இளமை .நெட்: போன், ஆனா போன் இல்லை!
ஸ்மார்ட் போன் உலகில் ‘இல்லாத போன்’ என்று ஒரு போன் இருக்கிறது தெரியுமா? அதாவது நோபோன்! பெயர் மட்டுல்ல; உண்மையில் இது போனே அல்ல. ஆனாலும் இந்த போன் ஆயிரக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கிறது. பத்து டாலர் செலவிடத் தயார் என்றால் நீங்களும்கூட ‘நோபோன் ஸ்டோர்’ தளத்தில் இந்த போனை வாங்கலாம்.
இந்த போனை வாங்கி எதுவும் செய்ய முடியாது. பேச முடியாது, நெட்டில் உலாவ முடியாது, பாட்டு கேட்க முடியாது… ஸ்மார்ட் போன்களில் செய்யும் எதையும் செய்ய முடியாது. ஸ்மார்ட் போன்களில் ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய எந்த அம்சமும் இந்த போனில் கிடையாது. அதனால்தான் இது நோபோன்.
இப்படி ஒரு போன் எதற்கு? ஸ்மார்ட் போன் மோகத்திலிருந்து விடுபடுவதற்குத்தான்!
செவ்வகக் கட்டை
ஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையைப் பார்த்து விட்டுத்தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச் செல்வதற்கு முன் போன்தான் பக்கத்தில் இருக்கும்.
ஆம், பேசுகிறோமோ இல்லையோ, அழைப்பு வந்திருக்கிறதோ இல்லையோ, சில நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்துப் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறதே. காலையில் கண் விழித்ததும், பல் துலக்குவதற்கு முன்னர் போன் திரையைப் பார்த்து விட்டுத்தானே வேறு வேலை பார்க்கிறோம். இரவிலும் படுக்கச் செல்வதற்கு முன் போன்தான் பக்கத்தில் இருக்கும்.
இப்படி ஸ்மார்ட் போன் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மானே தேனே போட்டுக்கொள்வது போல, வாட்ஸ் அப்பில் உலாவுவது, செல்ஃபி எடுத்துத் தள்ளுவது என இதர பாதிப்புகளை நீங்களே சேர்த்துக்கொள்ளலாம்.
பஸ்ஸிலோ ரெயிலிலோ பயணிக்கும்போதும் பலரும் ஸ்மார்ட் போனில் மூழ்கியபடி தனி உலகில் சஞ்சரிக்கின்றனரே தவிர, பக்கத்தில் உள்ளவர்களைக் கவனிப்பதுகூட இல்லை. இந்தப் பிரச்சினைக்கு எல்லாம் தீர்வாக அறிமுகமானதுதான் நோபோன். இது ஸ்மார்ட் போன் போலவே தோற்றம் கொண்ட செவ்வகக் கட்டை என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதைக் கையில் வைத்திருந்தால், போனை வைத்திருக்கும் அதே உணர்வைப் பெறலாம் எனும் உத்திரவாதத்தை நோபோன் அளிக்கிறது.
நிஜ உலகில் சஞ்சாரிக்க...
சதா சர்வ நேரமும் போனைக் கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்தத் தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கிக்கொள்ள உதவும் என்பதுதான் நோபோன் அறிமுகத்துக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. 2014-ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான ‘கிக்ஸ்டார்ட்டர்’ மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, கேமரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்பவையெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.
சதா சர்வ நேரமும் போனைக் கையில் எடுக்கும் உணர்வுக்கு மாற்றாக அமையக்கூடிய தொழில்நுட்பம் சாராத இந்தத் தீர்வு நிஜ உலகுடனான உங்கள் தொடர்பை அதிகமாக்கிக்கொள்ள உதவும் என்பதுதான் நோபோன் அறிமுகத்துக்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. 2014-ம் ஆண்டு வாக்கில் இணைய நிதி திரட்டும் மேடையான ‘கிக்ஸ்டார்ட்டர்’ மூலம் இந்த போனுக்கான நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பேட்டரி இல்லை, கேமரா இல்லை, புளூடூத் இல்லை, உடையாது, நீர்புகாது என்பவையெல்லாம் இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்பட்டன.
ஸ்மார்ட் போன் மோகத்தை நையாண்டி செய்யும் வகையில் அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு இல்லாத போனுக்கான தேவையைப் பலரும் உணர்ந்ததால், நிதி உதவியும் குவிந்து போனும் விற்பனைக்கு வந்தது. இப்போது, நோபோன் ஸ்டோர் மூலம், அடிப்படையான நோபோன் மட்டும் அல்லாது ‘நோபோன் ஜீரோ’ போன்ற பிற மாதிரிகளையும் வாங்கலாம். நோபோன் ஜீரோ என்றால், ஸ்மார்ட் போன் பட்டன் மாதிரிகள் எல்லாம் இல்லாத வெறும் செவ்வகப் பலகை, அவ்வளவுதான். ஆனால், பாதி விலையில் வாங்கலாம். ‘நோபோன் ஏர்’ மாதிரியும் இருக்கிறது. உள்ளே ஒன்றும் இல்லாமல் இருப்பது போன்ற வெற்றுத்தோற்றம்தான் இதன் சிறப்பம்சம்.
