நுழைவுத் தேர்வு அலைக்கழிப்புக்குப் பின்னுள்ள சந்தை Published : 08 May 2018 09:23 IST
ஜி.ஆர்.இரவீந்திரநாத் நாடு முழுவதற்குமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ பெரிய களேபரங்களோடு நடந்து முடிந்திருக்கிறது. இத்தேர்வின் அடிப்படையில்தான் 2018 கல்வி ஆண்டில், 65,000 மருத்துவப் படிப்புகளும் 25,000-க்கும் மேற்பட்ட பல் மருத்துவப் படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி, வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டுமென்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 31%-க்கும் மேலாக அதிகரிக்க இந்த அறிவிப்பு ஒரு முக்கியமான காரணம்.
எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?
இந்தத் தேர்வு தேவையா, இல்லையா; இந்தத் தேர்வுக் கான விதிகள் ஏன் இவ்வளவு கடுமையாக இருக்கின்றன என்கிற விவாதங்களை எல்லாம் தாண்டி, தேர்வை நியாயப்படுத்துபவர்களேகூட நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக நிர்வகிக்கப்படுகிறது இத்தேர்வு. தமிழக மாணவர்கள் எதிர்கொண்ட அலைக்கழிப்பை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.
தமிழக மாணவர்கள் 1.07 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப இங்கு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படவில்லை. விளைவாக, தமிழகத்தைச் சேர்ந்த 5,700 மாணவர்களுக்கு கேரளம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வேறு மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. உரிய நேரத்தில் இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டி தகவல் தரப்படவில்லை என்பதும் கடைசி நேர அலைச்சல் எவ்வளவு கடுமையான மன - உடல் உளைச்சல், பணச் செலவை உண்டாக்கும் என்பதும் பொருட்படுத்தப்படவே இல்லை.தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவையற்ற அச்சத்தையும், பதற்றத்தையும் இது உருவாக்கியது. மொழிப் பிரச்சினையாலும் மாணவர்கள் சிரமங்களுக்கு உள்ளானார்கள். தேர்வுகளை மன அமைதியுடன் எழுதும் வாய்ப்பை இது சீர்குலைத்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இதற்கு முக்கியமான காரணம்.
மாணவர்கள் பேருந்து, ரயில் போன்றவற்றுக்கு டிக்கெட் கிடைக்காமல் அல்லலுற்றனர். பல மாணவ - மாணவியர் ரயில் மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டே பயணித் தனர். தங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்றவை இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். மாணவர்கள் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகிவில்லை. அவர்களின் பெற்றோர்களும் அலைக்கழிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தேர்வு மையங்களே இல்லையா? அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லையா? ஏன் இந்த நிலை? தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 45-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், ஏராளமான சிறந்த பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கெல் லாம் தேர்வு எழுதுவதற்கான சிறந்த கூடங்களும் உள்ளன. சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து,பேருந்து வசதிகள், விமானப் போக்குவரத்து வசதிகளும் தமிழகத் தில் மிகச் சிறப்பாகவே உள்ளன.
மேலும், இந்த இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட் தேர்வு’ இணையத்தின் வழி நடத்தப்படும் தேர்வல்ல. இது ‘ஓஎம்ஆர்’ எனப்படும் கம்யூட்டர் கோடிங் தாளில் நடத்தப்படும் தேர்வுதான். இதை எந்த மையத்தில் வேண்டுமென்றாலும் நடத்த முடியும். ஏராளமான கணினிகள் உட்பட தொழில்நுட்ப வசதிகள் உள்ள கூடங்கள் இத்தேர்வுக்குத் தேவையில்லை. ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தேர்வு நடத்தும் வசதிகள் தமிழகத்தில் உள்ளன. இப்படியெல்லாம் இருந்தும் ஏன் தமிழக மாணவர் கள் 2,000 கி.மீ. வரை அலைக்கழிக்கப்படுகின்றனர்?
தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்
இதற்கான மிக முக்கியமான பதில்: தேர்வுகள் வணிகமயமாக்கப்பட்டதே ஆகும். நுழைவுத் தேர்வுகளையும், தேர்வு களையும் நடத்துவதன் மூலமே இன்று கல்வி நிறுவனங்கள் பல கோடிகளைக் குவிக்கின்றன. இதற்கு சிபிஎஸ்இ அமைப்பும் விலக்கல்ல. அது நீண்டகாலமாக அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்திவந்ததன் மூலம், கோடிக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டிவந்தது. தற்போது நீட் தேர்வின் மூலமும் வருவாய் ஈட்டிவருகிறது. தவிர, நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் வியாபாரத்துக்கான பெரிய லாபியும் இதன் பின்னணியில் உள்ளது.
