Wednesday, May 9, 2018

கோவை எக்ஸ்பிரசை கோட்டைவிட்ட பயணியர் : ரயில்வே நிர்வாக அலட்சியத்தால் பரிதவிப்பு

Added : மே 09, 2018 01:30 

  பராமரிப்பு பணியால், ரயில்கள் ரத்து செய்யப்படும் விபரத்தை, உரிய கால அவகாசத்தில், ரயில்வே நிர்வாகம், பயணியருக்கு தெரிவிக்காததால், நேற்று, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, பயணியர் கோட்டை விட்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு, காலை, 6:10 மணிக்கு இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம், 1:45 மணிக்கு, கோவை சென்றடையும்.இந்த ரயில், சென்ட்ரலில் புறப்பட்டால், அரக்கோணத்தில் தான் நிற்கும். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோர், அதிகாலையில், திருவள்ளூரில் இருந்து, அரக்கோணத்திற்கு, மின்சார ரயிலில் சென்று, அங்கிருந்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வது, வழக்கமாக உள்ளது.
ரயில்கள் ரத்து : அரக்கோணத்தில், ரயில்வே பணிமனை விரிவாக்கப்பணி நடப்பதால், சென்ட்ரல் - அரக்கோணம் பயணியர் ரயில், நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த தகவலை, ரயில்வே நிர்வாகம், உரிய கால அவகாசத்தில், பயணியருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க வேண்டியோர், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்வதற்காக, திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். திருவள்ளூர் நிலையத்திற்கு வந்த பின் தான், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரம், பயணியருக்கு தெரியவந்தது.

முன்பதிவு : இதனால், நிலைய அதிகாரியை அணுகி, 'நாங்கள், டிக்கெட் முன்பதிவும் செய்திருக்கிறோம். மின்சார ரயில்கள், ரத்து செய்யப்பட்டிருப்பதால், இனிமேல், பஸ் பிடித்து, அரக்கோணம் செல்ல முடியாது. 'எனவே, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, இன்று மட்டும், நின்று செல்ல ஏற்பாடு செய்து, எங்களுக்கு உதவுங்கள்' என கோரினர்.நிலைய அதிகாரி, 'என்னால், நிறுத்த முடியாது' என, கறாராக கூறினார். இதனால், பயணியர், அவருடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், பயணி ஒருவர் மயங்கி விழுந்ததால், நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்னை அதிகமாக, ரயில்வே பாதுகாப்பு படையினர், அங்கு வந்து, பயணியரை விரட்டினர். இந்த களேபரத்திற்கு இடையே, திருவள்ளூர் நிலையத்தை கடந்து, கோவை எக்ஸ்பிரஸ் சென்றது. ரயிலை கோட்டைவிட்ட பயணியர், பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணியரின் இக்கட்டான நிலையை, திருவள்ளூர் நிலைய அதிகாரி, ரயில் இயக்கப்பிரிவு உயர் அதிகாரிக்கு, முன்கூட்டியே தெரிவித்து, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை, 30 விநாடிகளாவது, நின்று செல்ல ஏற்பாடு செய்திருக்கலாம். இனி, சென்ட்ரல் - அரக்கோணம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் போது, சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவள்ளூரில், நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாஸ்கர், திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர்
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024