Wednesday, May 9, 2018

‘எனக்கு எஸ்.பியைத் தெரியும்!’ - ஈரோட்டில் மோசடி செய்த போலி நிருபர் மீது புகார்! 09.05.2018

நவீன் இளங்கோவன் ரமேஷ் கந்தசாமி

Erode:

போலீஸாரிடம் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, ஈரோட்டில் போலி நிருபர் ஒருவர், பொதுமக்களிடம் பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், வளையக்கார வீதி பகுதியைச் சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் மனு ஒன்றை ஏந்திவந்தனர். என்ன பிரச்னை என அவர்களிடம் பேசினோம். “எங்கள் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், ‘நான் பத்திரிகை ஒன்றில் நிருபராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு எஸ்.பி, கலெக்டர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நான் நினைத்தால் இலவச வீட்டுமனை, அரசு வேலை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகளை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக பெற்றுத்தர முடியும்’ எனக் கூறினார். மேலும், அதிகாரிகளைச் சரிக்கட்ட இலவச வீட்டுமனைக்கு 8 ஆயிரம் ரூபாய் ஆகுமென்றும், உதவித்தொகைகளைப் பெறுவதற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகுமெனக் கூறினார். முன்பணமாக 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். மோகன்ராஜின் மனைவியான கிரிஜாவும் எங்களிடம் இதுசம்பந்தமாக தொடர்ந்து மூளைச்சலவை செய்தார். எனவே, அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி நாங்கள் பணத்தைக் கொடுத்தோம்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகியும், மோகன்ராஜ் மற்றும் கிரிஜாவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. விசாரித்தபோது தான், அவர்கள் இதுபோன்று பலரிடமும் நிருபர் எனக்கூறி மோசடி செய்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, ‘போலீஸ்ல உள்ள பெரிய ஆளுங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்கதான். நான் நினைச்சா, அந்த அதிகாரிகளை வச்சி உங்க மேல பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளிடுவேன்’ என மிரட்டினார். எனவே, எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த மோகன்ராஜ் மற்றும் கிரிஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

போலி நிருபரான மோகன்ராஜ் ஈரோடு எஸ்.பி சிவக்குமார் மற்றும் டி.எஸ்.பி பலருடன் நெருக்கமாக எடுத்த போட்டோக்களைக் காட்டி பலரிடமும் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டியுள்ளார். ஏற்கெனவே இந்த மோகன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட போதும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கின்றனர். மோகன்ராஜ் போல ஈரோட்டில் பல போலி நிருபர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் பலரையும் மிரட்டி பணத்தை பறித்து வருகின்றனர். ஈரோடு எஸ்.பி இனியாவது இதனைக் கருத்தில் கொண்டு இந்தப் போலி நிருபர்களைக் களையெடுப்பாரா எனப் பார்ப்போம்.



இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சிவக்குமார் அவர்களிடம் பேசினோம். “பலபேர் தான் நிருபர் என என்னிடம் வந்து போட்டோ எடுத்துச் சென்று, இப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியான போலி நிருபர்கள் மீது வரும்காலங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...