Sunday, June 4, 2017

41 வயதில் பிளஸ் 2வில் முதலிடம் பீஹாரில் மோசடி நபர் கைது

பதிவு செய்த நாள்03ஜூன்2017 23:07




பாட்னா, பீஹாரில், தன் வயதை மறைத்து, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, 41 வயது நபரை போலீசார் கைது செய்தனர். அவரை தேர்வு எழுத அனுமதித்த, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து
வருகின்றனர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பி.எஸ்.இ.பி., எனப்படும், பீஹார் பள்ளி தேர்வுகள் வாரியம் நடத்திய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வில், கலைப் பிரிவில், கணேஷ் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கணேஷ் குமாரின் வயது, 41 என்றும், 1990ல், ஏற்கனவே, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அவர், 2015ல் மீண்டும் ஒரு முறை, 10ம் வகுப்பு தேர்வெழுதி, அதன்பின், இந்த ஆண்டு நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, கணேஷ் குமாரின், நிஜப் பெயர், கணேஷ் ராம். 1975ல், தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த இவர், 1990ல், 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று  உள்ளார்.

அதன் பின், தன் பெயரை, கணேஷ் குமார் என குறிப்பிட்டு, பீஹாரை சேர்ந்த தனியார் பள்ளி மூலம், 2015ல், 10ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.
அதன் பின், வேறொரு பள்ளியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த கணேஷ், சமீபத்தில் நடந்த, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்றுள்ளார்.
ஏற்கனவே, 10ம் வகுப்பு படித்ததை மறைத்து, இரண்டாவது முறை தேர்வெழுதியது; வயதை மறைத்து பிளஸ் 2 தேர்வு எழுதியது; போலி பெயர் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில், அவர் மீது போலீசில் புகார் அளித்தோம். அதன்படி, போலீசார் கணேஷை கைது செய்தனர்.

கணேஷ் குமாரின் சான்றிதழ்கள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவருக்கு சேர்க்கை வழங்கிய இரு பள்ளிகளுக்கு எதிராக புகார் அளித்துள்ளோம். அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, பீஹாரில் நடந்த, பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி, செய்தியாளர் சந்திப்பின் போது, பாடதிட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு கூட பதில் கூற முடியாமல் திணறினார். 

அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில், அவர் மோசடி செய்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, மாணவியின் சாதனை செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024