Saturday, June 3, 2017

எம்.ஜி.ஆர் வழி அல்ல; என்.டி.ஆர் வழி!' -தீவிர ஆலோசனையில் ரஜினிகாந்த்
ஆ.விஜயானந்த்




' நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. " ஆகஸ்ட் மாதத்துக்குள் அவர் உறுதியாகக் கட்சியைத் தொடங்குவார். கடந்த சில நாள்களாக அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்' என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி பதில் கூறுவதும் பின்னர் அந்த அறிவிப்பு நீர்த்துப் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. அதேபோல், கடந்த மாதம் ரசிகர்களை நேரில் வரவழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டவர், ' சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என அதிரடியைக் கிளப்பினார். அடுத்து வந்த சில நாட்களில் இயக்குநர் ரஞ்சித்தின் 'காலா' படத்தில் ரஜினி நடிக்கும் தகவல்கள் வெளியானது. தற்போது காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறார். அங்கிருந்தபடியே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். " அரசியல் பயணத்தைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. அதற்கான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து வருகிறார். தற்போதுள்ள மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை தனக்கு சாதகமானதாகப் பார்க்கிறார். தற்போது ரசிகர் மன்றங்களை கிராமம்தோறும் வலுப்படுத்தும் வேலைகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார். மன்றத்தின் விதிகளுக்கு முரணாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அரசியல் பணிகளில் வேகமாக இறங்குவார்" என விவரித்த ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியிலிட்டார்.

" ரசிகர்களுடன் சந்திப்பு முடிவடைந்த நாளில் இருந்தே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. ஓரிரு நாட்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர் ஒருவரிடம், நாடாளுமன்றத் தேர்தல், மக்கள் செல்வாக்கு உள்பட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். விவாதத்தில் ரஜினி பேசும்போது, ' அரசியலுக்கு வருவது பெரிதல்ல. மக்களின் பெரும்பான்மை ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறேன். 50 சதவீதத்துக்கும் மேல் மக்கள் ஆதரவு கிடைத்தால், தலைமைப் பதவியை ஏற்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். அதற்கும் குறைவான ஆதரவு கிடைத்தால், என்னுடைய கட்சியின் சார்பில் மற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் முன்னிறுத்துவேன். எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய நேரத்தில் 30 சதவீதம் வரையில் ஆதரவைப் பெற்றார். இந்த அளவு ஆதரவைவிட, என்.டி.ராமாராவைப் போல் 50 சதவீத ஆதரவை எதிர்பார்க்கிறேன். அப்படிக் கிடைத்தால், ஆட்சி பொறுப்பில் அமரவும் தயாராக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ரஜினியிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், ' தேர்தலில் போட்டியிட விரும்பினால், எதிர் எதிர் சமூகங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் போட்டியிடுங்கள். அப்போதுதான் இரண்டு சமூகத்தினரின் வாக்குகளும் சம அளவில் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, வடக்கே குடியாத்தத்தில் வன்னியர்களும் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சம எண்ணிக்கையில் உள்ளனர். இங்கே நீங்கள் போட்டியிடும்போது பொதுவான தலைவராக உருவெடுக்க முடியும். கூடவே, தெற்கில் ராஜபாளையம் அல்லது சிவகாசி போன்று ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்யலாம். இரண்டு வெவ்வெறு தொகுதிகளில் ஒரேநேரத்தில் போட்டியிடும்போது, மாநிலம் முழுவதும் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்ப்பார்கள். உங்கள் படம் வெளியாகும்போது, என்ன உற்சாகத்தில் இருக்கிறார்களோ, அதே உற்சாகத்தை தேர்தல் பணிகளில் காட்டுவார்கள்' என விவரித்துவிட்டு, ' நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும்போது, சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானதாக இருக்கும். இதே நிலைப்பாட்டைத்தான் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பல நேரங்களில் எடுத்துள்ளனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரஜினி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம் குறித்த உறுதியான தகவல் வெளியாகும்" என்றார் விரிவாக.

" தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யாத பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினியின் பார்வையாக இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய கால்தடம் வலுவாக பதிய வேண்டும் என ஆசைப்படுகிறார். யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. பாசிட்டிவ் அரசியல் பற்றித்தான் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார். ' என்னை எதிரியாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். நான் யாருக்கும் எதிரி அல்ல' என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். மற்றவர்கள் தன்னை எதிரியாக நினைப்பதையே மூலதனமாகப் பார்க்கிறார். 'அனைத்து சமூகத்து மக்களுக்கும் பொதுவான தலைவராகக் காட்டிக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த செயல்களைச் செய்வதற்கும் இது சரியான தருணம்' என நினைக்கிறார். அதற்கு வெள்ளோட்டமாக, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்கிறார்" என்கிறார் ரஜினியை அண்மையில் சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவர்.

'எந்தவொரு செயலிலும் தீவிரம் காட்டுவதற்கு முன்பு ஆழ்ந்து யோசிப்பவர்கள், அதனை செயல்படுத்துவதிலும் தாமதம் செய்வார்கள்' என்பார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது. ' இந்தமுறை ரசிகர்களை அவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024