மொழி கடந்த ரசனை 37: உன் நினைவு வாட்டாத உலகம் வேண்டும்!
காதல் உணர்வை வெளிப்படுத்தும் திரையிசைப் பாடல்கள், அவற்றைக் கேட்டு ரசிக்கும் தொடக்க நிலையில் ஏற்படும் பரவச உணர்வோடு தேங்கிவிடுவதில்லை. அதைத் தாண்டி, அவை எழுதப்பட்ட மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் எடுத்துக்காட்டும் தடயங்களாகத் திகழ்கின்றன. சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் சமீபத்திய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரை, தலைவி அல்லது காதலி காதலனை எண்ணி ஏங்குவதாகவும் அவன் பொருட்டு எதையும் செய்யத் தயாராக அவள் இருப்பதாகவும் மட்டுமே அமைந்திருக்கும்.
தலைவன் அல்லது காதலன் தன் நிலை தாழ்ந்து, தனது காதலுக்காக எதையும் இழப்பானே அன்றி, அவனது காதலிக்காக ஓரளவுக்கு மேல் இறங்கி வராத சுயமரியாதை உள்ள மனிதனாகவே தமிழ்த் திரைப் பாடல்களில் வலம் வருவான்.
‘உனக்காக, கண்ணே உனக்காக இந்த உயிரும் உடலும் ஒட்டி இருப்பது உனக்காக… இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா, இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ என்பது போன்ற வரிகள்கூட, ஒரு காதல் வயப்பட்ட நகைச்சுவை நடிகனின் பகடியாக மட்டுமே வெளிப்படும். கதாநாயகன் இப்படியெல்லாம் தன் காதலை மிகைப்படுத்தும் தமிழ்த் திரைப் பாடல்கள் அரிது. அதற்கு நம் தமிழ் திரைப் பண்பாடு இடம் தராது போலும்.
இதற்கு மாறாக அமைந்திருக்கும் இந்திப் படப் பாடல்கள் வாயிலாக, இந்திப் பட நாயகன் தன் காதலை நாயகியிடம் வெளிப்படுத்தும் வரிகளும் சூழலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த வேறுபாட்டைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் விதமாக “ஜிஸ் கலி மே தேரா கர் ந ஹோ பாலுமா” என்று தொடங்கும் ‘கட்டி பதங்க்’ (அறுந்த பட்டம்) என்ற திரைப்படத்தின் பாடல் அமைந்துள்ளது. ராஜேஷ் கன்னாவுக்குத் தன் குரல் பொருந்தாது என்பதால் அதிகம் அவருக்குப் பின்னணி பாடாத முகேஷ் பாடிய, இந்தப் பாடல், காதலனின் உச்சகட்ட யாசக உணர்வாக விளங்கும் ஒப்பற்றதொரு பாடல்.
பொருள்.
உன் வீடு இல்லாத எந்தத் தெருவின் மீதும்
என் கண் கூடப் படாது. (அதில் நுழைய மாட்டேன்)
உன் வீட்டின் வாசற்படிக்கு அருகில் இல்லாத
பாதை எதன் மீதும் நான் கால் பதிக்க மாட்டேன்
வாழ்க்கையில் உள்ளன வசந்தங்கள் அனேகம் - ஏற்றுக்கொள்கிறேன்
எங்கும் பூத்திருக்கின்றன எழில் மலர் மொட்டுகள்
ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எந்தத் தோட்டத்தின் முள் உன் காலைக் குத்துகிறதோ
அந்தத் தோட்டத்தின் மலரை ஒருபோதும் நான்
கொய்ய மாட்டேன்.
(உலகு உன் மீது சுமத்தும்) இந்த சம்பிரதாயம்
இந்த சத்தியம் எல்லாவற்றையும் உடைத்துவிட்டு
ஓடி வா என்னிடம் ஒளிரும் காதல் மேலாடை அணிந்து- (இல்லையென்றால்) நான் இந்த உலகை விட்டு ஓடிவிடுவேன்
எந்த உலகில் உன் நினைவு என்னை வாட்டுகிறதோ
அந்த உலகில் ஒரு நிமிடம்கூட இருக்க மாட்டேன்.
நைனிடால் ஏரியின் அழகைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட இப்பாடல் முகேஷின் மிக மென்மையான குரலில் ஒரு காதலனின் கெஞ்சலைக் கண் முன் கொண்டுவருகிறது. இப்பாடல் படமாக்கப்பட்ட அப்பகுதியின் அனைத்து இளம் பெண்களும் ராஜேஷ் கன்னாவின் உடல் மொழியில் மயக்கம் கொண்டு அவரின் தீவிர ரசிகைகள் ஆயினர் என்று அப்போது பேசப்பட்டது. பாடல் ஆசிரியர் ஆனந்த் பக்ஷி எளிய வரிகள் மூலம் இப்பாடலில் காதலின் ஆழத்தை எட்டியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.
No comments:
Post a Comment