Saturday, April 1, 2017

நம்பிக்கையே மருந்து

By வாதூலன்  |   Published on : 01st April 2017 01:58 AM  |   

இரண்டு மாத முன்பு, கண் சிகிச்சை நிபுணரைச் சந்தித்தேன். சொட்டு மருந்து ஒன்றை சில நிமிடங்களுக்கொருதரம் விட்டு விட்டு, பிறகு உன்னிப்பாகப் பரிசோதித்தார். "உங்களுடைய பார்வை சரியாக இருக்கிறது. கண்ணாடி, "பவரை'யும் மாற்ற வேண்டாம். இமைப் பக்கம் அரிப்பதற்குக் காரணம், வயசால் தோல் வறண்டு போவதுதான்!' என்று சொல்லி, ஏற்கெனவே நான் பயன்படுத்தி வந்த "டிராப்ûஸ'யே மறுபடியும் பரிந்துரைத்தார்.

வெளியே வந்து, ரிசப்ஷனில் கட்டணம் கொடுப்பதற்காகக் காத்திருந்தேன். சில நிமிடம் பொறுத்து திரும்பின ஊழியர், ""இந்த மாத்திரை இரண்டு நாளுக்கு ஒரு முறை உட்கொள்ளச் சொன்னார். இதோ "டிராப்ஸ்' '' - நான் திகைத்துப் போய்ப் பார்த்தேன். புது சொட்டு மருந்து! ஊழியர், டாக்டர் பீஸ் தவிர, மருந்துகளுக்கும் கூடுதலாகத் தொகை பெற்றுக் கொண்டார்.

"என்னிடம் அப்படிச் சொல்லவில்லையே? டாக்டரை நேரில் பார்க்கலாமா?' என்று கேட்டேன். "அவர் வெரி பிசி!' என்று கூறிக் கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு, பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்தார். திரும்புகிற வழியில், மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கையில்,  கண் சிகிச்சை மையத்திலிருந்து ஓர்  அவசர அழைப்பு! "ஸாரி சார்! வேறு நோயாளிகளுக்குத் தர வேண்டியதை உங்களுக்கு மாற்றி தந்து விட்டோம், உடனே வாருங்கள்!'

ஏற்கெனவே உடல் உபாதை; பசி; சில மணி நேரம் தொடர்ந்து அசையாமல் உட்கார்ந்திருந்ததால் அயர்ச்சி; எனக்குக் கோபம்தான் மேலோங்கியது. ஆனாலும் என்ன செய்ய? திரும்பவும் ஆட்டோவில் சென்று மருந்துகளைத் திருப்பிக் கொடுத்தேன். அதிகப்படி கட்டணத்தைத் தந்துவிட்டார், மன்னிப்பு கேட்டு. இது டாக்டரின் தவறா அல்லது பணியாளர்களின் அவசரத்தினால் விளைந்த கோளாறா என்று தெரியவில்லை.
"நல்ல காலம்! வேறு மருந்து கண்ணில் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? விடுங்கள்' என்று மனைவி சமாதானப்படுத்தினாள்.

சில நாட்கள் கழித்து வேறு ஓர் உபாதைக்காக மருத்துவமனையிலேயே தங்க நேர்ந்தது, சேர்ந்த மறுநாள், செவிலிப் பெண்மணி காலை ஏழு மணிக்கு மாத்திரையொன்றை உட்கொள்ளும்படி சொன்னாள், பார்த்ததும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! ஏனெனில் அது வைட்டமின் மாத்திரை. "காலை சிற்றுண்டிக்குப் பிறகு தானே போட்டு கொள்ள வேண்டும்?' என்று கேட்டேன்.
அந்த நர்ஸ் மருத்துவச் சீட்டைக் காண்பித்தாள் "டாக்டர் அப்படித்தான் எழுதி இருக்கிறார்' என்று சொல்லி, பிடிவாதமாக, அசையாது நின்றார்.

நான் மருத்துவக் கோப்பை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு, பழைய சீட்டைக் காண்பித்து, அதில் 9 ஏ.எம். என எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன். அப்புறம்தான் அவள் திரும்பிப் போனார், அதுவும், தயக்கத்துடன். இதே மாதிரி, மனையை விட்டு நீங்கும்போது எழுதின சீட்டில், மாலை என்பதற்குப் பதில் காலை என்று ஒரு மாத்திரையை எழுதி விட்டார். மீண்டும், நேரில் போய் மாற்றித் திருத்தி வந்தேன்.

பொதுவாக மருத்துவர்கள் நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 15 நோயாளிகளையாவது பார்க்கிறார்கள். இது தவிர, ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள ஐ.சி.யூ. நோயாளிகள், பிற நோயாளிகள் ஆகியவர்களையும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு, நோயாளியின் பழைய மருந்துச் சீட்டுத்தான் ஆதாரம். நோயின் தன்மையை மருத்துவ மொழியில் சுருக்கி எழுதியிருப்பார்கள்.

அந்தச் சீட்டைப் பார்த்த பின், விசாரித்து, தற்போதுள்ள நிலைமை பற்றித் தெரிந்து கொண்டு, புது மருந்துச் சீட்டு எழுதித் தருவார்கள். அது போல் செய்கிற போது, சிலவற்றை விட்டு விடச் சாத்தியக் கூறுகள் உண்டு. நோயாளிகளான நாம்தான் சரி பார்த்து, ஐயம் இருந்தால் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
இவ்வளவு தூரம் மருத்துவர்களைப் பற்றிச் சொல்லிய பிறகு, நோயாளிகளைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? ஊடகச் செய்திகள், செவி வழிச் செய்திகள், இணையதளத் தகவல்கள் அனைத்தும் நோயாளியைக் குழப்புகின்றன.

ஏடுகளில் வருகிற மருத்துவக் குறிப்புகள் பொதுவானதே, அவை மாறிக் கொண்டே இருக்கும். அண்மையில் உப்பு குறித்து வெளியான செய்தி ஓர் உதாரணம். ("குறைவாக உப்பு சேர்த்தால் இதய நோய் வரலாம்') இது போல் சாக்லேட் உட்கொள்ளுவது, குடிநீர் அருந்துவது போன்ற பல விஷயங்கள். ஆராயச்சியாளர்கள் ஓர் உணர்வையோ, மருந்தையோ இன்று நல்லது என்பார்கள். மறு மாதமே அது கெட்டது எனக் கூறுவார்கள்.

என் நண்பர் ஒருவரின், வயிற்றுக் கோளாறுக்கு ஒரு புரிபடாத சோதனையை நிபுணர் எடுக்கச் சொல்லியிருக்கிறார். நண்பர் மறுநாளே கணினியில் பார்த்து அது புற்றுநோய்க்கு அறிகுறி என்று முடிவே செய்து விட்டார். டாக்டரைச் சிலநாள் கழித்துச் சந்தித்தபோது அவர் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

"உங்களை யார் அதைப் பார்க்கச் சொன்னது?' பிறகு, ஓரளவு தணிந்து, மறுபடியும் பரிசோதித்து "உங்களுக்கு புற்றுநோய் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. இப்போதைக்கு வேறு மாத்திரை எழுதி தருகிறேன்' என்றார். அவற்றை உட்கொண்டு நண்பர் தெம்புடன் இருக்கிறார்.

வேறு சிலர் ஒரு படி மேலே சென்று, மருத்துவர்களுக்கே யோசனை கூறுவார்கள். "ஒரு சி.டி. ஸ்கேன் எடுக்கலாமே? யு.எஸ். அப்டமன் பார்க்கலாமே' என்று தங்கள் மருத்துவ "அறிவை'(?) வெளிப்படுத்துவார்கள். இது தேவையா?

ஒரு மருத்துவ நிபுணரின் இல்லத்தில் இருந்த பலகையில் பார்த்தேன். "மருத்துவர்களை நம்புங்கள்'. இது முற்றிலும் உண்மை, அவநம்பிக்கையில் ஏதாவது விபரீதக் கற்பனை செய்தால், அன்றாட வாழ்வே நரகமாகி விடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024