Wednesday, May 9, 2018

போலி ரயில் டிக்கெட் மோசடி : பயணிகள் நடுவழியில் தவிப்பு

Added : மே 09, 2018 00:19 | 

வேலுார்: போலி ரயில் டிக்கெட்டுகளால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த, கல்புதுாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 70; நெல்லைக்கு செல்வதற்காக, கடந்த, 2ல், வேலுார் சைதாப்பேட்டையில் உள்ள, இ - டிக்கெட் புக்கிங் சென்டரில், 960 ரூபாய் கொடுத்து, டிக்கெட் முன் பதிவு செய்தார்.பி.என்.ஆர்., நம்பர், முன்பதிவு பெட்டி, இருக்கை எண், ரயில் புறப்படும் நேரம் அடங்கிய விவரங்கள், அவரது, மொபைலுக்கு, எஸ்.எம்.எஸ்., வந்தது. மே, 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, பி.என்.ஆர்., நம்பரை காட்டி விசாரித்த போது, டிக்கெட் போலியானது என தெரியவந்தது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். பின், வேறு வழியின்றி, சாதாரண டிக்கெட் வாங்கி, நெல்லை சென்றார்.கடந்த, சில மாதங்களாக, வேலுாரில், சைதாப்பேட்டை, காந்தி ரோடு, பாபுராவ் ரோடு, தோட்டப்பாளையம், ஆற்காடு ரோடு ஆகிய, பகுதிகளில் நுாற்றுக்கணக்கான, இ - டிக்கெட் புக்கிங் மையங்கள் முளைத்துள்ளன. இதில், பல மையங்களில் வழங்கப்படும், டிக்கெட்டுகள் போலியானதாக இருப்பதால், பயணியர் நடுவழியில் தவிக்கும் நிலையுள்ளது.இதுகுறித்து, காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:இ - டிக்கெட் சேவை மையத்தில், முன் பதிவு செய்த பின், வரும் குறுந்தகவல்களை, ஐ.ஆர்.டி.சி., இணைய தளத்தில் சென்று, சரி பார்க்க வேண்டும். இந்த தளத்தில், பி.என்.ஆர்., நம்பரை பதிவு செய்தாலே, அது ஒரிஜினலா, போலியா என தெரிய வரும். போலியானது என, தெரியவந்தால், எங்களிடம் புகார் செய்ததால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024