டாக்டரைப் பார்க்கப் போகிறீர்களா? - குடும்ப மருத்துவரா, சிறப்பு மருத்துவரா?
முன்னொரு காலத்தில் ‘குடும்ப மருத்துவர்’ என்று ஒருவர் இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். இன்றைய நாளில் சாதாரண தலைவலிக்குக்கூட சிறப்பு நரம்பு நரம்பியல் நிபுணரைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர், மூட்டு மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர், இரைப்பை சிறுகுடல் நிபுணர், முதுமை நோய் மருத்துவர் இன்னபிற சிறப்பு மருத்துவர்கள் எனப் பெருகிவிட்ட நிலையில் குடும்ப மருத்துவர்கள் அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகிறார்கள். சரி, இப்படிப் பல நிபுணர்கள் இருக்கும் நிலையில், நாம் சிகிச்சை பெறுவதற்கு யாரைத் தேர்ந்தெடுப்பது?
குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு மருத்துவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்?
# குடும்ப மருத்துவர்கள் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்று அழைக்கப்படுபவர்கள் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள். சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருக்கலாம்.
# இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள்.
# இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் கூடுதல் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.
# எல்லா நோய்களுக்கும் சிறப்பு மருத்துவம் தேவை இல்லை. சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.
# ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக ஒரே பொதுநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருவதால், நாளடைவில் இரு தரப்பினரிடைய வலுவான ஓர் உறவு ஏற்படுகிறது; மருத்துவர் மேல் நம்பிக்கையும் உண்டாகிறது. இந்த பரஸ்பர உறவு மருத்துவ சிகிச்சையில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
# பொதுநல மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, தானாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒரு பொதுநல மருத்துவரை சில முறை பார்த்து பரிச்சயம் செய்துகொண்ட பின்னரே, அவர் தனக்கு ஏற்புடையவர் தானா என்பது தெரியவரும்.
# சிறப்பு மருத்துவர்கள் தாம் சாந்த துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே, பொதுநல மருத்துவர் ஒருவரின் ஆலோனையின் பேரிலேயே இவர்களை நாடுவது நல்லது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல பொதுநல மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் அவசியம்.
# தனியார் சிறப்பு மருத்துவர்கள் வாங்கும் கட்டணம், தனியார் பொதுநல மருத்துவர்களைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
# சிறப்பு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை அதிகமாக செய்யச் சொல்லுவது உண்டு; சில நேரம் ‘ஒரு ஸ்கேன் செய்துப் பார்க்கலாமா?’ என்று தானாக அவரைக் கேட்கும் நோயாளிகளும் உண்டு!
# நோயின் அறிகுறிகள் தோன்றும்போது முதலில் பொதுநல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதுவே சிறந்தது. அவரது ஆலோசனையைப் பெற்று, சிறப்பு மருத்துவர் ஒருவரை நாடலாம். காலமும் செலவும் மிஞ்சும்.
# மருத்துவ உலகில், பொதுநல மருத்துவர்கள் வழங்குவது முதல் நிலை மருத்துவப் பராமரிப்பு என்றும், சிறப்பு மருத்துவர்கள் வழங்குவது இரண்டாம் நிலை மருத்துவ பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
# பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குவற்கு முதல் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதுதான் சிறந்தது என்பதே எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை (2017) இதையே வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment