Saturday, April 1, 2017


எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம்?’ - மார்க்சிஸ்ட்டுகளை மிரள வைத்த தினகரன்
 #VikatanExclusive



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் அடிதடி காட்சிகளை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. தினகரன் ஆட்களும் பன்னீர்செல்வம் ஆட்களும் மோதிக் கொண்டிருக்க, ‘எங்கிருந்துதான் வருகிறது இவ்வளவு பணம்? ஆளும்கட்சி அதிகாரிகளே தேர்தல் பணியில் இருப்பதால், யாரும் எதையும் கண்டுகொள்வதில்லை' என ஆதங்கப்படுகின்றனர் சி.பி.எம் கட்சியினர்.

அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் தினகரனும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டாலும், அவர்களின் சின்னங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. தினகரனுக்காக முப்பது அமைச்சர்களும் அ.தி.மு.க எம்.பிக்களும் களத்தில் இறங்கியுள்ளனர். பண விநியோகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது' என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குத் தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப, அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு வேண்டப்பட்ட தேர்தல் பதிவு அலுவலர் விஜயகுமார், உதவி தேர்தல் அலுவலர் சேகர் ஆகியோரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இதை தினகரன் ஆட்கள் எதிர்பார்க்கவில்லை. தொகுதியின் பல பகுதிகளில் மதுசூதனன் ஆட்களோடு நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும்கட்சியினரின் மோதலைப் பொருட்படுத்தாமல் தொகுதிக்குள் வலம் வருகிறார் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன். இன்று மாலை சி.பி.எம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறார் அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

‘தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். “தொகுதிக்குள் ஏராளமான பணத்தை செலவு செய்கிறது தினகரன் அணி. பண விநியோகம் குறித்து தி.மு.க புகார் கூறினாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து அவர்களும் பேசி வருகின்றனர். வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார் தினகரன். அவையெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறி. ஏனென்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கீழ்மட்ட அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூத் வாரியாக மிகத் துல்லியமாக கணக்கெடுத்து விநியோகிக்கின்றனர். நேற்று பண விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கருணாமூர்த்தி என்பவரைக் கைது செய்துள்ளனர். இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில்தான் பணத்தை விநியோகித்து வந்தார்கள். அரசியல் கட்சிகள் புகார் கூறிய பிறகு, கோவில்களில் இருந்து இடத்தை மாற்றிவிட்டார்கள்.

மாநகராட்சி அதிகாரிகளே தேர்தல் அலுவலர்களாக இருப்பதால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வாகன தணிக்கைளையும் வேகப்படுத்தவில்லை. நேற்று மேட்டுத்தெருவில் உள்ள மாதாகோவில் பகுதிக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் விசாரித்தேன். 'தினசரி ஆளும்கட்சியின் அமர்ந்துள்ள பூத்துகளுக்குச் சென்று அமர்ந்தாலே, தினசரி தலைக்கு 300 ரூபாய் கொடுக்கின்றனர்' என்கின்றனர். 256 பூத்துக்கும் தலா 300 ரூபாய் என்றால், தொகையின் எண்ணிக்கையை அளவிடவே முடியாது. எங்கிருந்துதான் இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது? இங்குள்ள பெரும்பாலான மக்கள், அன்றாட சாப்பாட்டுக்கே கடுமையாக உழைக்கின்றனர். தொகுதிக்குள் எங்கள் கட்சிக்கென்று பொதுவான மரியாதை இருக்கிறது. இந்தப் பகுதியின் செயலாளராக இருந்த லோகநாதன், வேட்பாளராகியிருக்கிறார். மக்கள் பிரச்னைகளை ஏராளமாக முன்னெடுத்திருந்ததால், அவருக்கு இங்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. எளிய மக்களைப் பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கிவிட முடியும் என ஆளும்கட்சியினர் கணக்குப் போடுகின்றனர். அவர்களின் கணக்குகள் எல்லாம் தேர்தல் நாளில் தவிடு பொடியாகும்" என்றார் நிதானமாக.

சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வாகனங்கள் செல்வது மிகச் சிரமம். குறுக்குத் தெருக்கள் மிக அதிகம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளை களம் இறக்கியுள்ளனர். நாங்கள் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். தொகுதிக்குள் டோக்கன் கொடுத்துவிட்டு, தொகுதிக்கு வெளியில் பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதற்கொண்டு தங்கக்காசு வரையில் விநியோகம் நடக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி வருகிறோம். 'பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் தி.மு.கவும் ஊழல் கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள். இவர்களுக்கு எதிரான எங்கள் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்றார் உறுதியாக.


-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024