Saturday, June 3, 2017


நாங்க பாஸ்; உங்க உத்தரவு பாஸ் ஆகலை' : பிரதமர் மோடிக்கு புதுகை மாணவி கடிதம்
பதிவு செய்த நாள்03ஜூன்  2017 00:10




புதுக்கோட்டை: பிரதமர் மோடிக்கு, புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு படித்த, மாணவி சரஸ்வதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

வகுப்பறைகள் : அதில் அவர் எழுதியுள்ளதாவது:எங்கள் பள்ளியில், 1,800 மாணவியர் படிக்கிறோம்; 40 ஆசிரியர்கள் உள்ளனர். ஒரே பெஞ்சில், எட்டு மாணவியர் அமர வேண்டி உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லை. மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், சைக்கிள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏதுமில்லை. இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் எழுதி இருந்தார்.
இது குறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் நகல், மாணவிக்கும் அனுப்பப்பட்டது.
இதன்படி, கல்வி, வருவாய் துறையினர் பள்ளியை ஆய்வு செய்து, அறிக்கை அனுப்பினர்.
இதற்கிடை யில், பள்ளிக்கு அருகில் செயல்படாமல் கிடக்கும் பொதுப்பணி துறை அலுவலக கட்டடத்தை, பள்ளிக்கு ஒதுக்கி தருமாறு, பெற்றோர், பொதுமக்கள் சார்பில், உண்ணாவிரதம் நடத்தினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, மாணவி சரஸ்வதி மீண்டும், கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பிற்கு பாஸாகி விட்டோம்; ஆனால், உங்களது உத்தரவு
எதுவும் பாஸ் ஆகவில்லை' என குறிப்பிட்டு உள்ளார்.

போராட்டம் : இதற்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 'பொதுப்பணித் துறை கட்டடத்தை பள்ளிக்கு தராவிட்டால், ஜூன் 7 பள்ளி திறக்கும் நாளன்று, பள்ளிக்கு பூட்டு போட்டு மறியல் போராட்டம் நடத்தப்படும்' என, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024