உலகம் வியக்கும் வகையில் தமிழை உச்ச உயரத்திற்கு உயர்த்திய ஆளுமைகள் காலந்தோறும் இருந்துள்ளனர். நம் காலத்து ஆளுமையில் அத்தகையத் தகுதியை மிகுதியாய் பெற்று திகழ்ந்த மேதை கவிக்கோ அப்துல் ரகுமான் என்றால் மிகையில்லை.
வாழ்வின் ஒவ்வொரு கணமும் கவித்துவம் ததும்ப, தத்துவச் சுடர் வீசி நிறைவாழ்வு வாழ்ந்த அவர், நேற்று (மே 2, 2017) தன் சுவாசிப்பையும் வாசிப்பையும் நிறுத்தி பிரியா விடை பெற்றுள்ளார்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், 9.11.1937 அன்று உயிரெழுத்தால் உதித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஹதியும், பாட்டனார் அஷ்ரஃபும் மிகச் சிறந்த உருதுக் கவிஞர்கள். தான் பயின்ற மதுரை தியாகராசர் கல்லூரியை தனது இரண்டாம் கருப்பை என்பார் கவிக்கோ.
கவித்துவம் இவரது பால்யத்திலேயே பரிணமித்துள்ளது. பள்ளி மாணவனாக 14 வயதில் இவர் எழுதிய 'காதல் கொண்டேன்' என்ற கவிதை 'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகியுள்ளது. இவருக்குள் ஊற்றாய்ச் சுரந்த கவியுணர்வைக் காட்டாற்று வெள்ளமாய்க் கட்டுடைத்து பிரவகிக்கச் செய்தது ரமலான் மாதத்து சஹர் (வைகறைக்கு முந்தைய) பொழுது பாடல்களே.
நோன்பு நோற்பதற்காக மக்களை துயிலெழுப்பி, உணவுண்ணச் செய்வதற்காக, மதுரை சந்தைப் பேட்டையில் பாடும் சிறுவர் குழாமுக்குத் தலைமை ஏற்று, தந்தையும் பாட்டனும் எழுதித் தந்தப் பாடல்
களைத் தெருக்களில் பாடிச்சென்றபோது, கவியுணர்வும் பெரும் தாக்கத்தோடு வளர்ந்ததாக 'கவிதை என் பிதுரார்ஜிதம்' (1994) என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதே ரமலான் மாதத்தில், கவிக்கோ தன் மூச்செழுத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது வருத்தம் தோய்ந்த பொருத்தம் ஆகும்.
'நான் கவிதை சமைப்பதற்காக படைக்கப்பட்டேன். காலம் என்னை அப்படித்தான் உருவாக்கியது. அட்சயப் பாத்திரம்போல இளம்வயதிலிருந்தே நான் கவிதைகளைப் பிச்சையாகப் பெற்றேன். கவிதைகளையே பரிமாறினேன். கவிதைக்குப் புறம்பான எதுவும் என்னில் கலந்துவிடாமல் சூழல் என்னைப் பத்திரமாகக் காப்பாற்றியது' என்று குறிப்பிடும் கவிக்கோ, தமிழிலக்கிய உலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வியக்கத் தக்கதாகும்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால் வீதி' தமிழில் மீமெய்மையியல் (sur-realism) கோட்பாட்டின் முதல் பரிசோதனை முயற்சியாகும்.
இத்தொகுப்பு ஏற்படுத்திய அதிர்வும், அதன் விளக்கமாக இவர் எழுதிய 'மரணம் முற்றுப்புள்ளி அல்ல' என்ற கட்டுரைத் தொகுப்பும் புதுமைத் திறத்தால் புல்லரிப்பு தருபவை. 'சையத் அப்துல் ரகுமான் எழுத்துலகிலும், பேச்சுலகிலும் இணையற்றவராய் திகழும் திறன் பெற்றவர்' என்று இவரை மாணவப் பருவத்தில் வாழ்த்தி எழுதியுள்ளார் செந்தமிழ் மாமணி சி. இலக்குவனார். அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமியார் உள்ளிட்ட பேரறிஞர்களிடம் பிரியத் தமிழ் பெற்று அதைப் பிரியாத வரங்கொண்டார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
தமிழ்க் கவிதைக்கு முதல் சாகித்ய அகாதெமி விருது, இவரது 'ஆலாபனை' தொகுப்புக்காக, 1999-இல் கிடைத்தது.
கவிஞராய், எழுத்தாளராய், பேராசிரியராய், தத்துவ ஞானியாய், அரசியல் விமர்சகராய், புதிய தலைமுறையின் வழிகாட்டியாய், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்துள்ள பங்களிப்புகள் ஏராளம். கவிதையின் வடிவத்திலும், கவியரங்க வடிவத்திலும் ரசனைக்குரிய மாற்றங்களைச் செய்தார்.
ஜப்பானிய ஹைகூ வடிவக் கவிதையை தமிழில் அறிமுகம் செய்து வெகுஜன இதழ்களில் கட்டுரை எழுதி, ஏராளமானோரை ஹைகூ எழுதவும் வைத்தார்.
அரபியிலும், பாரசீகம் மற்றும் உருது மொழியிலும் புகழ்பெற்ற 'கஸல்' என்னும் கவிதை வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். 'நஜ்ம்' என்ற இசைப்பா வடிவையும், 'இரு சீர் ஓர் அடி' என்ற புதிய கவி வடிவத்தையும் தமிழுக்குத் தந்தார்.
'புதுக்கவிதையில் குறியீடு' என்ற புதிய தளத்தில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் பிற மொழிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புகழ்பெற்றுத் திகழும் கவிதைகள், இலக்கிய இயக்கங்கள் குறித்து எழுதி, உலகச் சாளரத்தைத் தமிழர்க்குத் திறந்து வைத்தார்.
