ஆர்.கே நகரில் 8,000 ரூபாய்க்கு கணக்கு சொல்லி சுண்டல் சாப்பிட்ட அ.தி.மு.க. பணிக்குழு! #MustReadFun
ஆர்.கே.நகரில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் பணிக்குழு, சுண்டல்காரருக்கு 8,000 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில், தினமும் ஒரு சுவாரஸ்யமான தகவல் நிகழ்ந்துவருகிறது. அதில், தண்டடையார்பேட்டையில் உள்ள வேட்பாளர் டி.டி.வி.தினகரனின் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் நடந்த ‘சுண்டல் கதை’ ரொம்பவே ருசிகரமானது!
தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்தான் வேட்பாளர்கள் டி.டி.வி.தினகரன், மருது கணேஷ், தீபா ஆகியோரின் தேர்தல் அலுவலகங்கள் உள்ளன. அதில், டி.டி.வி.தினகரனின் தேர்தல் அலுவலகத்தின் அருகில் சென்றாலே, சுண்டல் வாசனை மூக்கைத்துளைக்கும். காலையிலும் மாலையிலும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு சுண்டல் பொட்டலங்கள் சப்ளை செய்யப்படும். இதற்காக, சுண்டல்கடைக்காரரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர்.
சுண்டல் இலவசம் என்பதால், மாலையில் ருசியான சுண்டலைச் சாப்பிடுவதற்கென்றே கட்சியினர் அதிகளவில் அங்கு கூடுவார்களாம். இதனால், சில நாட்களாக சுண்டல் கணக்கு எகிறியுள்ளது. இது, சம்பந்தப்பட்ட முன்னாள் பெண் அமைச்சர் தரப்பினருக்கு கையைக்கடித்துள்ளதாம். இதனால், சுண்டல் கணக்கை தினமும் முடிக்காமல், வாரத்தில் ஒருநாள் முடிப்பதாக சுண்டல் கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார் முன்னாள் பெண் அமைச்சர். ஆனால், சுண்டலுக்கு ஒழுங்காக பணம் கொடுக்கவில்லையாம். எப்படியும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வழக்கம்போல சுண்டல் பொட்டலங்களைக் கொடுத்துவந்தார் சுண்டல்கடைக்காரர். சில தினங்களுக்கு முன்பு, சுண்டல்காரர் பணத்தைக் கேட்டபோது, அமைச்சர் தரப்புக்கும் கடைக்காரருக்கும் வாக்குவாதம் முற்றிவிட்டதாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'சி.எம். வரப்போகிறார். நாளைக்கு கொடுக்கிறேன், அந்தப்பக்கம் ஒதுங்கி நில்லு...' என்று ஒருமையில் பேசியிருக்கிறார், முன்னாள் பெண் அமைச்சர். வேறு வழியின்றி சுண்டல்காரரும், 'தின்ன சுண்டலுக்கு காசு கேட்டா... இப்படி கோவம் வருது, சி.எம். வாராரு... வேட்பாளர் வாராருன்னு சொல்லி துரத்திவிடுறாங்க..'என்று புலம்பியபடியே கிளம்பிச் சென்றிருக்கிறார். தற்போது வரை 8,000 ரூபாய் கணக்கு வருகிறதாம். சுண்டல்காரர், தேர்தல் அலுவலகத்துக்கே வருவதில்லையாம். புதிதாக சுண்டல்காரர் ஒருவர் மூலம் தேர்தல் அலுவலகத்தில் சுண்டல் பொட்டலங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இவருக்கு எவ்வளவு பாக்கி விழப்போகிறதோ... எனத் தெரியவில்லை. இந்த நிலையில் பழைய சுண்டல்காரர், வெறுப்பில், எங்கு சென்று இதைப் புகார்செய்வது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறாராம்!
- எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment