ரிலாக்ஸ், தமிழகத்துக்கு இந்த வருசம் கடும் கோடை இல்லை!
காலை 7 மணிக்கே அனலடிக்கத் தொடங்கி விட்ட நம்ம ஊர் வெயில் பற்றிச் சொல்ல நம்மிடம் நிறையப் புகார்கள் இருக்கலாம். ஆனால் நிஜத்தில் இந்தக் கோடையில் வெயில் அப்படி ஒன்றும் வெளுத்து வாங்கவில்லை என்கிறது தமிழ்நாட்டு வானிலை அறிக்கை. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு இப்போதைக்கு மிக நல்ல வானிலையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறதாம். பிற மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸில் வெயில் உச்சந்தலையை உருக வைத்துக் கொண்டிருக்க தமிழ்நாட்டில் விரும்பத்தக்க வானிலையே நிலவுவதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
வீட்டில் AC , மருத்துவமனைகளில் AC, அலுவலகம் சென்றால் அங்கும் AC, ஸ்டோர்களுக்குச் சென்றால் அங்கும் AC என்று குளுமையான வசதிகளுக்குப் பழக்கப் பட்டுப் போன மக்கள் இந்த வெயிலுக்கே இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்போது வரையிலும் சென்னையின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை இன்னும் தாண்டவில்லையாம். ஏன் தெரியுமா? கிழக்கிலிருந்து வீசும் காற்றிலிருக்கும் ஈரப்பதமும், தமிழகத்தைச் சூழ்ந்த கருமேகங்களில் பொதிந்துள்ள ஈரப்பதமும் சேர்ந்து தான் தமிழகத்தை கடுமையான வெப்ப அலைகளிலிருந்து இதுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதாம்.
கிழக்கிலிருந்து வீசும் குளிர்காற்றின் ஈரப்பதம் மற்றும் மேகப்பொதிகள் இரண்டும் தான் இதுவரையில் தமிழகம் மற்று இந்தியாவின் தென்பகுதி மாநிலங்கள் சிலவற்றை கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து தடுத்து காத்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின், காலநிலை ஆய்வு ஆராய்ச்சிப் பிரிவின் தலைமை அதிகாரி டி எஸ் பாய் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இது வரை வானிலை ஆய்வு மையங்களில் பதிவான அதிக பட்ச வெப்ப நிலையே சுமார் 40 டிகிரி செல்சியஸ் தான். பதிவான இடம் கரூர். கரூரை அடுத்து அதிக வெப்பநிலை நிலவக் கூடிய இடமாகப் பதிவானது சென்னை. வியாழன் அன்று நுங்கம்பாக்கத்திலிருக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஒப்பு நோக்கப்படும் இன்சாட்- 3டி செயற்கைக்கோள்கள் எடுத்தனுப்பும் OLR (அவுட்கோயிங் லாங் வேவ்) புகைப்படங்களின் அடிப்படையில் கணித்தால் தற்போது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடும் அனல் அலை பரவக் காரணம் அங்கு நிலவும் வலுவான அதிகபட்ச காற்றழுத்த தாழ்வு நிலையே ஆகும். இந்த உயர் காற்றழுத்த தாழ்வு நிலை தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை இந்த முறை புறக்கணித்து விட்டதால் மட்டுமே இப்போது வரை தமிழகத்தில் இனிமையான வானிலையே இப்போது வரை நிலவி வருவதாக வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் கூறுகின்றன.
இதைக் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப் படும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்று பார்த்தால், உயர் வளிமண்டல அழுத்தத்தில் உருவாகும் இத்தகைய கடுமையான வெப்ப அலைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்கும் போது அங்கே வளிமண்டல மேற்பரப்பில் இருக்கும் காற்றானது, தரையை நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்கிறார்.
மேற்குறிப்பிட்ட அதே காற்றழுத்த தாழ்வுநிலையால் தான் குறிப்பிட்ட இடங்களில் மேகங்கள் நகரமுடியாமல் ஒரே இடத்தில் பூமியின் மேற்புறத்தைச் சுற்றி ஒரு உரை போல தேங்குவதால், சூரிய ஒளி உட்புக முடியாமல், உள்ளிருக்கும் காற்றும் வெளியேற வகையின்றி இந்திய வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு அது வெப்பமாக உணரப் படுகிறது. அதைத் தான் வானிலை ஆய்வாளர்கள் வெப்ப அலைகள் என்கிறார்கள்.
புயல் எச்சரிக்கை மையத் தலைவரான எஸ். பாலசந்திரன் பேசுகையில், இது போன்ற வெப்ப அலைகள் உருவாக காரணம் ஒன்று மட்டுமே இருப்பதாகக் கருத முடியாது. இது போன்ற பல்வேறு காரணங்கள் இணைந்து தான் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, வெப்பநிலை, கூடுதல், குறைதல், மழை, புயல் போன்றவை நிகழ்கின்றன என்கிறார்.
மேலும் அவர்; 'காற்றின் திசை, தெளிவான வானம், ஈரப்பதம், புவியியல் இயக்கவியல் இவை ஒவ்வொன்றுமே காலநிலையைத் தீர்மாணிப்பதில் தத்தமது பங்கை செவ்வனே ஆற்றி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். மற்றபடி இங்கு எப்போதும் சமரசமான வானிலையே நிலவும். கடந்த காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டில் இது வரை அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை. மே முதல் வாரம் வரை வானிலை இதே விதத்தில் தான் நீடிக்கும்' என்றார்.
Article Concept Courtsy: New indian express.
Dailyhunt