Saturday, April 1, 2017

70 மாணவிகளை நிர்வாணமாக்கி மாதவிடாய் சோதனை... கொடூர குணம் கொண்ட 'வார்டன்' மீது வழக்குப் பதிவு!

கழிவறையில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அரசு மகளிர் விடுதி காப்பாளர் 70 மாணவிகளின் உடைகளை களைந்து, நிர்வாணமாக்கி, மாதவிடாய் சோதனை நடத்திய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் அரங்கேறியுள்ளது.
மனிதநேயமற்ற முறையில் இந்த சோதனை நடத்திய பெண் வார்டனை இடைநீக்கம் செய்த உத்தரப்பிரதேச அரசு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அரசு விடுதி
முசாபர்நகர் மாவட்டம், கதாவுளி நகரில் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிட அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டுவரும் அரசு விடுதியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஏறக்குறைய 90-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி விடுதியில், சுரேகா தோமர் என்ற பெண் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

ரத்தக்கறை
இந்நிலையில், கடந்த மாதம் 26-ந்தேதி விடுதியின் கழிப்பறையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதைப் பார்த்த வார்டன் சுரேகா தோமர் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளிடம் யாருக்கு மாதவிடாய் வந்தது என்று நாகரீகமற்ற கேள்வி கேட்டுள்ளார்.
70 பேரிடம் சோதனை
ஆனால், மாணவிகள் சொல்வதற்கு நாணப்பட்டு மறுத்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த சுரேகா தோமர், வயதுவந்த மாணவிகள் 70 பேரை தனியாகப் பிரித்து, தனித்தனியாக ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளார்.
அழுகை, எதிர்ப்பு
இந்த சோதனை நடக்கும் போது பல மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், சில மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தை உடனடியாக யாரும் பெற்றோர்களிடம் கூறவில்லை, வெள்ளிக்கிழமைதான் வெளியே கசிந்தது.
சஸ்பெண்டு
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள்  பள்ளிக்கு படையெடுத்து வந்து பள்ளிநிர்வாகம், தலைமை ஆசிரியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவம் மாவட்ட கல்வி அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சுரேகா தோமரை ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.
நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல், இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “ஊடகங்கள் மூலம் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சோதனை குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த வார்டன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
எப்.ஐ.ஆர்.
இதற்கிடையே மாணவிகளுக்கு இதுபோன்ற கொடூர சோதனை நடத்திய வார்டன் சுரேகா தோமர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பாக்ஸ் மேட்டர்......
நான் செய்தது சரிதான்...
வார்டன் சுரேகா தோமர் தனது செயலை நியாயப்படுத்தி கூறுகையில், “ நான் செய்தது இப்போது வரை சரிதான். ஏனென்றால், எனக்கு சுத்தம், ஒழுக்கம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. இந்த மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் எனக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் போல் கண்டிப்பான விடுதி காப்பாளர் தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.
பாக்ஸ் மேட்டர்...
விசாரணை நடத்தப்படும்...
தொடக்க கல்வி அதிகாரி சந்திர கேஷ் யாதவ் கூறுகையில், “வார்டன் சுரேகா தோமர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 3 துறைகள் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தும், புதிய வார்டனும் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இப்போது,மாணவிகளின் பெற்றோரை சமாதானப்படுத்தி, மீண்டும் மாணவிகளை திரும்ப அழைக்கப்போகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024