1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்ட இந்திய ஒப்பிலக்கியம் (Competitive Indian Literature) என்ற தொகுப்பில் தமிழ் நவீன கவிதை இலக்கியம் குறித்து, Tamil Modern Policy என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் அறிமுகப்படுத்தும் அற்புதப் பணியை ஆழமாகவும், அழகாகவும் செய்தவர் கவிக்கோ.
தொலைக்காட்சியில் இவர் நடத்திய 'கவிராத்திரி' நிகழ்வு புதுமையுள்ளம் கொண்ட கவிஞர்களை, இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது.
கவியரங்கங்கள் அவருக்கு மகுடம் சூட்டின. கவியரங்கக் கவிதைகளுக்கு அவர் சிம்மாசனம் தந்தார். கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கங்கள் அனைத்திலும் பங்கேற்ற ஒரே கவிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'வெற்றி பல பெற்று நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்'என்று கலைஞர் கருணாநிதி இவரைப் பற்றி பாடிய கவிதை பிரசித்தமானது. கலைஞர் கருணாநிதி மண்ணுக்கு வந்த ஜூன் 3-ஆம் தேதியன்று அவரின் காதலரான கவிக்கோ மண்ணுக்குள் போவது சோகம் ததும்பும் முரண்.
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முப்பதாண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில், இளைய உள்ளங்களில் இலக்கிய வேளாண்மையை முழு வீச்சோடு செய்துள்ளார்.
'அம்மி கொத்த சிற்பி எதற்கு' என்று கேட்டு திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதை மறுத்தவர். திரையுலக மாமேதைகளின் பெரும் மதிப்பைப் பெற்றவர்.
'அந்தி ஏன் சிவக்கிறது', 'சுடுகாட்டில் ஒரு தொட்டில்' 'இலவசத்திற்கு ஒரு விலை' என வித்தியாசமான தலைப்புகளை மாணவர்களுக்குத் தந்து, செம்மையாக எழுத வைத்து அவற்றை நூலாக்கி வெளிவரச் செய்தவர்.
மீரா, இன்குலாப், மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், சிலம்பொலியார் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களோடான இவரது அனுபவங்களைக் கேட்கும்போது, இளம் தலைமுறைக்கு புலன்களெல்லாம் பூப்பூக்கும்.
தமிழ்கூறு நல்லுலகமெங்கும் தலைமீது வைத்துக் கொண்டாடப்பட்ட காலத்திலும், கல்லூரி பேராசிரியராக, அப்போதைய வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி நிர்வாகம் அவருக்குத் தந்த வலிமிகு அனுபவங்களை, அவருடனான கடைசி சந்திப்பில் என்னிடம் விரிவாகக் கூறினார்.
அவர் பொழிந்த பாசமும், ஊட்டிய அறிவும், உணர்வும், உள்ளம் கலங்கும் நேரத்திலெல்லாம் உந்துசக்திகளாகி உதவியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் யுகபாரதி, இசாக் ஆகியோருடன் அவரை நலம் விசாரிக்கப் போனேன். சிறுநீரகக் கட்டிக்கு சிகிச்சை பெற்ற வலிக்கு மத்தியிலும், தான் குறிப்பெடுத்து வைத்திருந்த மிகப் பழைய ஏட்டைத் தேடிப் பிடித்து எடுத்து வந்து, மலையாளக் கவிஞர் வயலார் உள்ளிட்டோரின் வசீகரக் கவிதைகளை வாசித்துக காட்டினார்.
அவரது உடல்நிலை குறித்து ஓரிரு வரிகளே சொன்னார். அன்றைய உரையாடல் முழுவதும், இலக்கியத்தாலும், சமூக அக்கறையாலும் கனத்தது.
அபாரமான ரசனை உடையவர் அப்துல் ரகுமான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, குடிக்கும் தேநீர், கேட்கும் இசை, பூசும் மணம் அனைத்திலும் அவரிடம் ரசனை ததும்பும்.
கீழக்கரையில் ஒரு நிகழ்ச்சிக்காக அவருடன் பயணம். அதிகாலையில், தொழுது விட்டு மீண்டும் தொடர் வண்டியில் தூக்கத்தைத் தொடர்ந்தபோது, கவிக்கோ எழுப்பினார். வாருங்கள் என்றார். உடன் சென்றேன், ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வயல்வெளிகளின் மீது கூட்டங் கூட்டமாய்க் கொக்குகள் பறப்பதைக் காட்டினார்.
'யான் பெற்ற இன்பம் பெறுக யாவரும்' என்பது அவரது நல்லுள்ளம்.
தனது கவித் தோன்றல்களை ஒரு தாய்க்கோழி போல அரவணைத்தவர் அவர்.
'இலக்கியங்களின் மூலம் இந்திய இணைப்பு' என்ற மிகப் பெரிய நூலில்,
தமிழ்க் கவிஞர்களின் பிரதிநிதியாக கவிக்கோ அப்துல் ரகுமானிடம் பேட்டி கண்டிருப்பார் எழுத்தாளர் சிவசங்கரி.
'நூலகங்களில் பல மணி நேரம் செலவிட்டு பல நூற்களைப் படிக்க முடியாதவர்கள், அப்துல் ரகுமானிடம் உரையாடினால் அந்த அறிவையும், அனுபவத்தையும் பெறலாம் என்று குறிப்பிட்டிருப்பார்.
உரையாடலை அவர் நிறுத்தியிருக்கலாம். அவர் எழுத்துகளோ, நம்மிடம் உரையாடிக் கொண்டேயிருக்கும்.