் படி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாக சொல்லப்படுகிறது.



356 பிரிவு என்றால் என்ன?

ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம்.

இந்தியாவில் ஆட்சி கலைப்பு பல முறை நடந்திருக்கிறது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலமுள்ளதாக சொல்லப்பட்ட சூழலில் கூட, உட்கட்சி பிரச்னை, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை காரணம் காட்சி ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை கொடுக்காமலும் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தோடு உள்ள ஒருவரை ஆளுநர் முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவரின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை மீது சந்தேகம் எழுந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோரலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெரும்பான்மையை முதல்வராக பொறுப்பேற்றவர் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று தரப்பினருக்கு பெரும்பான்மை நிரூபிக்க அவகாசம் கொடுக்கலாம். யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில் ஆளுநர் ஆட்சியை கலைக்க அறிக்கை அனுப்பலாம். இதையடுத்து ஆட்சியை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இது போன்ற சூழலில் ஆளுநர் செய்ய வேண்டியது இது தான்.



தலைக்கு மேல் கத்தி?

தற்போதைய சூழலுக்கு வருவோம். தமிழகத்தில் மொத்தமுள்ள 233 எம்.எல்.ஏ.க்களில் (ஜெயலலிதா மரணத்தால் ஒரு இடம் காலியாக உள்ளது). இதில் அ.தி.மு.க.வின் பலம் 135 எம்.எல்.ஏ.க்கள். இதில் 10 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 125 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு 117 பேர் தேவை. தற்போது 125 பேரின் ஆதரவு தனக்கு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் நிலையில், இதில் 10 பேர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றாலோ அல்லது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க மறுத்தாலோ எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்காமல் போகக்கூடும். அவ்வாறு 117 பேரின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில் அவர் ஆட்சி அதிகாரத்தை இழப்பார். அந்த சூழலில் மறுதரப்பு பெரும்பான்மையை ஆதரிக்க அனுமதி கோரும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். யாரும் பெரும்பான்மை ஆதரிக்காத பட்சத்தில் பிரிவு 356ன் கீழ் சட்டமன்றம் கலைக்கப்படும். இன்னும் பலர் தன்னை ஆதரிப்பார்கள் என பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என சொல்லப்படும் நிலையில், தமிழகத்தின் தலைக்கு மேல் கத்தியாக பிரிவு 356 தொங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை 4 ஆட்சி கலைப்புகள்

தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு என்பது புதியதல்ல. இதுவரை 4 ஆட்சி கலைப்புகளை தமிழகம் சந்தித்திருக்கிறது. கருணாநிதி தலைமையிலான ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும், ஜானகி தலைமையிலான ஆட்சி ஒருமுறையும் கலைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலில் கலைக்கப்பட்டது கருணாநிதி தலைமையிலான ஆட்சி தான். 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது நெருக்கடி நிலைக்கு எதிராக அப்போதைய முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்தார். நெருக்கடி நிலையை எதிர்த்ததை காரணம் காட்டி, 1976 ஜனவரி 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் அமலான குடியரசுத்தலைவர் ஆட்சியில் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையை எதிர்த்தது தான் முக்கிய காரணம் என சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க.வைத் துவக்கிய எம்.ஜி.ஆருக்கு இதன் மூலம் ஆக்கமும், ஊக்கமும் காங்கிரஸ் கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது.



எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பும், காரணமும்...

அடுத்து 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. 2 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதேபோல் இந்தியாவில் ஜனதா கட்சி ஆண்ட சில மாநிலங்களில் ஜனதா கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து 'மக்களவைத் தேர்தலில் தோற்று போன கட்சிக்கு மாநிலத்தை ஆளும் தார்மீக தகுதி இல்லை எனச்சொல்லி ஜனதா ஆண்ட மாநிலங்கள் உட்பட 9 மாநிலங்கள் கலைக்கப்பட்டன. அதில் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியும் கலைக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சியால் எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அதை மறுத்தார் கருணாநிதி. "9 மாநிலத்தை ஒட்டுமொத்தமாக கலைத்தார்கள். அதில் ஒன்றாக தமிழகமும் சிக்கிக்கொண்டது. நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை," என அதற்கு விளக்கம் சொன்னார். ஆனால் அதுவரை காங்கிரசுக்கு குறைவான இடம் கொடுத்த தி.மு.க., 1980 சட்டமன்ற தேர்தலில் சரிபாதி இடங்களை காங்கிரசுக்கு வாரி கொடுத்தது.



வாக்கெடுப்பின் போது வன்முறையால் ஆட்சிக் கலைப்பு

தொடர்ந்து 1988-ம் ஆண்டு ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. 1987 இறுதியில் எம்.ஜி.ஆர். இறக்க, முதல்வராக பொறுப்பேற்றார் ஜானகி. யார் முதல்வர் என்பதில் அதிகார மோதல் ஏற்பட... ஜெயலலிதா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜானகிக்கு எதிராக நின்றனர். இதனால் ஜானகிக்கு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரும்பான்மை நிரூபிக்க பேரவை கூடியபோது, பேரவையில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்றதாக சொல்லப்பட்டாலும், பேரவையில் நடந்த வன்முறையால் ஆட்சி கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓராண்டுக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையேயான காலத்தில் மாநாடு நடத்தி, கட்சியை வலுப்படுத்தி காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவியது.



ஆளுநர் அறிக்கையின்றி கலைக்கப்பட்ட கருணாநிதி ஆட்சி

கடைசியாக 1990-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதற்கு தி.மு.க. ஊக்கமளிக்கிறது' என தி.மு.க. மீது புகார் கூறப்பட்டது. தி.மு.க. அரசு பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமளிப்பதால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 'பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசின் நடவடிக்கை தொடரும்' என அப்போதைய பிரதமர் சந்திரசேகர் நேரடியாக எச்சரித்தார். 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கும், தி.மு.க.வுக்குமிடையே கூட்டு இருக்கிறது. தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் கோலோச்சுகிறார்கள்' என்றார் ராஜீவ்காந்தி.

உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகர், "இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான உல்ஃபாவுக்கு தமிழ்நாட்டில் முகாம்கள் இருக்கிறது. தமிழக அரசுக்கு உளவுத்துறை வழங்கிய ரகசிய தகவல் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்பட்டது," என புகார் தெரிவிக்க கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு அதிகரிக்க தி.மு.க. அரசு அனுமதித்து விட்டது என அதற்கு காரணம் சொல்லப்பட்டது.

மாநில அரசு மீது ஆளுநர் அறிக்கை கொடுக்காமல் ஆட்சி கலைக்கப்பட்டது இதுவே முதல் முறை. அப்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கை கொடுக்க மறுத்தார். ஆளுநர் அறிக்கை அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ என சட்டத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின்னர் 1991 தேர்தலில் அ.தி.மு.க. உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

இப்போது என்ன ஆகும்?

இப்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை கோர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையில் தோல்வி ஏற்படும் பட்சத்தில் அல்லது சட்டம் ஒழுங்குப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஆட்சி கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன என்கிறார்கள் சட்ட ஆலோசகர்கள். தமிழகத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது பிரிவு 356 எனும் கத்தி.

இன்னுமொரு ஆட்சிக்கலைப்பை தமிழகம் எதிர்கொள்ளுமா? அல்லது நிலையான ஆட்சியை ஆளும் அரசு உறுதி செய்யுமா என்பது தான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி. அடுத்த 15 நாட்களும் இதை நோக்கிய பரபரப்புடனே இருக்கும்.

- ச.ஜெ.ரவி,

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...