இது தவிர செல்ஃபி நோபோனும் உண்டு. நோபோனில் கேமராவே இல்லையே எப்படிப் படம் எடுப்பது என்று கேட்கலாம். நல்ல கேள்வி? முகம் பார்க்கும் கண்ணாடி கொண்ட நோபோன் இதற்குப் பதிலாகிறது. கேலியும் கிண்டலும் கலந்த முயற்சி என்றாலும், நம் காலத்து ஸ்மார்ட் போன் மோகத்தின் மீதான நயமான விமர்சனமாக நோபோன் அமைந்துள்ளது. அதனால்தான் இன்னமும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே இருக்கிறது.
சமூக ஊடக ‘மருந்து’...
நிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடகச் செயலி ஒன்றும் அறிமுகமாகியுள்ளது.
நிற்க, நோபோன் போலவே, இப்போது சமூக ஊடகச் செயலி ஒன்றும் அறிமுகமாகியுள்ளது.
‘பிங்கி’ (Binky) எனும் அந்தச் செயலி கொஞ்சம் புதுமையானது. வழக்கமாகச் சமூக ஊடகச் செயலிகளில் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இதிலும் செய்யலாம். அதாவது, நிலைத்தகவல்களை வரிசையாகப் பார்க்கலாம், அவற்றை லைக் செய்யலாம், பின்னூட்டம் அளிக்கலாம், இப்பக்கமும், அப்பக்கமும் நகர்த்திப் பார்க்கலாம். இவற்றில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இவை எல்லாவற்றையும் நீங்கள் செய்யலாமே தவிர, ஒருவரும் பார்க்க முடியாது!
ஆம், ‘பிங்கி’ செயலியைத் தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, அதில் எப்போது நுழைந்தாலும் ஏதாவது உள்ளடக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் செய்வது போல இந்தத் தகவல்களை வரிசையாகப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இடையே ஏதாவது படத்தை லைக் செய்யலாம். கருத்து தெரிவிக்க விரும்பினால், தட்டச்சு செய்யலாம். முதலெழுத்தை மட்டும் அடித்தால் போதும், மற்ற எழுத்துகள் தானாகத் தோன்றும்.
அவ்வளவுதான். ஆனால், நாம் தெரிவிக்கும் லைக்குகளும் கருத்துகளும் வேறு யாரையும் சென்றடையாமல் இணைய வெளியில் கரைந்து காணாமல் போய்விடும். இதில் தோன்றும் நிலைத்தகவல்கள் விலங்குகள், பறவைகள் சார்ந்தவை. நம்முடைய நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களுடையவை அல்ல. எதற்கு இப்படி ஒரு செயலி?
எல்லாம் சமூக ஊடகப் பழக்கத்துக்கு ஒரு மாற்று தேவை என்பதால்தான்!
எப்போதும் ஸ்மார்ட் போனைக் கையில் வைத்துக்கொண்டு அதில் சமூக ஊடகப் பதிவுகளைப் பார்த்தபடி இருக்கிறோம் அல்லாவா? அந்தப் பழக்கத்துக்கு மாற்று மருந்துதான் இந்தச் செயலி என்கிறார் இதை உருவாக்கியுள்ள மென்பொருளாளர் டான் கர்ட்ஸ்.
சமூக ஊடக உலகில் உலாவிய உணர்வைப் பெறலாம், ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற உரையாடல், லைக் கணக்கு, துவேஷம் போன்றவற்றைத் தவிர்த்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் என்கிறார் கர்ட்ஸ். ரயிலில் செல்லும்போது, அனிச்சையாக போனை எடுத்து சமூக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் தனது சொந்த அனுபவம் குறித்து யோசித்தபோது, தகவல் தேவை இருக்கிறதோ இல்லையோ போனைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு இருப்பதாகத் தோன்றியதாக கர்ட்ஸ் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, விளையாட்டாக இந்தச் செயலிக்கு வடிவம் கொடுத்துள்ளார். ஆனால், இதைப் பார்த்தவர்கள் எல்லாம், இதன் சமூக ஊடகம் அல்லாத சமூக ஊடகத்தன்மையை விரும்பவே, செயலியை முழு வீச்சில் உருவாக்கி ஐபோனுக்காக அறிமுகம் செய்துள்ளார். ஆண்ட்ராய்டு வடிவமும் வரவுள்ளது. வேறு பல துணை அம்சங்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக கர்ட்ஸ் கூறியிருக்கிறார்.
பிங்கி செயலி இணையதளம்: http://www.binky.rocks/
நோ போன் இணையதளம்: https://www.thenophone.com/