விளைவாகவே, நுழைவுத் தேர்வுகளில் மாணவர்களின் வசதி கணக்கில் கொள்ளப்படாமல், நிறுவனங்களின் லாபம் பிரதானமாகக் கொள்ளப்படுகிறது. இதை இப்படிப் பார்க்கலாம்: ‘கூடுதல் மையங்கள் = கூடுதல் செலவு. குறைந்த மையங்கள் = கூடுதல் லாபம்.’
தமிழக மாணவர்கள் வெளியே செல்ல நேர்ந்ததன் விளைவாக இந்த விஷயம் வெளிப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தமிழகத்துக்குள்ளேயே வெளிமாநிலத்துக் கான மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், இந்தப் பிரச்சினை வெளியிலேயே வந்திருக்காது. மையங்களில் முடிந்த அளவுக்கு மாணவர்களை அடைப்பதே இன்றைய வழக்கம். ஒவ்வொரு இடத்திலும் அதிகமான ஆட்களை அடைப்பதன் வாயிலாகவே கண்காணிப்பு என்ற பெயரில் அதீதமான கட்டுப்பாடுகளும் உள்ளே நுழைகின்றன.
நுழைவுத் தேர்வுக்குப் பின்னுள்ள வணிகம்
சேவைத் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதார நடவடிக்கைகள் கோலோச்சும் நிலையில், இன்று நுழைவுத் தேர்வுகளை நடத்துவது, அதற்கான பயிற்சிகளை வழங்குவது, பயிற்சிகளுக்கான குறிப்பேடுகளை, மென்பொருட்களை உருவாக்குவது போன்றவை சர்வதேச வர்த்தகம் ஆகிவிட்டன. அதன் காரணமாகவே புதுப் புது தேர்வுகள் புகுத்தப்படுகின்றன.
முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் நுழைவுத் தேர்வு’ நடத்தும் பொறுப்பு, ஒரு அமெரிக்க நிறுவனத்திடமும், பல தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்டலாம். தேர்வுகள் நடத்துவதில் இன்று ஏகபோக அமைப்புகள் உருவாகிவருகின்றன. அரசு நிறுவனங்கள், பல சிறிய தனியார் நிறுவனங்கள் நடத்திவந்த தேர்வுகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்படுகின்றன.
இந்த நோக்கத்துக்காகவே, மத்திய அரசு தேசியத் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வழங்க முயல்கிறது. அந்த அமைப்பு செயல்படத் தொடங்கினால், அந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேருக்கு வெவ்வேறு படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பும் சிபிஎஸ்இயிடமிருந்து பறிக்கப்படும்.
புயல் வெளிப்படுத்திய லாப வேட்கை
சென்ற ஆண்டு வர்தா புயல் வீசியது. அதற்கு முதல் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தது. ஆனாலும் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளைத் தள்ளிவைக்க அத்தேர்வுகளை நடத்திய அமெரிக்க நிறுவனம் மறுத்துவிட்டது. காரணம், மீண்டும் மையங்களைப் பிடிப்பதால் அதற்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதே!
ஆனால், புயலால் ஏற்பட்ட மின்வெட்டு, இணைய சேவை துண்டிப்பால் தேர்வை நடத்த முடியாத நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டவுடன், நமது மருத்துவர்களுக்கான மையத்தை அது வேறு நகரங்களுக்கு மாற்றியது. ஆக, அந்நிறுவனத்துக்கு இழப்பு இல்லை. ஆனால், தேர்வெழுதச் சென்றவர்கள் போக்குவரத்து - தங்கும் செலவோடு, உடல் மற்றும் உள உளைச்சலையும் எதிர்கொண்டார்கள்.
மாநிலங்களுக்கு வெளியே ஏன்?
அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் தமிழகம் போன்ற மாநிலத்தில் இப்படி ஒரு சிறு தொகுதி மாணவர்களை வெளியே அனுப்புவதன் மூலம், இத்தேர்வு தொடர்பிலான அச்சத்தை உண்டாக்குவது! அதாவது, ‘இத்தேர்வு எப்படியான விரிந்த அளவில் நடக்கிறது; அதற்கு எவ்வளவு பெரிய பயிற்சிகள் எல்லாம் வேண்டும்?’ என்ற உளவியல் மாற்றத்தை ஒட்டுமொத்த மாணவர்களிடமும் உருவாக்குவது. அதாவது, நுழைவுத் தேர்வுக்கான நெருக்கடியை மாணவர்களிடம் உண்டாக்குவது!
நமது தமிழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களுக்கு டி.எம், எம்.சி.ஹெச். படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு அசாமிலும் வேறு சில மாநிலங்களிலும் மையங்கள் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
இவையெல்லாம் விவாதிக்கப்படாமல் அரசு நடத்தும் தேர்வு என்ற பெயரில் சகலமும் நியாயப்படுத்தப்படுவது இன்று பெரும் சமூக அவலம். கல்வி என்பது மக்களின் உரிமையாக வேண்டும். அது வணிகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தங்களை நாம் உருவாக்க வேண்டும்!
ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்.
தொடர்புக்கு: daseindia2011@gmail.com