சசிகலாவின் சக்ஸஸ் திட்டம்! - எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்ளும் சவால்கள்
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா வகுத்த திட்டம் சக்ஸஸாகி விட்டது. அடுத்து, வரும் சசிகலாவின் அதிரடி முடிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல்வராகும் ஆசை ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. அதேபோல், சசிகலாவின் தேர்வாகவும் எடப்பாடி பழனிச்சாமியே இருந்தது. ஆனால் அதற்கான சூழ்நிலை இல்லாததால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை உடனடியாக பதவி ஏற்றது. ஜெயலலிதா, சிறைக்குச் சென்றபோது, முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். இது அவரது திறமைக்கு கிடைத்தது அல்ல. விசுவாசத்துக்கு கொடுக்கப்பட்ட பரிசு. ஆனால் அந்த விசுவாசத்தை ஓ.பன்னீர்செல்வம் கடைசிவரை சசிகலாவிடம் காட்டவில்லை. இதனால் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தகாலம் வரை நம்பிக்கையுள்ளவராக இருந்த பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அவரது மறைவுக்குப்பிறகு மாறியது. இதுதொடர்பாக பன்னீர்செல்வத்திடம் அவரது அரசியல் வழிகாட்டியான தினகரன் விசாரித்தார்.
சொத்துக்குவித்து வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் சிறைக்கு சென்றபோது, முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பலவகையில் ஆதாயம் அடைந்தனர். இந்தத் தகவலை ஜெயலலிதாவிடம் சொன்னபோது, ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் பன்னீர்செல்வம் மன்னிப்பு கேட்டதோடு சில வாக்குறுதிகளையும் கொடுத்தார். அந்த வாக்குறுதி அடிப்படையில் பன்னீர்செல்வத்தின் நெருக்கமானவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தன. இதன்காரணமாக கடந்த சட்டசபை தேர்தலில் கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று ஜெயலலிதாவிடம் வாதிட்டனர் சசிகலா தரப்பு. ஆனால் ஜெயலலிதா, பன்னீர்செல்வத்துக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி சீட் கொடுத்தார்.சசிகலாவின் அறிவுறுத்தலின்படி தான் நத்தம் விஸ்வநாதனுக்கும், வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பன்னீர்செல்வம் முதல்வரானதும் தன்னிட்சையாக செயல்படத் தொடங்கினார். குறிப்பாக மத்திய அரசின் கைப்பாவையானார். அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்று பா.ஜ.க., பன்னீர்செல்வத்துக்கு அசைமென்ட் கொடுத்தாக சொல்லப்படுகிறது. அதன்படி ராஜினாமா செய்து இரண்டு நாள்களுக்குப் பிறகு திடீரென சசிகலாவின் மீது பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார். பிறகு சசிகலாவிடமிருந்து கட்சியையும், எம்.எல்.ஏ.க்களையும் பிரிக்க பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க. பலவகையில் உதவியது. இது எல்லாம் தெரிந்த சசிகலா, ராஜதந்திரியாக செயல்படத் தொடங்கினார் என்று அவரது சக்ஸஸ் திட்டம் குறித்து விவரித்தார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், "எதிரணியிலிருந்த பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல வியூகங்களை அமைத்தார் சசிகலா. அதாவது, பன்னீர்செல்வத்தின் பலம், பலவீனம் என அனைத்தையும் அறிந்த சசிகலா, அதற்கேற்ப காயை நகர்த்தத் தொடங்கினார். சசிகலாவுக்கு செக் வைக்கும் வகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. சிறைக்குச் செல்வதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கூவத்தூரில் மூன்று நாட்கள் ஆலோசனை என்ற பெயரில் பாடமே எடுத்தார்.
