Saturday, June 3, 2017

குறைந்துவரும் பொறியியல் கனவு

By ஐ.வி. நாகராஜன்  |   Published on : 03rd June 2017 01:26 AM  |   
ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் கனவாக பொறியியல் படிப்பு இருந்தது. பொறியியல் படிப்பு மீதான மக்களின் மோகத்தால் மழையில் முளைத்த காளான்கள் போல் நாடு முழுவதும், குறிப்பாக, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் வேகமாக பரவின. ஆனால் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்பதுதான் வேதனை.
பல பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பாடம் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறை. இதன் விளைவாக பொறியியல் பட்டதாரிகளின் 70 சதவீதம் பேர் தொழில் திறன் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த அளவிற்குத் தான் பொறியியல் கல்லூரிகளின் தரம் இருக்கிறது. அதேபோல் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளை புறக்கணிக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் பொறியியல் படித்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்து அறிவியல், கலை மற்றும் வணிகவியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 527.
இதில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 481. இதில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை ஓரு லட்சத்து 56 ஆயிரத்து 867. இதனால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 614 இடங்கள் காலியாக இருந்தன.
குறிப்பாக தமிழகத்தில் இருந்த 148 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது போல பொறியியல் படிப்பு முடித் து தமிழ்நாட்டில் மட்டும் 70 சதவீதம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
இந்திய அளவில் தமிழகம் தான் இதில் முதலிடம் வகிக்கிறது என்பது பெரும் வேதனை. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். கலை, அறிவியல் பட்டதாரிகள் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் பேர் இந்த படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இவர்களை தொடர்ந்து 1.5 லட்சம் பேர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வெளியில் வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு தரப்பில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக பொறியியல் படித்த மாணவர்களுக்கு பொதுப்பணித்துறையில் 700, நெடுஞ்சாலைத் துறையில் 972, மின் வாரியத்தில் 1650 பொறியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இப்போதைய நிலையில் காலியாக உள்ளன.
அந்த பணியிடங்களை நிரப்பவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த நாளுக்கு முந்தைய நாள் வரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பொறியியல் பட்டதாரிகள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தமிழக வேலைவாய்ப்பு அலுவலக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான வேலை பெற முடியாதது மட்டுமின்றி, பி.இ. படித்தும் சாதாரண வேலையில் ரூ.5,000 சம்பளத்திற்கு பணியாற்றும் கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் இன்னும் பல லட்சம் பேருக்கு இப்படி வேலை பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இவர்களுக்கான வேலைவாய்ப்பை உடனடியாக உருவாக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைய தாராளமய சூழலில் கார்பரேட் நிறுவனங்கள் மின்னனு, மின்னியல், ஆட்டோ மொபைல் போன்ற பல துறைகளிலும் இந்தியா கால் பதித்து வருகிறது. இவற்றில் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை பயிற்சி என்ற அளவிலேயே தந்து அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றன.
இவ்வாறு பயிற்சியாளராக சேரும் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு உள்ளேயே தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிலை சென்னை, பெங்களூரு, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் சர்வ சாதரணமாக நடைபெறுகிறது. இதன்மூலம் தொழிலாளர் நல சட்டங்களையும், இந்திய அரசியல் நடைமுறைகளையும், மிக சாமார்த்தியமாக அந்த நிறுவங்கள் மீறுகின்றன.
அதே நேரத்தில் மிகப்பெரிய சலுகைகளை மத்திய மாநில அரசுகள் மூலம் பெற்று நமது பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு அள்ளி செல்கின்றன.
நடப்பு கல்வியாண்டில் (2017 - 18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும் பொறியியல் இடங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 527-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 510-ஆக குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை இல்லாததால் பொறியியல் கல்லூரிகள் பல இழுத்து மூடப்பட்டு வருகிறது. பல கல்லூரிகள் விற்பனைக்கும் தயாராய் உள்ளன. போதிய மாணவர் கோரிக்கை இல்லாத கல்லூரிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
அரசு ஆக்கப்பூர்வமாக யோசித்தால் திறன் வாய்ந்த கல்வியாளர்களையும் அற்புதமான கல்விச்சாலைகளையும் உருவாக்க முடிவும். அதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வருமா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024