Thursday, February 16, 2017

இப்படிதான் முதல்வர் ஆனார் எடப்பாடி பழனிசாமி...!

vikatan.com

அரசியல் பரமபதத்தில் ஏணியில் ஏறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் ஜெயலலிதா மறைவின் போதே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று முணுமுணுக்கப்பட்டது. பின் அந்த சொற்கள் காற்றில் கரைந்து போனது. அதன்பின் தமிழக அரசியல் களத்தில் நடந்த நிகழ்வுகள் அந்த சொற்களை உயிர்ப்பித்து, அவரை முதல்வராக அரியணை ஏற்றி இருக்கிறது.

சரி... யார் இந்த எடப்பாடி பழனிசாமி... எப்படி பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல்வர் பதவிக்கு முன்னேறினார்...? என்ற கேள்விகளுக்கான பதில் பின்வரும் சில பத்திகளில்...

‘குலக்கல்வித் திட்டம்... பழனிசாமி’

ஐம்பதுகளின் மத்திய காலம், தமிழகமே ராஜாஜி அறிமுகப்படுத்த முனைந்த குலக்கல்வித் திட்டத்தால் அல்லோலப்பட்டது. தமிழகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராஜாஜி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் காரணமாக இருந்தது. 1954 -ம் ஆண்டு காமராஜர் மதராஸ் மாகாணத்துக்கு முதல்வராக பொறுப்பேற்றார். இப்படி தமிழகம் தகித்து, தணிந்த சூழலில் தான் 1954 -ம் ஆண்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ்.பழனிசாமி படிப்பில் சிறப்பு என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஆனால், படுமோசமானவர் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்தப்பின், ஈரோடு வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் படித்தார். படிக்கும் போதே எம்.ஜி.ஆர் மீது பிடிப்பு ஏற்பட்டது. அது அரசியல் பிடிப்பாக உருமாறி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை சரி... பிழைப்புக்கு என்ன செய்வது...?

“தொழில் வாழ்க்கை... அரசியல்... அமைச்சர்”

கல்லூரியில் படிப்பு முடித்த பின்னர், எடப்பாடியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வெல்ல உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்ல மூட்டைகளை வாங்கி சந்தைக்குக் கொண்டு சென்று கமிஷனுக்கு விற்பனை செய்து வந்தார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தார். பெரிதாக லாபம் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது தொழில் வாழ்க்கை. ஆனாலும், அரசியல் வாழ்க்கை உள்ளே அழுத்திக் கொண்டே இருந்தது.

செங்கோட்டையனைச் சந்திக்கிறார். அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறார். கோணேரிபட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு கிடைக்கிறது. 1989-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட்டும் கிடைக்கிறது. வெற்றியும் கிடைக்கிறது. மீண்டும் 1991-ல் சீட்டு வழங்கப்படுகிறது. மீண்டும் வெற்றி. அவருக்கு எல்லாம் சரியாகத்தான் சென்றது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு இல்லை. 1991 -96 காலக்கட்டம், ஜெயலலிதா மொத்தமாக கெட்டப் பெயர் சம்பாதித்த காலம். 1996 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைகிறார். மூன்று ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி கவிழ்கிறது. மீண்டும் 1999-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி அடைகிறார். மீண்டும் 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போதும் தோல்வி. 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போதும் தோல்வி. தொடர்ச்சியான தோல்விகளால் அவர் துவண்டுவிடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சியும் துவண்டுவிடவில்லை.

மீண்டும் 2011 -ல் வாய்ப்பு வழங்குகிறது. வெற்றி பெறுகிறார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகிறார். 2016- ல் மீண்டும் வாய்ப்பு.... மீண்டும் வெற்றி... மீண்டும் அமைச்சர் பதவி..

‘மன்னை விசுவாசம்... தேடி வந்த முதல்வர் பதவி’





இவ்வளவு வெற்றிகள் கண்டிருக்கிறார். அதுபோல், அத்தனை தோல்விகளையும் கண்டிருக்கிறார். எப்படி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த பதில்தான் மன்னார்குடி விசுவாசம். தொடக்க காலத்திலேயே சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அதனால்தான், செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்ட போதும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடு ஆகியவை மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் பிறகு கட்சியின் அனைத்து உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிசாமியே கவனித்து வந்தார். இவரின் விசுவாசமும், சசிகலா தரப்பு இவர் மீது வைத்த நம்பிக்கையும், ஜெயலலிதா இறந்தபோது, இவர் மேலும் முக்கியத்துவம் பெற காரணமானது. அப்போதே, இவர் பெயர் முதல்வர் பதவிக்காக சசிகலா தரப்பால் முன்மொழியப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது.

இப்படியான சூழலில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக திரும்ப... சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல.... இப்போது முதல்வர் ஆகி இருக்கிறார் பழனிசாமி.

ஹூம்... ஒரு முக்கியமான விஷயம்... சில தசாப்தங்களுக்கு முன், இவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், நில விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டார்கள். அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அந்த வழக்கில் தேடப்பட்டவர்களில் ஒருவர் தான் எடப்பாடி பழனிசாமி.


- விகடன்

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...