அதில் பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து விளக்கமாக கூறினார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவரித்தார். இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் தொடர்பில் இருந்தவர்களும், பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமே அணி மாறினர். ஆனால் மற்ற அனைவரும் சசிகலாவுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் சிறைப்பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவலை பன்னீர்செல்வம் அணி பரப்பியது. இருப்பினும் சுயவிருப்பத்தோடு தங்கி இருப்பதாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் பன்னீர்செல்வத்துக்கு உதவிக்கரத்தை நீட்டினார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த வி.வி.ஐ.பி. ஒருவர். அவர் மூலம் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது. ஆனால் அதற்கு எல்லாம் ராணுவக்கட்டுப்பாடோடு செயல்படும் ஜெயலலிதா, சசிகலாவின் விசுவாசிகள் செல்லவில்லை. ஆளுநருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் காலதாமதமானது. எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் சசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
சிறைக்கு செல்வதற்கு முன்பு சசிகலா, கூவத்தூரில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது 'எம்.எல்.ஏ.க்களிடம் நீங்கள் எடுக்கும் முடிவு கட்சிக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கும் சாதகமாக இருக்க வேண்டும். பன்னீர்செல்வத்தைப் போல நீங்கள் யாரும் துரோகம் செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் உங்களில் பலருக்கு என்னுடைய சிபாரிசு பெயரில்தான் சீட் கொடுக்கப்பட்டதை யாரும் மறக்க மாட்டீர்கள். பன்னீர்செல்வத்தை நாம் சமாளித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் அ.தி.மு.கவை அழிக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. மெஜாரிட்டி இல்லாமல் போனால் பன்னீர்செல்வம், தி.மு.க. உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும். அப்போது பன்னீர்செல்வத்தின் அதிகார பலத்தால் நமக்கு என்ன வேண்டும் என்றாலும் நிகழலாம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நமக்குள் இருக்கும் ஒற்றுமையை தாரக மந்திரமாக மனதில் வைத்திருங்கள். உங்களுக்கு வழிகாட்ட டி.டி.வி. தினகரன துணை பொதுச் செயலாளராக நியமிக்கிறேன். அவரது வழிகாட்டுதலின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார். அவரது தலைமையில் அக்காவின் ஆசியோடு இன்னும் நான்கரை ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும். அக்கா இல்லாத இந்த நேரத்தில் மக்கள் பணியை சிறப்பாக செய்தால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடியும்' என்று கண்கலங்கினார். அடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப உறுதி கொடுத்தார் சசிகலா.
சசிகலாவின் உருக்கமான பேச்சும், அவரது வாக்குறுதியும் எம்.எல்.ஏ.க்களின் மனநிலையை மாற்றியது. இதன்பிறகே போலீஸார் விடுதிக்குள் விசாரித்த போதும் தைரியமாக பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் ஒரே பதிலைச் சொன்னார்கள். இதனால் போலீஸாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் புதிய அ.தி.மு.க சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தார் சசிகலா. சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை மிரட்ட கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆள்கடத்தல், மிரட்டுதல், சிறைப்பிடித்தல் என்ற பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. புகார் கொடுத்த சரவணன் எம்.எல்.ஏ.க்கு உண்மை என்ன என்று தெரியும். 15 நாட்கள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாகவே மெஜாரிட்டியை நிரூபித்து விடுவோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா.பாண்டிராஜன் பன்னீர்செல்வம் அணிக்கு சென்றதால் அந்த பதவிக்கு செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனை சரிகட்டவே , அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு ஆட்சி தொடரும் சமயத்தில் இன்னொரு திட்டமும் சசிகலாவிடம் இருக்கிறது. டி.டி.வி. தினகரன், தேர்தலில் போட்டியிட்ட பிறகு அவருக்கு முக்கிய பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்படும். மேலும் மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தொடர முடியும். அதற்கு செக் வைக்கும் வகையில் பன்னீர்செல்வம் தரப்பு சதுரங்க வேட்டையைத் தொடங்கி விட்டது. பன்னீர்செல்வம் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி. டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார். அந்தத்தகவலில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அவருக்கு கட்சியில் யாரையும் நீக்கவும், நியமிக்கவும் அதிகாரமும் இல்லை. மேலும் அ.தி.மு.க.வில் பெரும்பாலான தொண்டர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது. இவ்வாறு பன்னீர்செல்வம் வைக்கும் செக்கை சமாளித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
No comments:
Post a Comment